காமராஜர் வழியில் தமிழக அரசு


காமராஜர் வழியில் தமிழக அரசு
x
தினத்தந்தி 22 Nov 2019 11:00 PM GMT (Updated: 2019-11-22T20:15:59+05:30)

பெருந்தலைவர் காமராஜர் யாருக்கும் கல்வி வசதி கிடைக்காமல் நின்றுவிடக்கூடாது என்ற காரணத்தால், ஏராளமான பள்ளிக்கூடங்களை தமிழ்நாட்டில் குறிப்பாக கிராமப்புறங்களில் தொடங்கினார்.

உலகில் எல்லா செல்வங்களுக்கும் மேலான செல்வமாக விளங்குவது கல்வி செல்வம்தான். அதனால்தான் சீனாவில் உள்ள ஒரு முதுமொழி, ‘நீ ஒரு ஆண்டைப்பற்றி எண்ணினால் நெல் சாகுபடி செய்; 10 ஆண்டுகளைப்பற்றி எண்ணினால் மரக்கன்றுகளை நடு; 100 ஆண்டுகளைப்பற்றி எண்ணினால் மக்களுக்கு கல்வி வழங்கு’ என்று கூறுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் இதுவரையில் இருந்த எல்லா அரசுகளும் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி இருக்கின்றன. ஒவ்வொரு முதல்–அமைச்சருக்கும் இதில் பங்களிப்பு இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் யாருக்கும் கல்வி வசதி கிடைக்காமல் நின்றுவிடக்கூடாது என்ற காரணத்தால், ஏராளமான பள்ளிக்கூடங்களை தமிழ்நாட்டில் குறிப்பாக கிராமப்புறங்களில் தொடங்கினார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு எல்லா கட்டமைப்பு வசதிகளும் இருக்கவேண்டும் என்பதற்காக, அவர் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு என்ற அதிகாரியுடன் இணைந்து பல திட்டங்களை தீட்டினார். அதில் ஒன்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அரசு தரும் வசதிகளோடு, உள்ளூர் மக்களின் பங்களிப்பும் இருக்கவேண்டும். உள்ளூர் மக்கள், மாணவர்களின் பெற்றோர், பழைய மாணவர்களிடம் அந்த பள்ளிக்கூடத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், மேஜை, நாற்காலி, பெஞ்சு, டெஸ்க், சுவர் கடிகாரம், பீரோ, மின்விசிறி, மின்சார விளக்குகள், வரைபடங்கள், புத்தகங்கள் போன்ற பல பொருட்களை நன்கொடையாகப் பெற்று, அதை அந்தந்த பகுதியில் நடக்கும் பள்ளிசீரமைப்பு மாநாட்டில் அந்தந்த பள்ளிக் கூடங்களுக்கென ஸ்டால்களில் வைத்துக்காட்ட ஏற்பாடு செய்தார். 

இத்தகைய பள்ளி சீரமைப்பு மாநாடு 1956–ல் தொடங்கப்பட்டது. 28.7.1958–ல் திசையன்விளையில் நடந்த மாநாட்டில் முதல்–அமைச்சர் காமராஜர் கலந்து கொண்டார். தொடர்ந்து கடம்பூர் உள்பட பல இடங்களில் நடந்த வட்டார பள்ளி சீரமைப்பு மாநாட்டில் அவரும், கல்வி மந்திரியாக இருந்த சி.சுப்பிரமணியம், நெ.து.சுந்தரவடிவேலு ஆகியோரும் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம், நாகலாபுரத்தில் நடந்த மாநாட்டில் பிரதமர் நேரு கலந்து கொண்டார். வேலூரில் நடந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி பாபு ராஜேந்திரபிரசாத் தலைமை தாங்கினார். இப்படி மிக வெற்றிகரமாக நடந்த பள்ளி சீரமைப்பு மாநாடுகள் தொடர்ந்து பல ஆண்டுகள் நடந்து காலப்போக்கில் தொய்வடைந்து நிறுத்தப்பட்டது. இப்போது பல பள்ளிக்கூடங்களில் போதுமான வசதிகள் இல்லை. ஒரு சில பள்ளிக்கூடங்களில் முன்னாள் மாணவர்கள் முன்வந்து உதவிகளை செய்கிறார்கள். சில கிராமங்களில் திருமணத்தின்போது சீர்வரிசை செய்வது போல, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான பொருட்களை நன்கொடை அளிக்கும் பெற்றோர்கள் அதை கையில் ஏந்திக்கொண்டு மாணவர்களோடு ஊர்வலமாக வந்து கொடுக்கிறார்கள். 

இந்தநிலையில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காமராஜர் பள்ளிசீரமைப்பு மாநாடு நடத்தியது போல, பள்ளிகல்வித்துறையின் கட்டுபாட்டில் செயல்படும் அரசு பள்ளிக்கூடங்களில் உள்கட்டமைப்பையும், பிற வசதியையும் மேம்படுத்துவதற்கு பொதுமக்களின் நன்கொடையை பெறுவதற்காக இணையவழி மூலம் நிதி திரட்டும் இணையதளத்தை (https://contribute.tnschools.gov.in) தொடங்கி வைத்தார். இதன்மூலம் பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் 2 சதவீத தொகையை, சமூக பொறுப்பு செயல்பாடுகளில் பயன்படுத்தவேண்டும் என்ற சட்டத்தின்படி, பள்ளிக்கூடங்களுக்கு இந்த இணையதளத்தின்மூலம் நிதி உதவி செய்யலாம். அதுபோல, பழைய மாணவர்கள், தன்னார்வலர்கள் போன்ற பலரும் இதன்மூலம் பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடை அளிக்க முடியும். இத்தகைய நிதி உதவிகளுக்கு வருமானவரி சலுகைகளையும் பெறமுடியும் என்பதால், நிறையபேருக்கு ஒரு ஆர்வத்தை இது ஏற்படுத்தும். எப்படி பள்ளிசீரமைப்பு மாநாடு வட்டாரந்தோறும் காமராஜர் காலத்தில் நடத்தப்பட்டதோ, அதுபோல இணையவழி நிதி திரட்டும் திட்டத்தையும் எல்லோருக்கும் தெரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநாடுகள் நடத்த கல்வித்துறை முன்வரவேண்டும். அந்தந்த பள்ளிக்கூட ஆசிரியர்களும், மாணவர்களும் இதில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும்.

Next Story