பெண்களுக்கு பாதுகாவலன் இந்த ‘காவலன்’ செயலி


பெண்களுக்கு பாதுகாவலன் இந்த ‘காவலன்’ செயலி
x
தினத்தந்தி 11 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-11T19:33:48+05:30)

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

 2012–ல் டெல்லியில் நிர்பயா என்ற இளம்பெண் காமுகர்களால் கதற கதற கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு மத்திய அரசாங்கம் உருவாக்கியுள்ள நிர்பயா நிதியில் இருந்து மாநில அரசுகள் பெண்கள் பாதுகாப்புக்காக வகுக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப் படுகிறது. அந்த வகையில் தமிழக அரசுக்காக 19 ஆயிரத்து 68 கோடியே 36 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 600 கோடி ரூபாய் தமிழக அரசு பயன்படுத்தி யதாக பயன்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்காக அனுமதிக்கப்பட்ட முழுத்தொகையையும் பெறவும், அதற்குரிய பல திட்டங்களை வகுத்து, அதற்கான முழுத்தொகையையும் செலவழிக்கவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

இந்த நிலையில், தமிழக காவல்துறையில் இப்போது பெண்கள் கையில் வைத்திருக்கும் செல்போன் மூலமாகவே ஆபத்து நேரங்களில் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கும், அவர்களது பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என்ற வரிசையில் மூவருக்கும் தகவல் கொடுக்க ‘காவலன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக ‘காவலன்’ செயலியை அனைத்து பெண்களும் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்தால் அவர்கள் செல்போனே ஆபத்து நேரங்களில் பாதுகாப்பு ஆயுதமாக மாறும். இந்த செயலியை அனைத்து ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்களிலும் பதிவிறக்கம் செய்ய முடியும். ஏதாவது ஆபத்து நேரங்களில் காவல்துறையின் அவசர உதவிக்கு அவசர நேரத்துக்கான எஸ்.ஓ.எஸ். பட்டனை ஒருமுறை தொட்டால் போதும் இல்லையெனில் 

3 முறை உதறினால் போதும். ஒரே நேரத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அபாய மணியும், மற்ற 3 எண்களுக்கு அவசர செய்தியும் சொல்லும். இதை பயன் படுத்தும் பெண்ணின் இருப்பிட தகவல்கள் மற்றும் அந்த இடத்தின் வரைபடம் போலீசார் உள்பட 4 எண்களுக்கும் தானாகவே பகிரப்படும். இதுமட்டுமல்லாமல், இந்த அவசரகால பட்டனை தொட்டவுடன் செல்போனில் உள்ள கேமரா தானாகவே 15 வினாடிகள் வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பிவிடும். அலை தொடர்பு இல்லாத இடங்களிலும் இந்த எச்சரிக்கை செய்தியை அனுப்பும் வசதி உள்ளது. 

சென்னை நகரில் இந்த ‘காவலன்’ செயலியை பெண்கள், முதியோர், சிறு குழந்தைகள் மத்தியில் பிரபலப்படுத்தும் முயற்சியில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இந்த பிரிவுக்கான துணை கமி‌ஷனர் எச்.ஜெயலட்சுமி ஆகியோர் தீவிர முயற்சி எடுத்துள்ளனர். சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ‘காவலன்’ செயலியை பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள். தொடங்கிய 2, 3 நாட்களிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இழைக்க முயற்சி செய்யப்படும் நேரத்திலேயே ‘காவலன்’ செயலி மூலம் அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள இந்த ‘காவலன்’ செயலி நிச்சயமாக வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது. போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, இந்த ‘காவலன்’ செயலி குறித்த விழிப்புணர்வை அனைத்து காவல் நிலையங்களில் உள்ள போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். சென்னை நகர போலீசாரை போல, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண்களும், முதியோர்களும், இளம்பெண்களும், சிறார்களும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசாரின் உதவிக் கரமான இந்த ‘காவலன்’ செயலியை பயன்படுத்த வேண்டும். ‘ஸ்மார்ட் போன்’ இல்லாதவர்கள் அவசர காலத்தில் 100, 1091, 1098 ஆகிய எண்களோடு தொடர்பு கொள்ளலாம் என்பதையும் விளம்பரப்படுத்த வேண்டும். ‘காவலன்’ செயலி போல பெண்கள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதியில் இருந்து மேலும் பல திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். 

Next Story