அரசு திட்டங்களில் பொதுமக்கள் பங்களிப்பு


அரசு திட்டங்களில் பொதுமக்கள் பங்களிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2019 10:30 PM GMT (Updated: 2019-11-27T19:14:17+05:30)

பொதுவாக அரசு தீட்டும் திட்டங்களை எல்லாம் நிர்வாகத்தில் அதிகாரிகளே நிறைவேற்றுகிறார்கள்.

பொதுவாக அரசு தீட்டும் திட்டங்களை எல்லாம் நிர்வாகத்தில் அதிகாரிகளே நிறைவேற்றுகிறார்கள். பொதுமக்களுக்கு நேரடியாக பலன் கொடுக்கும் திட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால் நிச்சயமாக அந்த திட்டங்கள் வெற்றிபெறும். தாங்களும் அந்த திட்டத்தின் செயல்பாட்டில் ஒரு அங்கம் என்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்படும்போது, அதன் செயலாக்கத்திலும் அவர்கள் பங்களிப்பு இருக்கும். அது உரியமுறையில் நிறைவேற்றப்படுகிறதா? என்று கண்காணிக்கும் பொறுப்பும் தங்களுக்கு இருக்கிறது என்ற உணர்வும் மக்களுக்கும் இருக்கும். அந்த வகையில்தான் பண்டைய காலங்களில் விவசாய நிலங்களில் அறுவடை நடக்கும்போது, ஊர்படி என்று ஒரு சிறிய பங்கை வாங்கிக்கொள்வார்கள். ஊர்பங்காக வரும் விளைபொருட்களை விற்று, அந்த ஊரில் உள்ள விவசாய கால்வாய்கள், மடைகள் செப்பனிடப்படும். இப்போது அந்தத்திட்டம் அப்படியே மங்கிப்போய்விட்டது. பொதுமக்களுக்கும் பங்களிப்பு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத்திட்டம், பள்ளி சீரமைப்பு போன்ற பல திட்டங்களில் பொதுமக்களை ஈடுபடச் செய்தார். 

கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்தபோது, 1997–98–ல் ‘நமக்கு நாமே’ என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் பொதுமக்கள் அவர்களே தங்களுக்கு என்ன திட்டங்கள், குறிப்பாக உள்கட்டமைப்பு வசதிகள் தேவை என்பதை தேர்வுசெய்து, அதை நிறைவேற்றுவதற்கான மொத்த செலவில் 3–ல் ஒரு பகுதி பணத்தை அரசுக்கு கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார். கலெக்டரிடமே இந்த தொகையை பொதுமக்கள் கட்டவேண்டும். அவர்கள் வசிக்கும் ஊரில் உள்ள பகுதிகளில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் கட்ட அரசு மீதித்தொகையை ஒதுக்கி செயல்படுத்தும் என்று உத்தரவிட்டார். இந்த திட்டம் மிக வெற்றிகரமாக நடந்தது. அதுபோல, தற்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின்கீழ் அதிகமான நீரை ஏரிகளில் சேமித்து வைத்து நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்கான நீரை வழங்குவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.  இதில் 90 சதவீத செலவுதொகையை அரசு வழங்கும். மீதமுள்ள 10 சதவீத செலவு தொகையை அந்தந்த பகுதி விவசாய சங்கங்கள், பாசன சபைகள், ஆயக்கட்டுதாரர்களின் உழைப்பு அல்லது பொருள் அல்லது பண பங்களிப்பாக பெறப்படுகிறது. 2016–17–ம் ஆண்டு 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் குடிமராமத்து திட்டம் மக்கள் பங்கேற்புடன் தொடங்கி வைக்கப்பட்டது. 30 மாவட்டங்களில் 1,513 ஏரிகளில் ரூ.93 கோடி செலவில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து 2017–18–ல் 20 மாவட்டங்களில் 1,511 சிறிய மற்றும் பெரிய ஏரிகளில் 329 கோடி ரூபாய் செலவில் பணிகள் நிறைவேற்றப்பட்டன. 

நடப்பு ஆண்டிலும் 1,829 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் 29 மாவட்டங்களில் ஏறத்தாழ 500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு நடந்து வருகின்றன. இதனால் ஏராளமான ஏரிகள், கால்வாய்கள், மதகுகள், அணைக்கட்டுகள் செப்பனிடப்பட்டு தூர்வாரப்பட்டுள்ளன. இதன்விளைவாக இந்த ஆண்டு மட்டும் 16 லட்சம் ஏக்கர் நிலத்தில் கூடுதலாக பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட குடிமராமத்து பணியினால் 16 லட்சம் ஏக்கர் கூடுதலாக சாகுபடி செய்யப்படும் என்றால், இன்னும் இந்த திட்டத்தை சாதாரண குக்கிராமங்கள் வரை கொண்டு சென்று தீவிரமாக செயல்படுத்தினால் நிச்சயமாக விவசாயத்தில் ஒரு வேளாண் புரட்சியை ஏற்படுத்தலாம். இவ்வாறு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளும்போது, தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீர்நிலைகளிலும் பச்சை போர்வை போர்த்தியதுபோன்று படர்ந்து இருக்கும் ஆகாயத்தாமரையை அகற்றுவதற்கும் அரசு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story