தலையங்கம்

விரைவான விசாரணை; வேகமான நீதி + "||" + Rapid inquiry; Speedy justice

விரைவான விசாரணை; வேகமான நீதி

விரைவான விசாரணை; வேகமான நீதி
கடந்த மாதம் 28–ந்தேதி ஐதராபாத் புறநகர் பகுதியில் 26 வயது கால்நடை மருத்துவரான ஒரு இளம்பெண், 4 கொடியவர்களால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியாவையே வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
அரசு பணியில் உள்ள அந்த இளம் டாக்டர் தன் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில், ஒரு டாக்டரிடம் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சென்று இருக்கிறார். அவரது ஸ்கூட்டரை பஞ்சராக்கிவிட்ட குடிபோதையில் இருந்த 4 லாரி டிரைவர்கள், கிளீனர்கள் பஞ்சர் ஒட்ட உதவுவதுபோல ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டு, அந்த இளம் பெண்ணையும் அழைத்துக் கொண்டு சென்று இருக்கிறார்கள். ஆள் இல்லாத சுரங்கப்பாதையில் அவரை கற்பழித்துவிட்டு, பெட்ரோல் ஊற்றி தீவைத்தும் எரித்துக்கொலை செய்துவிட்டனர். இந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியனையும், ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்’ என்று வேதனைப்பட வைக்கிறது.

நாடாளுமன்றத்திலும் பெரும் கோபம் எதிரொலித்தது. ஜெயாபச்சன் பேசும்போது, இத்தகைய கொடியவர்களை விசாரணையின்றி பொதுமக்கள் முன்பு தூக்கிலிட்டு கொல்லுங்கள் என்ற ஆக்ரோ‌ஷமாக பேசினார். 2012–ம் ஆண்டு டெல்லியில் இதுபோல நிர்பயா என்ற இளம் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டபிறகு நாடு முழுவதும் இன்னமும் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எல்லோரும் இதுபோன்ற குற்றவாளிகளை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், நிர்பயா கொலை செய்யப்பட்ட பிறகு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில், குற்றவியல் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய நாடாளுமன்ற சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் போன்றவற்றில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் இப்போதே கடுமையான சட்டம் இருக்கிறது. ஆனால் சட்டம் இருக்கிறதே தவிர, அதை அமல்படுத்துவதில் ஏற்படும் மந்தமான நிலையில் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது. நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டும், இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 

ஐதராபாத் சம்பவத்தில் கூட குற்றவாளிகளை போலீஸ் காவலில் விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்ட நேரத்தில், பப்ளிக் பிராசிக்கூட்டர் இல்லாத நிலையில், கோர்ட்டு மூலம் உடனடியாக போலீஸ் காவலுக்கு அனுப்ப முடியாமல், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அந்த பெண்ணின் சகோதரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆனவுடன் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது சம்பவம் நடந்தது எங்கள் எல்லையில் இல்லை என்று வேறு போலீஸ் நிலையத்துக்கு போகச்சொல்லி அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், இப்படி ஒவ்வொரு சம்பவமும் நடக்கும்போதுதான் அதுபற்றி பேசுகிறோம், நடவடிக்கை எடுக்க குரல் எழும்புகிறது. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அரசும், சமுதாயமும் என்ன செய்கிறது? என்பதை யாரும் சிந்திப்பதில்லை. செல்போனில் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கும், குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்க வசதி ஏற்படுத்தவேண்டும் என்று நிர்பயா சம்பவத்தில் இருந்து பேசப்படுகிறது. அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.

இப்போது இந்த வழக்கை விசாரிக்க விரைவு கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆந்திராவில் வாரங்கல்லில் சிறு வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைவு கோர்ட்டு 56 நாட்களில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதுபோல, இந்த வழக்கிலும் சிறப்பு கோர்ட்டு விரைவான தீர்ப்பை வழங்கி, குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கவேண்டும். பொதுவாக இதுபோன்ற குற்றங்களில் இத்தனை நாட்களில் புலன்விசாரணை முடிக்கப்படவேண்டும். இத்தனை நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்ற காலநிர்ணயம் செய்தால்தான், விரைவான விசாரணையும், வேகமான நீதியும் கிடைக்கும்.