ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை மணி


ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை மணி
x
தினத்தந்தி 9 Dec 2019 10:00 PM GMT (Updated: 2019-12-09T23:04:54+05:30)

மத்திய, மாநில அரசுகள் பொருளாதார வளர்ச்சியிலும், விலைவாசியை குறைப்பதற்காக பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் மிகத்தீவிரமாக கவனம் செலுத்தவேண்டும் என்ற எச்சரிக்கை மணியை ரிசர்வ் வங்கி அடித்துள்ளது.

2 மாதத்துக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்த தாஸ் தலைமையில் 6 உறுப்பினர்களை கொண்ட நிதிக்கொள்கை குழு தனது ஆய்வு அறிக்கையை வெளியிடுகிறது. அப்போது வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது வழக்கம். ரிசர்வ் வங்கியில் இருந்து மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி ரெப்போ ரேட் என்றும், மற்ற வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் மாதங்களில் ரெப்போ ரேட் தலா .25 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆகஸ்டு மாதக்கூட்டத்தில் .35 சதவீதமும், தொடர்ந்து அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் மேலும் .25 சதவீதமும் குறைக்கப்பட்டது. அந்த வகையில், இந்த ஆண்டில் இதுவரை 1.35 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி 5.15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது பொருளாதாரம் மிகவும் மந்தநிலையில் இருப்பதையும், விலைவாசி உயர்வையும், குறைந்துவரும் மக்களின் வாங்கும் திறனை கணக்கில் கொண்டும் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்திலும் வட்டி விகிதம் மேலும் .25 சதவீதம் குறைக்கப்படும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் மீறி எந்தவித மாற்றமும் இல்லாமல், அதே 5.15 சதவீதம் ரெப்போ ரேட்டாகவும், 4.9 சதவீதம் ரிவர்ஸ் ரெப்போ ரேட்டாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரெப்போ ரேட் குறைவாக இருந்தால், பொதுமக்கள் வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களுக்கான மாதத்தவணையில் வட்டிவிகிதம் குறையும். மக்களுக்கு பெரிதும் பயன் கிடைக்கும். இது ஒருபுறம் இருக்க, நாட்டின் வளர்ச்சி விகிதம் முந்தைய நிதிக்கொள்கை கூட்டத்தில் 6.1 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்த நிலையில், உற்பத்தித்துறையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இப்போது 5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. அதேபோல, இப்போதுள்ள விலைவாசியை கருத்தில் கொண்டு, சில்லரை பணவீக்கமும் 4.7 சதவீதத்தில் இருந்து அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்த மாதம் மார்ச் வரையிலான அரையாண்டு காலகட்டத்தில் 5.1 சதவீதமாக இருக்கும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை அளித்துள்ளது. ஒரே ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தில் இருந்து இவ்வளவு பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உணவு பொருட்கள் குறிப்பாக வெங்காயம், தக்காளி போன்ற பல பொருட்களின் கிடுகிடு விலைவாசி உயர்வு பொதுமக்களுக்கு நிச்சயமாக பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார வளர்ச்சி பலவீனம் அடைந்துள்ளது. உற்பத்தியும் குறைந்துள்ளது என்பதுபோன்ற தகவல் களையும் ரிசர்வ் வங்கி கவலையோடு தெரிவித்துள்ளது.

கடந்த 39 மாதங்களில் இல்லாத அளவுக்கு உணவு பொருட்களின் விலைவாசி கடந்த நவம்பர் மாத கணக்குபடி, 6.9 சதவீதம் உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் பொதுமக்களின் வாங்கும் சக்தி மிக அதிகமாக குறைந்துவிட்டது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில், மத்திய அரசாங்கம் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும், உற்பத்தியை பெருக்கவும், கூடுதலாக முதலீடுகளை மேற்கொள்ளவும் மிகவும் முனைப்புடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அரசாங்கத்தின் வருமானம் குறைந்து, நிதிபற்றாக்குறை அதிகரிக்கும் சூழ்நிலையில், செலவுகளையும் குறைக்கவேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருக்கிறது. மொத்தத்தில், இப்போதைய நிலையில் மத்திய அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியில் மிகத்தீவிரமாக கவனம் செலுத்தவேண்டும் என்பதைதான் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு காட்டுகிறது.

Next Story