‘‘வேண்டும், வேண்டும்; உள்ளாட்சி தேர்தல் வேண்டும்’’


‘‘வேண்டும், வேண்டும்; உள்ளாட்சி  தேர்தல்  வேண்டும்’’
x
தினத்தந்தி 29 Nov 2019 10:30 PM GMT (Updated: 29 Nov 2019 2:34 PM GMT)

தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அதிகாரிகள் இருந்தாலும், மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இருந்தால்தான் உடனடி தீர்வு காணமுடியும்.

மிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அதிகாரிகள் இருந்தாலும், மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இருந்தால்தான் உடனடி தீர்வு காணமுடியும். மக்களை பொறுத்தமட்டில், தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் அண்டை வீட்டுக்காரர்கள்போல இருக்கவேண்டும். எப்போது நினைத்தாலும் தங்கள் குறைகளை சொல்ல அவர் வீட்டு கதவை தட்டமுடியும் என்ற நிலை வேண்டும். அந்த பிரதிநிதியும் தங்கள் குறைகளையெல்லாம் நேரடியாக பார்வையிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் இருக்கிறது. ராஜீவ்காந்தி கொண்டு வந்த பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கு பிறகு அதிகாரங்கள், நிதி ஆதாரங்கள் எல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடைசியாக 2011–ம் ஆண்டுதான் தேர்தல் நடந்து இருக்கிறது. 

2016–ம் ஆண்டு அக்டோபர் 24–ந்தேதியோடு உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிகாலம் முடிந்துவிட்டது. அதற்கு முன்பே தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் தி.மு.க. சார்பில், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக தேர்தல் நிறுத்தப்பட்டு இருந்தது. தொடர்ந்து வார்டு மறுவரையறைகள் செய்யப்படவேண்டும் என்பது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தப்படாத நிலையில், மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெறவேண்டிய 7,829.78 கோடி ரூபாயை தமிழக அரசு இன்னும் பெற முடியவில்லை. தற்போது சுப்ரீம்கோர்ட்டு டிசம்பர் 13–ந்தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்துவதற்குரிய அனைத்து நடைமுறைகளையும் முடித்து தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது. மாநில தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கு தயாராகிவிட்டது. அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தையும் கூட்டி ஆலோசனைகளையும் பெற்றுவிட்டது. எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும் என்று மக்கள் மகிழ்ச்சியில் இருந்தபோது, அவர்கள் எண்ணத்தில் இடி விழுந்தது போல இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், உள்ளாட்சி அமைப்புகளில் துணைத்தலைவர் பதவிக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்று காரணத்தைக் கூறி, தேர்தல் அறிவிப்புக்கு தடைகேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.      தி.மு.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 9 மாவட்டங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளுக்கு மறுவரையறை இடஒதுக்கீடு மற்றும் சுழற்சி நடைமுறை முடிவு செய்யப்படவேண்டும் என்று கூறியுள்ளது. 

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2018–ம் ஆண்டு மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார். இப்போது சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. இருவருமே தேர்தலை நிறுத்த முயற்சி செய்கிறார்கள் என்று ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார்கள். புதிய மாவட்டங்களிலும் அதை பிரித்த மாவட்டங்களிலும் மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்தினால் பல நடைமுறை சிக்கல்கள் வரும் என்பது தி.மு.க.வின் கருத்து. ‘வேண்டும், வேண்டும், உள்ளாட்சி தேர்தல் வேண்டும்’ என்ற தீராத வேட்கையில் மக்கள் இருக்கிறார்கள். புதிய மாவட்டங்களில் மட்டும் மறுவரையறை செய்யப்படும்வரை உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் மற்ற மாவட்டங்களில் நடத்தலாம் அல்லது ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகரசபை மற்றும் புதிய மாநகராட்சிகளை தவிர்த்து, பழைய 12 மாநகராட்சிகளுக்கு முதலில் நடத்தலாம் என்பதுதான் ஓய்வுபெற்ற மாநில தேர்தல் ஆணைய ஆணையாளர்களின் ஆலோசனை. எல்லோருடைய கண்களும் இப்போது சுப்ரீம்கோர்ட்டை நோக்கித்தான் இருக்கிறது. நல்ல பதிலை சுப்ரீம்கோர்ட்டு தரும். உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story