பிரிட்டனின் மோடி வெற்றி


பிரிட்டனின் மோடி வெற்றி
x
தினத்தந்தி 16 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-16T22:31:17+05:30)

கடந்த வாரம் இங்கிலாந்து நாட்டில் நடந்த தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2-வது முறையாக மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். அங்குள்ள ‘ஹவுஸ் ஆப் காமன்ஸ்’ என்று அழைக்கப்படும் 650 உறுப்பினர்களைக்கொண்ட மக்களவையில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

1987-ம் ஆண்டு மார்க்ரெட் தாட்சர் பெற்ற வெற்றிக்கு பிறகு இதுதான் கன்சர்வேட்டிவ் கட்சியின் மிகப்பெரிய வெற்றியாகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட லேபர் கட்சி என்று அழைக்கப்படும் தொழிலாளர் கட்சி ஜெரேமி கோர்பின் தலைமையில் போட்டியிட்டது. இந்தக்கட்சி 233 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

1935-ம் ஆண்டுக்கு பிறகு தொழிலாளர் கட்சி அடைந்த மிகமோசமான தோல்வி இது. இந்த தோல்விக்கு பிறகு கோர்பின், “இனி நான் தலைமையேற்று தேர்தலில் போட்டியிடப்போவதில்லை” என்று அறிவித்துள்ளார். இதில், குறிப்பிடத்தக்க தோல்வி என்னவென்றால், பாரம்பரியமாக தொழிலாளர் கட்சி வலுவாக உள்ள பல இடங்களில், அந்த வாக்காளர்கள் எல்லாம் முதல் முறையாக கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஓட்டு போட்டிருப்பது ஜெரேமி கோர்பினுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் 15 லட்சம் இந்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் போரீஸ் ஜான்சனை “பிரிட்டனின் மோடி” என்று அழைக்கிறார்கள். “பிரதமர் நரேந்திரமோடியைப் போல இங்கிலாந்து பிரதமர் பிரபலமாக இல்லை. ஆனால், கருத்தியல் ரீதியாக இருவரும் ஒன்றுபோல இருப்பதால் இப்படி கூறுகிறோம்” என்று இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் கூறுகிறார்கள். இந்தத்தேர்தலில் இந்தியர்களின் முக்கியத்துவத்தை அறிந்த போரிஸ் ஜான்சன் தொடக்கத்தில் இருந்தே, இந்திய வம்சாவளியினரின் ஓட்டுகளை ஈர்க்க பெரும் முயற்சி செய்துவந்தார். அவரது முதல் மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இப்போதுள்ள வாழ்க்கை துணைவியை அழைத்துக்கொண்டு, நீஸ்டனில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலுக்கு சென்றார். அவருடைய வாழ்க்கை துணைவி சேலை கட்டிக்கொண்டு சென்றார். அங்கு போரிஸ் ஜான்சன் தனது பேச்சை, நரேந்திரா பாய் (சகோதரர் நரேந்திரமோடி) என்று தொடங்கியதுடன், தான் பிரதமர் நரேந்திரமோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாக தெரிவித்தார். இங்கிலாந்து நாட்டின் வளர்ச்சிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 லட்சம் மக்களின் கணிசமான பங்களிப்பு இருக்கிறது என்றும் கூறினார். 28 ஐரோப்பிய நாடுகளை ஒன்றாக இணைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்ற பொருளில், பிரெக்சிட்டை அடிப்படையாக வைத்தே போரிஸ் ஜான்சன் போட்டியிட்டார். ஜனவரி 31-ந்தேதிக்குள் இதை மேற்கொள்ளவேண்டும் என்று ஏற்கனவே காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தத்தேர்தலில், தொழிலாளர் கட்சி ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் வீணாக தலையிட்டு பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடை எடுத்தது என்பதுதான் தொழிலாளர் கட்சிக்கு எதிர்ப்பாக இங்கிலாந்துவாழ் இந்தியர்கள் எடுத்த முடிவுக்கு முக்கிய காரணமாகும்.

இந்தத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியில் 7 இந்தியர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இதில், 2 அல்லது 3 பேர்கள் மந்திரிகளாக பொறுப்பேற்க வாய்ப்பு இருக்கிறது. இதுபோல, தொழிலாளர் கட்சியிலும் 7 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். தொழிலாளர் கட்சியில் தற்போதைய தலைவர் ஜெரேமி கோர்பின் பதவிவிலகும் முடிவை அறிவித்துவிட்டதால், அவருக்கு பதிலாக இந்தத்தேர்தலில் தொழிலாளர் கட்சி எம்.பி.யாக வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த லிசா நந்தி என்ற பெண் அந்த கட்சியின் தலைவராக போட்டியிட முடிவு செய்துள்ளார். ஆக இங்கிலாந்து நாட்டில் ஆளும்கட்சியிலும், இந்திய வம்சாவளியின் ஆதிக்கம் இருக்கிறது. எதிர்க்கட்சியிலும் இந்திய வம்சாவளியினரின் பலம் இருக்கிறது. இதை பயன்படுத்தி அவர்கள் இந்தியாவுடனான நல்லுறவை வளர்ப்பதற்கும், வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும், இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதற்கும் பாடுபடவேண்டும் என்பதுதான் இங்குள்ள இந்திய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story