வரிகளை குறைத்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கும்


வரிகளை குறைத்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கும்
x
தினத்தந்தி 26 Nov 2019 10:30 PM GMT (Updated: 2019-11-26T19:07:24+05:30)

உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சியில் ஒரு மந்தநிலை காணப்படுகிறது.

லகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சியில் ஒரு மந்தநிலை காணப்படுகிறது. இந்தியாவில் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகும், சரக்கு சேவை வரி அறிமுகப்படுத்தியதற்கு பிறகும், பொருளாதார வளர்ச்சியில் ஒரு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பொருளாதார வளர்ச்சி, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழிற்சாலைகளின் உற்பத்தி, சில்லரை வர்த்தகம் உள்பட பெரிய வியாபாரங்கள் என எல்லா துறைகளிலும் ஒரு வீழ்ச்சியான நிலைமை ஏற்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பும் குறைந்து வருகிறது. ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 72 ரூபாயை தாண்டிவிட்டது. பணவீக்கமும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த அக்டோபர் மாதத்தில் 4.62 சதவீதமாக இருந்தது. நுகர்வோர் விலைவாசி குறியீடு அடிப்படையில் இந்த 4.62 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்ததுதான். இப்போதே பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். பொருளாதார வீழ்ச்சி, உற்பத்தி வீழ்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணம் மக்களிடையே பணப்புழக்கம் இல்லாததுதான் என்று பரவலான கருத்து கூறப்படுகிறது. வேலைவாய்ப்பின்மையும் அதிகமாக இருக்கிறது. கிராம பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

தொழில்வளர்ச்சி வேலைவாய்ப்புகளை பெருக்குதல், கிராம பொருளாதாரம் குறிப்பாக விவசாய வளர்ச்சி இவையெல்லாமே இருந்தால்தான் பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், வரிகளை குறைத்தால் மக்களின் வாங்கும் சக்தி நிச்சயமாக அதிகரிக்கும். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 20–ந் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெரிய கம்பெனிகளுக்கான நிறுவனவரி குறைப்பை அறிவித்தார். 30 சதவீதம் இருந்த நிறுவனவரி 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து கூடுதல் வரிகளையும் சேர்த்தால் 25.2 சதவீதம் நிறுவன வரியாக கட்டவேண்டியது இருக்கும். ஆனால் இந்த வரிச்சலுகையானது, எந்தவித ஊக்கச்சலுகைகளும், விலக்குகளும் பெறாத நிறுவனங்களுக்குத்தான் அளிக்கப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க அரசு பல்வேறு சலுகைகளை, விலக்குகளை அளித்து வருகிறது. அந்த அடிப்படையில் நிறுவனங்கள் தொடங்கப்பட்ட நிலையில், இப்போது நிறுவனவரி குறைப்பு அவர்களுக்கு பொருந்தாது என்பதையும் அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். இதுபோல, புதிதாக தொடங்கும் கம்பெனிகளுக்கு நிறுவனவரி 25 சதவீதமாக இருந்தது, இப்போது 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேல்வரியும் சேர்த்து 17 சதவீதமாக இருக்கும். இந்த வரிகுறைப்பு நிச்சயமாக தொழில்முனைவோரை ஊக்குவிக்கும். 

இந்த நிலையில், அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசு நேர்முக மற்றும் மறைமுக வரிகளில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. வரிகளில் மாற்றம் மட்டும் இல்லாமல், வரி கட்டுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்குமாறு அனைத்து அமைச்சகங்களுக்கு மட்டுமல்லாமல், தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தனிநபர் வரி, வருமான வரி, நிறுவனவரி, உற்பத்திவரி, சுங்கவரி மற்றும் மறைமுகவரிகளில் என்னென்ன மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது என்ற விவரங்களை தெரிவிக்குமாறு மத்திய வருவாய்த்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டுமென்றால் நிச்சயமாக இதுபோன்ற நடவடிக்கைகள் தேவை. அரசு கதவை திறந்து வைத்திருக்கிறது. இப்போது அனைத்து அமைச்சகங்களும் தொழில் மற்றும் வர்த்தக சங்கங்கள், கூட்டமைப்புகள், சம்மேளனங்களும் உடனடியாக தங்கள் ஆலோசனைகளை, கருத்துகளை தெரிவிக்கவேண்டும். அரசும் மக்களின் வாங்கும் சக்தியையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் வகையில் வரிகளையும், உற்பத்தி செலவுகளையும் குறைத்தால் நிச்சயமாக விலைவாசி சரியும். விற்பனை அதிகரிக்கும். அதன் எதிரொலியாக உற்பத்தி அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி, வர்த்தக வளர்ச்சி பெருகினால் அரசின் வரிவருவாயும் பெருகும்.

Next Story