சுத்தமான குடிதண்ணீர் வேண்டும்


சுத்தமான குடிதண்ணீர் வேண்டும்
x
தினத்தந்தி 2 Dec 2019 9:45 PM GMT (Updated: 2 Dec 2019 5:05 PM GMT)

மனிதனுடைய வாழ்வு ஆரோக்கியமாக இருக்க முக்கியமாக தேவைப்படுவது சுத்தமான காற்றும், சுத்தமான தண்ணீரும்தான். ஆனால், இப்போது மக்களுக்கு இரண்டுமே சரியாக கிடைக்கவில்லையோ என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியிலேயே கடந்த பல நாட்களாக காற்று மாசுபட்டு மக்கள் முககவசம் அணிந்து செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் ஏற்படுகிற நிகழ்வாகவே இருக்கிறது. டெல்லியில் மட்டுமல்லாமல், சென்னையிலும் சில இடங்களில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்தாற்போல, தண்ணீரும் சுத்தமான தண்ணீராக பல இடங்களில் கிடைப்பதில்லை. இவ்வளவுக்கும் கடந்த சுதந்திரதினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி வைத்தவுடன் ஒரு உறுதிமொழி அளித்தார். ‘மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் கிடைப்பது எவ்வாறு என்பது அந்தத்திட்டம். ஒவ்வொரு வீட்டிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எவ்வாறு பெறுவது?. இதற்கு தீர்வாக வரும் ஆண்டுகளில் ஜல்-ஜீவன் இயக்கத்தை முன்னெடுத்து செல்வோம் என்று செங்கோட்டையில் இருந்து அறிவிக்கிறேன். இந்த ஜல்-ஜீவன் இயக்கத்தில் மத்திய-மாநில அரசுகள் கூட்டாக பணியாற்றும். வரும் ஆண்டுகளில் இந்த இயக்கத்துக்காக ரூ.3½ லட்சம் கோடிக்குமேல் செலவழிக்க உறுதிபூண்டுள்ளோம்’ என்று பேசியிருக்கிறார்.

ஆக, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்குவது என்பது மத்திய அரசின் முன்னுரிமை திட்டத்தில் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், சமீபத்தில் மத்திய நுகர்வோர் விவகாரத்துறையின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய நிறுவனம், இந்தியா முழுவதிலும் உள்ள 13 நகரங்களில் தண்ணீர் எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு நடத்தியது. மிகவும் அதிர்ச்சிதரத்தக்க முடிவு என்னவென்றால், காற்று மாசினால் அவதிப்படும் டெல்லியில்தான் பாதுகாப்பு இல்லாத குடிநீர் வழங்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. அதற்கு அடுத்தாற்போல் கொல்கத்தா நகரமும், 3-வது இடத்தில் சென்னை நகரமும் இருக்கிறது. மொத்தம் 19 அம்சங்களில் நடந்த சோதனையில், சென்னையில் 9 அம்சங்களில் தண்ணீரில் பாதுகாப்பற்றத்தன்மை இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் 10 இடங்களில் இந்த சோதனைக்காக சாம்பிள்கள் எடுக்கப்பட்டன. 10 சாம்பிள்களிலுமே தண்ணீர் மாசடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் மிக சுத்தமான தண்ணீர் வழங்கப்படுகிறது. அடுத்து புவனேஸ்வரம், ஐதராபாத்தில் வழங்கப்படுகிறது. மாசடைந்த குடிநீர் குடிப்பதால்தான் எல்லா நோய்களும் வந்துவிடுகிறது. சென்னை பெருநகர குடிநீர் வாரியம் இருக்கிறது. நீரேற்று இடங்களும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, சென்னையிலேயே பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படவில்லை என்றால், சாதாரண கிராமப்புறங்களில் மக்கள் எந்த அளவு சுத்தமான தண்ணீரை குடிப்பார்கள் என்பது நிச்சயமாக கேள்விக்குறிதான். நீரில் கடினத்தன்மை இருந்தால் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படவும், கற்கள் உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது. வயிற்றோட்டம், காலரா வருகிறது மற்றும் பல நோய்கள் வருகிறது என்று பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், இதற்கெல்லாம் மூலக்காரணம் தரமான, சுத்தமான தண்ணீர் வழங்கப்படாததுதான் என்பதை முழுமையாக புரிந்துகொண்டு, இதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும்.

மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளும் பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரில் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட தரகுறியீடுகள் இருக்கிறதா? என்பதை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று கூறியிருக்கிறது. எனவே அரசும், உள்ளாட்சிகளும் உடனடியாக மக்களுக்கு வழங்கும் தண்ணீரை சுத்தமான தண்ணீராக வழங்க தீவிர கவனம் செலுத்தவேண்டும். எல்லா இடங்களிலும் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் உள்ள தண்ணீரை ஆய்வு செய்து, அதில் உள்ள மாசுகளை தீர்க்க பில்டர் மூலமாகவோ, மருந்துகளை தெளித்தோ சுத்திகரிக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும்.

Next Story