வெங்காயத்தில் தமிழ்நாடு தன்னிறைவு


வெங்காயத்தில் தமிழ்நாடு தன்னிறைவு
x
தினத்தந்தி 6 Dec 2019 10:00 PM GMT (Updated: 2019-12-06T19:40:49+05:30)

இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் வெங்காய விளைச்சல் வறட்சியால் அல்லது அதிக மழையால் பாதிக்கப்பட்டு, விலைவாசி விண்ணென்று எகிறிவிடுகிறது. ஒவ்வொரு முறையும் மத்திய அரசாங்கம் வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஆனாலும், வெங்காயத்தின் விலையை மத்திய, மாநில அரசுகளால் கட்டுக்குள் வைக்க முடியவில்லை.

சில பொருட்களின் விலை உயர்ந்தால், அதை பயன்படுத் தாமல் தவிர்த்துவிடலாம். ஆனால், சமையல் அறையில் எந்தவொரு உணவு பொருளை சமைத்தாலும், வெங்காயம் இல்லாமல் முடியாது. அந்த வகையில், ஏழையோ, பணக்காரரோ எல்லோருக்கும் வெங்காயம் ஒரு அத்தியாவசிய பொருளாகும். எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கியே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

தற்போது வெங்காயத்தின் விலை உயர்வு நாடாளு மன்றத்தில் கூட எதிரொலிக்கிறது. வெளிநாடுகளில் இருந்து அடுத்தடுத்து வெங்காயம் இறக்குமதி செய்யப் பட்டாலும், இன்னமும் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் நாளுக்கு நாள் விலை உயர்ந்துகொண்டே போகிறது. கிலோ ரூ.100–ஐ தாண்டினாலே மக்களால் தாங்க முடியாது. ஆனால், இப்போது பெரிய வெங்காயம் கிலோ ரூ.200–ஐ எட்டிவிட்டது. சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.180 ஆகிவிட்டது. இவ்வளவுக்கும் வெங்காயம் சாகுபடி பரப்பளவை உயர்த்தினால் நிச்சயமாக தேவையை பூர்த்தி செய்யமுடியும். விளைச்சல் நேரங்களில் அதை பதப்படுத்தி வைக்க பதப்படுத்தும் நிலையங்கள் நாடு முழுவதும் நிறைய இருக்கவேண்டும். வெங்காயத்துக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்து வினியோகிக் கலாம். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், ஒரு ஆண்டுக்கு தேவை 7 லட்சம் டன். ஆனால், இங்கு விளைவது 

 3 லட்சம் டன்தான். 

இந்த நிலையில், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் என்.சுப்பையன் ஆகியோர், தமிழ்நாட்டில் வெங்காயம் சாகுபடி பரப்பை அதிகரித்து விளைச்சலை பெருக்கி, தன்னிறைவு அடைய வைக்க எடுத்துள்ள நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது. தற்போது 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் வெங்காயம் விளைச்சல் நடக்கிறது. இந்த ஆண்டு மேலும் 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் புதுக்கோட்டை, தேனி, வேலூர், ஈரோடு, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற பல மாவட்டங்களில் மேற்கொள்ள நடவடிக்கை தொடங்கப் பட்டுள்ளது. வெங்காயம் சாகுபடிக்காக தேசிய விதைக் கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இலவசமாக விதைகளை கொடுக்கிறது. ஆண்டுக்கு இருமுறை வெங்காயம் சாகுபடி செய்யமுடியும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களிலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் வெங்காயம் சாகுபடி செய்யலாம். சின்ன வெங்காயத்தின் சாகுபடி காலம் 2 மாதங்கள். பெரிய வெங்காயத்தின் சாகுபடி காலம் 3 மாதங்கள். இதுதவிர, விவசாயிகளுக்கு சொந்தமான இடங்களில் மானியத்துடன் கூடிய 500 சேமிப்பு கிடங்குகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை எடுக்கும் இந்த நடவடிக்கைகள் மூலம் வெங்காயம் விளைச்சல் அதிகரித்தால், இனி மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய வேண்டியதில்லை. தன்னிறைவு பெற்ற மாநிலம் மட்டுமல்லாமல், தமிழக அரசாங்கத்தின் முயற்சி வெற்றி பெற்றால் வெளிமாநிலங்களுக்கு ஏன், வெளிநாடு களுக்கும், தமிழ்நாடு வெங்காயம் ஏற்றுமதி செய்யப் போகும் நாள் தூரத்தில் இல்லை. அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்திகொண்டு, வெங்காயம் விளைச்சலுக்கு உரிய நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளும் வழக்கமான பயிர் சாகுபடியை தாண்டி வெங்காயம் சாகுபடி செய்ய முன்வரவேண்டும். வெங்காயத்தைப்போல, தக்காளி விளைச்சலையும் ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை அடுத்த நடவடிக்கை எடுக்கப்போவது மிக மிக பாராட்டுக்குரியது. 

Next Story