விவசாயிகளை வாடவைத்த வாழைப்பழம் விலை வீழ்ச்சி


விவசாயிகளை  வாடவைத்த வாழைப்பழம்  விலை  வீழ்ச்சி
x
தினத்தந்தி 13 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-13T20:29:57+05:30)

வாழை, ‘விவசாயிகளை வாழவும் வைக்கும், தாழவும் வைக்கும்’ என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. வாழை ஒரு பணப்பயிர்.

நன்றாக விளைந்து நல்ல விலை கிடைத்தால் விவசாயிகளின் பொருளாதார நிலையை வெகுவாக உயர்த்திவிடும். அவர்களின்  வாழ்க்கை  தரமே  உயர்ந்துவிடும்.  ஆனால்,  10 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை சாகுபடிக்காக அதிக பணம் செலவழித்து வாழையை வளர்த்து குலையை வெட்டும் வரையில் பல இடர்பாடுகளை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும். சாகுபடி காலம் முடியும் வரையில் 24 மணி நேரமும் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும். எப்போதும் தண்ணீர் வளத்தோடு இருக்கவேண்டும். பலத்த காற்று வீசினால் வாழைமரம் சாய்ந்துவிடும். பூச்சி தாக்குதல் வேறு. இப்படி பல இடர்பாடுளை கடந்துதான் வாழைத்தார் வெட்டவேண்டிய நிலை ஏற்படும். வாழை சாகுபடிக்காக வயல்களை திருத்தி, கன்று நட்டு வளர்ப்பதற்கு ஒரு மரத்துக்கு ரூ.100 முதல் 125 வரை செலவாகும் என்று விவசாயிகள் கருதுகிறார்கள். அதுதான் யதார்த்தமான நிலைப்பாடும்கூட. அப்படிப்பட்ட நிலையில், ரூ.200–க்கு மேல் ஒரு தாருக்கு விலை கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். 

ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி உள்பட தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் வசதி உள்ள இடங்களில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. செவ்வாழை, பூவன், பேயன், ரஸ்தாளி, கற்பூரவல்லி, மொந்தன், மலைவாழை, நாடு, கதலி, சக்கை, மோரீஸ், நேந்திரம் என்று பல ரகங்களில் வாழை பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு வாழைதாருக்கு உரிய விலை கிடைக்காததால், திருச்சி, தஞ்சாவூர், கரூர் உள்பட பல மாவட்டங்களில் வாழைத்தார் விவசாயிகளால் வெட்டி விற்பனைக்கு கொண்டுபோகப்படாமல், மரத்திலே பழுத்து அழுகிப்போகவிடப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஒருதார் ரூ.300–லிருந்து ரூ.400 வரை விற்பனையாகிக் கொண்டிருந்த பூவன் பழம், இப்போது ரூ.30–க்கு விற்கப்படுகிறது. வாழைத்தார் வெட்டுவதற்கு கூலி, அதை எடுத்துக்கொண்டு மார்க்கெட்டுக்கு செல்லும் செலவு இதையெல்லாம் கணக்கிட்டால் ரூ.50–க்கு மேல் ஆகிவிடுகிறது. எனவே, கூலி கொடுத்து மார்க்கெட்டுக்கு கொண்டுபோகும் செலவுகூட இப்போது தார் வெட்டுவதால் பெற முடியவில்லையே என்ற நிலையில்தான் வாழைத்தார் வெட்டாமல் அப்படியே விட்டுவிட்டோம் என்று கண்ணீர்மல்க கூறுகிறார்கள். இதோடு விவசாயிகளின் செலவு முடிந்துவிடுவதில்லை. அந்த வாழைமரத்தின் பக்க கன்றுகளை வைத்துதான் மறுபடியும் வாழை சாகுபடி செய்யமுடியும். ஆனால் சாகுபடி செலவுகளில் பெரிய மாற்றம் இருக்காது அல்லது நெல் போன்ற வேறு பயிர்களை பயிரிடவேண்டுமென்றால், வயலை சீர்திருத்தி, உழுது சரிசெய்யவேண்டிய நிலை ஏற்படும். ஆக, அதற்கும் அதிக செலவு ஆகும். 

கஷ்டப்பட்டு விளைவித்த பொருட்களை அறுவடை செய்து விற்க உரிய விலை கிடைக்காமல் அழுகிவிடவைக்கும் நிலை ஏற்படுவது ஏற்புடையதல்ல. இந்த ஆண்டு பரவலாக நல்ல மழை பெய்ததால் விளைச்சல் அதிகம். அந்த அளவுக்கு தேவை இல்லை. விவசாயிகளிடம் இருந்து அரசே குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்து சத்துணவு கூடங்களில் வழங்கலாம். வாழைப்பழத்தின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஆங்காங்கு பரவலாக தனியார் தொடங்குவதை ஊக்குவிக்க நிறைய சலுகையை வழங்க வேண்டும். வாழைத்தார் வெட்டினால் ஒரு வாரம் வரைதான் அழுகாமல் வைத்துக் கொள்ளமுடியும். குளிர்பதன கிடங்குகளில் வைக்க வாய்ப்பு இல்லை. இப்போது வாழைசாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்குவது குறித்தும் அரசு பரிசீலிக்கவேண்டும். தற்காப்பு இல்லாத வாழை சாகுபடியை பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கவேண்டும் என்கிறார் தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் கூட்டமைப்பு பொது செயலாளர் அஜித்தன்.

Next Story