இலங்கை தமிழர்களுக்கும் இந்திய குடியுரிமை
நாடாளுமன்றத்தில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்க்கட்சிகளிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
1947–ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்ற பிறகு பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள், ஜெயின்கள், கிறிஸ்தவர்கள் போன்றோர் மத ரீதியிலான வேறுபாடுகள் காரணமாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு தஞ்சம்தேடி அகதிகளாக வந்தனர். எந்த ஆவணமும் இல்லாமல் இந்தியாவில் பல ஆண்டுகளாக வசித்துவரும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தேர்தலுக்கு முன்பே பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இந்த மசோதாவின்படி, இந்த நாடுகளில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல், இந்தியாவில் குடியிருந்து வரும் இந்த மக்கள் 6 ஆண்டுகள் வசித்து இருந்தாலே, இந்திய குடியுரிமை வழங்கலாம் என்பதே முக்கிய நோக்கமாகும். கடந்த 2014–ம் ஆண்டு டிசம்பர் 31–ந் தேதிக்கு முன்பு குடிபெயர்ந்து வந்த மேற்கண்ட மதங்களை சேர்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் இந்த குடியுரிமை மசோதாவின் கீழ் பயன்பெறமுடியாது என்பதுதான் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்ப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், அருணாசலபிரதேசம், சிக்கிம், திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் இப்போது பெரிய போராட்டம் நடந்து வருகிறது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது, சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்சில் இது நிற்காது என்பதால், சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்டப்போகிறோம் என்று எதிர்க்கட்சிகள் கூறிவந்த நிலையில், நேற்று இந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்தவுடன் காங்கிரஸ் கட்சியும் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது. இந்த மசோதாவின் மீது பேசிய தமிழக எம்.பி.க்கள் உள்பட பலர், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்திருக்கும் இலங்கை தமிழர்களுக்கும், மியான்மரில் இருந்து வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் குடியுரிமை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டி இருப்பது பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது.
இலங்கை தமிழர்களை பொறுத்தமட்டில், 1983–ம் ஆண்டு முதல் 3 லட்சத்து 4 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு தஞ்சம் கேட்டு வந்தனர். அவர்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இலங்கைக்கு திரும்பி சென்றுவிட்டார்கள். தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் 107 முகாம்களில் இருக்கின்றனர். இதில் தற்போது 59,595 பேர் வாழ்கிறார்கள். இவர்களைத்தவிர, 34,638 பேர் முகாம்களைவிட்டு வெளியே குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரின் முடிவுக்கு பிறகு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கே மீண்டும் போய்விட்டனர். மீதம் உள்ளோரில் வெகுசிலரை தவிர, மற்றவர்களெல்லாம் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து வாழ விரும்புகிறார்கள். நாங்கள் 3 தலைமுறைகளாக தமிழ்நாட்டில்தான் வாழ்கிறோம். இங்கேயே படித்து, இங்கேயே திருமணம் முடிந்து வேலைபார்க்கிறோம். எங்கள் பேரக்குழந்தைகள்கூட இங்குதான் படிக்கிறார்கள். எனவே, உணர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாகவே வாழும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. இந்திய குடியுரிமை இல்லாததால் பல இடையூறுகள் அவர்களுக்கு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் இந்த சட்டத்தில், இலங்கை தமிழர்களையும் சேர்த்து இருக்கவேண்டும். அவர்களை சேர்க்காமல் இருப்பது இந்த சட்டத்தில் ஒரு குறையாகவே கருதப்படுகிறது.
Related Tags :
Next Story