ஜி.எஸ்.டி. உயர்வா; தாங்காது?


ஜி.எஸ்.டி. உயர்வா; தாங்காது?
x
தினத்தந்தி 8 Dec 2019 10:30 PM GMT (Updated: 8 Dec 2019 5:18 PM GMT)

பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. என்று கூறப்படும் சரக்கு சேவைவரியும், மக்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் உற்பத்திக்கும், வர்த்தகத்துக்கும், பொருளாதாரத்துக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

ண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. என்று கூறப்படும் சரக்கு சேவைவரியும், மக்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் உற்பத்திக்கும், வர்த்தகத்துக்கும், பொருளாதாரத்துக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. சரக்கு சேவைவரி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்ற விகிதங்களில் விதிக்கப்படுகிறது. அவ்வப்போது மத்திய நிதி மந்திரி, மாநில நிதி, வணிக வரித்துறை மந்திரிகள் கலந்துகொள்ளும் சரக்கு சேவைவரி கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது. தமிழக அரசு சார்பில் கலந்துகொள்ளும் அமைச்சர் ஜெயகுமார், பல பொருட்களின் வரியை குறைக்க கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், இத்தகைய கூட்டங்களில் சரக்கு சேவைவரியில் என்னதான் வரி சீர்திருத்தம் செய்தாலும், அரசு நிர்ணயித்துள்ள அளவுக்கு வசூல் இல்லை.

நவம்பர் மாதத்தில்தான் சரக்கு சேவைவரி வசூல் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 492 கோடி வசூல் ஆகி, சரக்கு சேவைவரி அமல்படுத்திய பிறகு இதுவரையில் உள்ள வசூலில் 3-வது அதிகமான வசூலாக அமைந்துள்ளது. இதை அமலுக்கு கொண்டுவந்த போதே இதனால் மாநிலங்களில் ஏற்படும் வரி இழப்புக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு 100 சதவீத இழப்பீடும், 4-வது ஆண்டில் 75 சதவீத இழப்பீடும், 5-வது ஆண்டில் 50 சதவீத இழப்பீடும் தரப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டது. ஆனால், மத்திய அரசாங்கத்திடம் இருந்து, மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு உரிய முறையில் வழங்கப்படவில்லை. நிறைய நிலுவையில் இருக்கின்றன. தமிழக அரசுக்கு மட்டும் 2017-18-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சரக்கு சேவைவரி ரூ.4,450 கோடியும், 2018-19-க்கு ரூ.505 கோடியும், 2019-20-க்கு ரூ.2,650 கோடியும், ஆக மொத்தம் ரூ.7,605 கோடி இழப்பீட்டு தொகை பாக்கி இருக்கிறது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் இந்த இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. உடனடியாக இழப்பீட்டு தொகையை வழங்காவிட்டால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக பஞ்சாப் அரசு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்த நிலையில், சரக்கு சேவைவரி வருமானத்தை அதிகரிப்பதற்காக 5 சதவீத வரியையும், 12 சதவீத வரியையும் முற்றிலுமாக எடுத்துவிட்டு, 9 அல்லது 10 சதவீத வரியை விதிப்பதற்காக மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 12 சதவீத வரிவிதிப்பில் உள்ள 243 பொருட்களை, 18 சதவீத வரிக்கு உட்படுத்தவும் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது.

இதுமட்டுமல்லாமல், இதுவரையில் வரி விதிப்புக்கு உட்படாத தனியார் மருத்துவமனையில் விலை உயர்ந்த சிகிச்சை, 1,000 ரூபாய்க்கு உட்பட்ட ஓட்டல் அறை வாடகை, உயர் மதிப்பிலான வீட்டு குத்தகை, பிராண்ட் செய்யப்படாத பன்னீர், கச்சாப்பட்டு, கள்ளு போன்ற பல பொருட்களுக்கு சரக்கு சேவைவரி வசூலிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வருகிற 18-ந் தேதி டெல்லியில் நடக்கும் 38-வது சரக்கு சேவைவரி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. 5 சதவீத வரிவிதிப்பில் உள்ள பொருட்களை 9 அல்லது 10 சதவீத வரிவிதிப்புக்கு கொண்டுவருவதும், 12 சதவீதத்தில் உள்ள பொருட்களை 18 சதவீத வரிவிதிப்புக்கு கொண்டுபோவதும், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அன்றாட செலவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வரி மாற்றங்களால் நிச்சயம் பொருட்களின் விலைவாசி உயரும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே விலைவாசி உயர்வால் தடுமாறிக்கொண்டிருக்கும் மக்களால், இந்த சம்மட்டி அடியை தாங்கமுடியாது. தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

Next Story