தலையங்கம்

வெளிநாட்டு வெங்காயம் வேண்டும் + "||" + Have foreign onions

வெளிநாட்டு வெங்காயம் வேண்டும்

வெளிநாட்டு வெங்காயம் வேண்டும்
வெங்காயம் இல்லாமல், எந்த சமையலையும் செய்யமுடியாது என்றஅளவில், இல்லத்தரசிகளுக்கு இன்றியமையாத ஒன்று எதுவென்றால்? அது வெங்காயம்தான்.
ஏழை குடும்பங்களில் உணவுக்கு கூட்டாகவே பச்சை வெங்காயத்தை பயன்படுத்துவது உண்டு. அப்படியிருக்க, வெங்காயத்தின் விலை குறைவாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் ஒரு முக்கிய கடமையாகும். ஆனால் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை இதுவரை இல்லாதஅளவு உச்சத்தை எட்டி போய்க்கொண்டு இருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு முன்புதான் வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ எட்டியது. சென்னையில் நேற்று முன்தினம் சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.170-ஐ தொட்டது. பெரிய வெங்காயத்தில் நாசிக் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.90 வரை கோயம்பேடு மார்க்கெட்டிலேயே விற்கப்படுகிறது. சில்லரை கடைகளில் ரூ.100-ஐ தாண்டி விற்கப்படுகிறது. இந்த வெங்காயம்தான் அதிக நாட்கள் அழுகிப்போகாமல் இருக்கும். அடுத்து பெங்களூரு வெங்காயம் 2-ம் நிலை வெங்காயமாக கருதப்படுகிறது. இதன்விலை அதைவிட குறைவு. 3-வது ரகமாக ஆந்திரா வெங்காயம் கருதப்படுகிறது. இதன்விலை குறைவாக இருந்தாலும், வெகு சீக்கிரத்தில் அழுகிப்போய்விடும் என்றாலும், மக்கள் இப்போது மொத்தமாக வெங்காயம் வாங்குவதற்கு பதிலாக இந்த 3-ம் ரக வெங்காயத்தையே அவர்களின் தேவைகளுக்காக குறைந்த அளவு வாங்கிக்கொள்கிறார்கள்.


பொதுவாகவே காய்கறி கடை வைத்திருப்பவர்கள், வெங்காயத்தை 50 கிலோ கொண்ட சாக்கு மூட்டையில் வாங்குவார்கள். 30 சாக்கு வெங்காயம் வாங்கினால், ஏறத்தாழ 1½ லட்சம் ரூபாயை கையில் எடுத்துக்கொண்டு செல்லவேண்டியது இருக்கிறது. அடுத்து விளைச்சலும் குறைவாக இருக்கும் என்றநிலையில், இன்னமும் விலை ஏறிவிடும் என்று அஞ்சப்படுகிறது. தமிழ்நாட்டில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரையில் விற்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் 79 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்தான் இருக்கும்நிலையில் பெரும்பாலானோர் இந்த விலைக்கு வாங்கமுடியவில்லை. இந்தநிலையில், மத்திய அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இந்த வெங்காயத்தை மாநிலங்களுக்கு கிலோ ரூ.52 முதல் ரூ.55 வரையில் ஆந்திரா, மேற்குவங்காளம், ஒடிசா, கேரளா மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்கள் வாங்கிக் கொள்வதற்காக ஆர்டர் கொடுத்துள்ளநிலையில், மத்திய அரசாங்கம் அவர்களுக்கு 2 ஆயிரத்து 265 டன் வெங்காயத்தை உடனடியாக வினியோகிக்கப்போகிறது. எகிப்தில் இருந்து டிசம்பர் மாதத்தில் 6 ஆயிரத்து 90 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய இருக்கும் நிலையில், மத்தியஅரசாங்கம் அனைத்து மாநிலங்களிடமும் வெங்காயத்துக்கான ஆர்டர்களை கேட்டு இருக்கிறது. இந்த வெங்காயம் எந்தநேரத்திலும் மும்பை துறைமுகத்தில் வந்து இறங்கும் நிலை இருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை வாங்க ஆந்திரா, கேரளா ஆர்டர் கொடுத்து இருக்கும்நிலையில், தமிழகஅரசு இன்னும் ஆர்டர் கொடுக்கவில்லை. இன்னும் வெங்காயத்தின் விலை ஏறும் அபாயம் இருப்பதால், உடனடியாக மத்தியஅரசாங்கத்திடம் வெங்காயத்துக்காக தமிழ்நாட்டின் தேவைக்கு ஆர்டர் செய்யவேண்டும். சென்னை துறைமுகம், தூத்துக்குடி துறைமுகத்தில் வெங்காயம் இறக்குமதி செய்ய வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக வெளிநாட்டில் இருந்து மத்தியஅரசாங்கத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு வெங்காயம் இறக்குமதி செய்வதற்கான பணிகளை அரசு கவனிக்கவேண்டும். வெங்காயத்தை குறைந்தவிலையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்யவேண்டும். நமது மாநிலத்திலேயே நமது தேவைகளுக்கு வெளிமாநிலங்களை சார்ந்து இருக்காமல், வாய்ப்புள்ள இடங்களில் வெங்காயம் சாகுபடி செய்வதற்கான ஏற்பாடுகளையும், வெங்காயம் போன்ற அழுகும் பொருட்களை சேமித்து வைப்பதற்கான கிட்டங்கிகளை ஆங்காங்கு தொடங்கவும் ஏற்பாடு செய்யவேண்டும். இதுமட்டுமல்லாமல், தமிழகஅரசும் நேரடியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொள்ள மத்தியஅரசாங்கத்திடம் அனுமதி கேட்கலாமா? என்பதையும் பரிசீலிக்கவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

1. எய்ம்ஸ் மருத்துவமனை வருமா?, வராதா?
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும், ஆனால் வராது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுமோ? என்ற அச்சம், சந்தேகம், பொதுமக்களிடம் இப்போது வந்துவிட்டது.
2. பரவட்டும் இந்த மத நல்லிணக்கம்
எல்லா மதமும் சமமானது. என் மதத்தை போலவே, எல்லா மதங்களையும் மதிப்பேன். எதையும் குறைவாக நினைக்க மாட்டேன். மதங்கள் என்பது வழிபாட்டு முறைதான்.
3. மீண்டும் சர்ச்சைக்குள்ளாகிய ஹைட்ரோ கார்பன் திட்டம்
தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுஉலை திட்டம் என்றாலும் சரி, நியூட்ரினோ திட்டம் என்றாலும் சரி, சேலம்–சென்னை 8 வழிச்சாலை திட்டம் என்றாலும் சரி, ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றாலும் சரி எதிர்ப்பு குரல் எழும்புவது வாடிக்கையாகிவிட்டது.
4. இனி தங்கத்தை நம்பி வாங்கலாம்
ஆதிகாலத்தில் மனிதன் பணத்தை புழக்கத்தில் விடுவதற்கு முன்பே தங்கம் பல நாகரிகங்களில் ஒரு மதிப்பு வாய்ந்த உலோகமாக கருதப்பட்டது.
5. உங்கள் பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்?
ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டை நாட்டு மக்கள் அனைவரும் பெரிதும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். இந்த ஆண்டு பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் தொழில்அதிபர்கள், அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் உள்பட பல தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.