‘நீட்’ தேர்வு தீர்மானம் மட்டும் போதாது


‘நீட்’ தேர்வு தீர்மானம் மட்டும் போதாது
x
தினத்தந்தி 25 Nov 2019 10:00 PM GMT (Updated: 25 Nov 2019 4:51 PM GMT)

2 ஆண்டுகளுக்கு பிறகு, அ.தி.மு.க. செயற்குழு – பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில தீர்மானங்கள் அ.தி.மு.க. கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பொதுமக்களிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

 கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மக்கள் வேண்டாம்... வேண்டாம்... என்று சொல்லியும் வேறு வழியில்லாமல், பிளஸ்–2 முடித்த மாணவர்களை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக எழுத நிர்ப்பந்தப்படுத்திய தேர்வு ‘நீட்’ தொடர்பான தீர்மானம் அதில் முக்கியமான ஒன்றாகும். 

தமிழ்நாட்டில் பெரும்பாலும் மாநிலக்கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் படிக்கிறார்கள். ‘நீட்’ தேர்வு மத்திய கல்வி திட்டத்தின்கீழ் கேட்கப்படும் கேள்விகளை அடிப்படையாக கொண்டது. எனவே, தமிழக மாணவர்களை பொறுத்தமட்டில், லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து, பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்களை தவிர, சாதாரணமாக கிராமப்புற பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களால் ‘நீட்’ தேர்வு எழுதி வெற்றிபெற முடியவில்லை. எனவே, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற குரல் பலமாக எழும்பி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் கொண்ட பெஞ்ச், இந்த ‘நீட்’ தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், வசதி படைத்தவர்கள் சிலர் ஆள்மாறாட்டம் செய்து வெற்றிபெற்ற செய்திகளும் வந்துள்ளன. தமிழ்நாட்டில்தான் இது கண்டுபிடிக்கப்பட்டதே தவிர, வெளிமாநிலங்களில் கண்டுபிடிக்கப்படவில்லை. இதை நீதி அரசர்களே ஆச்சரியமாக கோர்ட்டில் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.  

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழுவில் தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று மத்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, ‘‘மருத்துவ படிப்புக்கு மாணவர்களை தேர்வு செய்யும் ‘நீட்’ நுழைவுத்தேர்வு முறை பல குறைபாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. சமூகநீதி நிலைநாட்டப்படுவதற்கும், கிராமப்புற மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் தங்களுக்குரிய வாய்ப்புகளைப் பெறுவதற்கு இப்போதுள்ள ‘நீட்’ தேர்வு முறை தடைக்கல்லாய் அமைந்திருக்கிறது. எனவே, ‘நீட்’ நுழைவுத்தேர்வை முழுவதுமாக ரத்து செய்யவேண்டும். குறைந்தபட்சம் தமிழகத்தின் பல தனித்தன்மைகளைக் கருத்தில் கொண்டு, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது’’ என்று கூறப்பட்டுள்ளது. 

தீர்மானம்  நிறைவேற்றிய  வகையில்  நிச்சயமாக அ.தி.மு.க. பாராட்டத்தக்கது. ஆனால், வெறுமனே தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு உறுதியான மேல் நடவடிக்கை இல்லாமல் இருந்துவிடக்கூடாது. இந்த தீர்மானம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படாமல் காற்றிலே கலந்த கீதமாகிவிடக்கூடாது. ஏற்கனவே சட்டசபையில் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கேட்டு இருமுறை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டது. எந்த காரணமும் தெரிவிக்காமல் 2 மசோதாக்களையும் மத்திய அரசாங்கம் திருப்பி அனுப்பிவிட்டது. அந்த கசப்பான அனுபவத்தை மனதில் கொண்டு, இந்த முறை இந்தத் தீர்மானத்தின் மீது எந்த வகையான அழுத்தம் கொடுத்து இதை நிறைவேற்ற முடியும் என்பதை அ.தி.மு.க.வும், தமிழக அரசும் தீவிரமாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற கதவுகளை தட்டித்தான் தீர்வுகாண வேண்டும் என்றால், அதற்கும் தயங்கக்கூடாது. 2 முறை நமது முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. இந்த முறை எந்த வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்த வகையில் நடவடிக்கை எடுத்து ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்று தருவதில்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றியதற்கு அர்த்தம் இருக்கும்.

Next Story