ஒரே இரவில் நடந்த அதிசயம்


ஒரே இரவில் நடந்த அதிசயம்
x
தினத்தந்தி 24 Nov 2019 10:30 PM GMT (Updated: 24 Nov 2019 12:00 PM GMT)

சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், 2021–ல் அற்புதமும், அதிசயமும் நடக்கும் என்று கூறினார். அப்போது அற்புதமும், அதிசயமும் நடக்குமா? என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், 2021–ல் அற்புதமும், அதிசயமும் நடக்கும் என்று கூறினார். அப்போது அற்புதமும், அதிசயமும் நடக்குமா? என்பதை காலம்தான் சொல்லவேண்டும். ஆனால், மராட்டியத்தில் ஒரே இரவில் அரசியல் அற்புதமும், அதிசயமும் நடந்துவிட்டது. அரசியல் அதிசயக்கூட்டணியை உருவாக்கும் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால், மராட்டியத்தில் ஏறத்தாழ ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த தேர்தலில் இருந்து பல அதிசயங்களும், அற்புதங்களும் அரங்கேறின. பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டணி வைத்து போட்டியிட்டன. இந்த தேர்தல் முடிவில் பா.ஜ.க. 105 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும், இதர கட்சிகளும், சுயேச்சைகளும் 29 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. 

இந்தநிலையில், பா.ஜ.க.வும், சிவசேனாவும்தான் ஆட்சி அமைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பேச்சுவார்த்தைகளும் நடந்தது. ஆனால், சிவசேனா சுழற்சி முறையில் முதல்–மந்திரி பதவி வேண்டும், 50:50 என்ற விகிதத்தில் அமைச்சரவை அமைக்கப்படவேண்டும் என்று கூறியதால், பா.ஜ.க.வாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. சிவசேனாவாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால், ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்தன. காங்கிரசுக்கு நேர் எதிர்கொள்கையை கொண்ட சிவசேனாவுடன் கூட்டணி வைக்க சோனியாகாந்தி முதலில் விரும்பவில்லை. ஆனால், இந்த வாய்ப்பை தவறவிட்டால் காங்கிரசுக்கு மராட்டியத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுவிடும் என்று கட்சிகாரர்கள் கூறி, அவரை சமாதானப்படுத்தினார்கள். கடந்த வெள்ளிக்கிழமை இந்த 3 கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரேயை முதல்–மந்திரியாகக் கொண்டு, 3 கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. மந்திரி சபையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தலா 15 மந்திரிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 12 மந்திரிகளும் பெறுவது என்றும் பேசப்பட்டது. 

கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் இந்த 3 கட்சி தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு சரத்பவார், உத்தவ்தாக்கரே முதல்–மந்திரி பதவி பொறுப்பேற்பார் என்று அறிவித்தார். பொதுவாக பால்தாக்கரே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பதில்லை. ரிமோட் கண்ட்ரோலைத்தான் வெளியே இருந்து கையில் வைத்துக் கொண்டு ஆட்சியை இயக்குவார்கள். முதல்முறையாக பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து உத்தவ்தாக்கரே முதல்–மந்திரியாக பொறுப்பேற்பார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. சனிக்கிழமை காலையில் பத்திரிகைகளில் இதுதான் தலைப்பு செய்தியாக இருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமை இரவு என்ன நடந்தது?, யார் முயற்சி எடுத்தார்கள்? என்று தெரியாத நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்துவிட்டது. முதல்–மந்திரியாக தேவேந்திர பட்நாவிசும், துணை முதல்–மந்திரியாக சரத்பவாரின் சகோதரர் மகனான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவர் அஜித்பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர். சரத்பவார் இந்த கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். சனிக்கிழமை மாலையிலேயே எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை சரத்பவார் கூட்டினார். 43 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சார்பில் இந்த பதவி ஏற்பு விழாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும்’ என்பது மராட்டிய அரசியலில் நிரூபணமாகிவிட்டது. ஏற்கனவே 11 சுயேச்சைகளின் ஆதரவை பெற்றுள்ள பா.ஜ.க., இப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவின் ஆதரவோடு 30–ந்தேதிக்குள் தன் பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்கவேண்டும். இன்னும் என்னென்ன அதிசயம் நிகழப்போகிறதோ!.

Next Story