பலிக்காமல் போன பா.ஜ.க.வின் ராஜ தந்திரம்


பலிக்காமல்  போன பா.ஜ.க.வின்  ராஜ தந்திரம்
x
தினத்தந்தி 28 Nov 2019 10:30 PM GMT (Updated: 28 Nov 2019 1:39 PM GMT)

தொடக்கம் முதலே மராட்டியத்தில், தேர்தலுக்குப்பிறகு அரசியல் திருப்பங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் பஞ்சமே இல்லாமல் இருந்தது.

வர் போட்ட கணக்கு ஒன்று, அவர் போட்ட கணக்கு ஒன்று. எல்லாமே தவறானது என்பதுபோல, மராட்டியத்தில் அஜித்பவார் ஆதரவோடு ஆட்சியை அமைக்கவேண்டும் என்பதற்காக பா.ஜ.க போட்ட கணக்குகள், எடுத்த முயற்சிகள் எல்லாமே தவறாகிவிட்டன. தொடக்கம் முதலே மராட்டியத்தில், தேர்தலுக்குப்பிறகு அரசியல் திருப்பங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் பஞ்சமே இல்லாமல் இருந்தது. தேர்தலில் பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. எதிர்தரப்பில் தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் கூட்டணி வைத்து போட்டியிட்டன. இதில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணிக்குத்தான் அதிக இடங்கள் கிடைத்தன. என்றாலும் கருத்து வேறுபாட்டால் பா.ஜ.க.வினாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. சிவசேனாவினாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற நிலையில், ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்த சிவசேனா எதிர்தரப்புடன் கைகோர்த்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்கும் என்று கடந்த வாரம் 22–ந்தேதி மாலை முடிவெடுக்கப்பட்டது. 

முதல்–மந்திரியாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. அடுத்தநாள் காலையில், கவர்னரை சந்தித்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த இரவில் என்ன அதிசயங்கள் நடந்ததோ? தெரியவில்லை. யாரும் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்தன. நள்ளிரவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவர் அஜித்பவாருக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. 23–ந்தேதி அதிகாலை 5.47 மணிக்கு ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. பின்னர் காலை 7.50 மணிக்கு முதல்–மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்–மந்திரியாக அஜித்பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர். ஒருவார காலம் அவகாசம் கொடுத்து அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் அனுமதி கொடுத்திருந்தார். 

சிவசேனா–தேசியவாத காங்கிரஸ்–காங்கிரஸ் கூட்டணி ‘‘இது ஜனநாயக படுகொலை’’ என்று குரல் எழுப்பியது. அன்றே சுப்ரீம் கோர்ட்டில் கவர்னரின் முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்வதற்கு, கவர்னரின் பரிந்துரை, தனக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இருக்கிறது என்று தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த கடிதம் எல்லாவற்றையும் தாக்கல் செய்ய 24–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு எந்த தேதியில் அவையைக்கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்பதை 26–ந்தேதி அறிவிப்பதாக கூறியது. அஜித்பவாருடன் 2 எம்.எல்.ஏ.க்கள்தான் இருந்தனர். சிவசேனா கூட்டணி 162 எம்.எல்.ஏ.க்களை தன்கைவசம் இருப்பதை அணிவகுத்து காட்டியது. பா.ஜ.க. கணக்கு முழுமையாக தவறிப்போனது. அஜித்பவாருடன் நிறைய தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் வருவார்கள், ஆட்சி அமைக்கலாம் என்ற பா.ஜ.க.வின் ராஜதந்திரம் தோல்வி அடைந்தது. நவம்பர் 26–ந்தேதி காலையில் அஜித்பவார் துணை முதல்–மந்திரி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து 4 மணிக்கு முதல்–மந்திரி பதவியில் இருந்து கவர்னரிடம் 3 நாள் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இப்போது உத்தவ் தாக்கரே தலைமையில் மராட்டியத்தில் நேரும்–எதிருமான கொள்கைகளைக்கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு நேற்று ஆட்சி அமைத்தது. மக்கள் வாக்களித்தது பா.ஜ.க.–சிவசேனா கூட்டணிக்குத்தான் என்றாலும், ஆட்சி அமைப்பது சிவசேனா–தேசியவாத காங்கிரஸ்–காங்கிரஸ் கூட்டணிதான். இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா?, நீடிக்காதா? என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும். ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வந்த அரசியல் விளையாட்டு இப்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இது நீடிக்குமா? நீடிக்காதா? என்பது 3 கட்சிகளின் கையில் இருக்கிறது.

Next Story