குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்


குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்
x
தினத்தந்தி 17 Dec 2019 10:30 PM GMT (Updated: 2019-12-17T19:40:37+05:30)

இஸ்ரோ தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த கே.சிவன் பொறுப்பேற்றது, தமிழர்களுக்கு எல்லாம் பெருமையை அளிப்பதாக இருக்கிறது.

ஸ்ரோ தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த கே.சிவன் பொறுப்பேற்றது, தமிழர்களுக்கு எல்லாம் பெருமையை அளிப்பதாக இருக்கிறது. நம் நாட்டு விஞ்ஞானிகளில் மறைந்த டாக்டர் அப்துல்கலாமை தொடர்ந்து பல தமிழக விஞ்ஞானிகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் முத்திரை பதித்துள்ளனர். கே.சிவன் இப்போது தமிழ்நாட்டுக்கு ஒரு ராக்கெட் ஏவுதளம் தரும் பணியையும் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார். இந்தியாவில் 2 ராக்கெட் ஏவுதளங்கள் இருக்கின்றன. இந்த இரண்டுமே ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ளது. இதுதவிர, கேரளா மாநிலம் தும்பாவில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் இருக்கிறது. எல்லாத்தொழில்களும் தமிழ்நாட்டில் இருக்கும் நேரத்தில், ராக்கெட் ஏவுதளம் இல்லையே என்ற குறை வெகுவாக இருந்தது. ராக்கெட் ஏவுதளத்துக்கு குலசேகரபட்டினம் மிகவும் பொருத்தமான இடம். ஏனெனில், குலசேகரபட்டினம் கடலோரத்தில் இருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டா பூமத்திய ரேகையில் இருந்து 13.43 டிகிரியில் இருக்கிறது. ஆனால், குலசேகரபட்டினம் 8 டிகிரியில்தான் இருக்கிறது. இதன்மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்படுத்த முடியாத ஒரு செயல்பாட்டை, குலசேகரபட்டினத்தில் செய்யமுடியும். குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட்டை தெற்கு திசையில் நேர்பாதையில் செலுத்தமுடியும். இங்கிருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலமாக எடை குறைந்த செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த முடியும். 

மேலும் குலசேகரபட்டினம் அருகில் உள்ள மகேந்திரகிரியில்தான் ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருளை நிரப்பும் மையம் இருக்கிறது. சர்வதேச விண்வெளி விதிமுறைகளின்படி, ஒரு நாடு ஏவும் ராக்கெட், இன்னொரு நாட்டின் மீது பறக்கக்கூடாது. ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் அனைத்தும் இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகளின் மீது பறப்பதை தவிர்க்க, தென்கிழக்கு திசையில் ஏவப்பட்டு, பின்னர் கிழக்கு நோக்கி திருப்பப்படுகிறது. இதனால் ராக்கெட்டின் பயணதூரம் பல கிலோ மீட்டர் அதிகரித்து எரிபொருள் செலவு கூடுகிறது. குலசேகரபட்டினத்தில் இருந்து செலுத்தப்பட்டால் நேர்பாதையில் செல்லும் என்பதால் எரிபொருளும் மிச்சமாகும். பயணதூரமும் குறையும். அதேபோல், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுக்கு 4 அடுக்குகள் தேவைப்படுகிறது. ஆனால், குலசேகரபட்டினத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுக்கு 3 அடுக்குகளே போதுமானது. குலசேகரபட்டினத்தில் ராக்கெட் தளம் அமைக்க மறைந்த முதல்–அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கனிமொழி எம்.பி. ஆகிய எல்லோரும் முயற்சி எடுத்து இருக்கிறார்கள். இஸ்ரோ தலைவர் சிவன் இதற்காக பல ஆண்டுகளாகவே முயற்சி எடுத்து வந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் மாநிலங்களவையில் மத்திய அணு எரிசக்தி மற்றும் விண்வெளித்துறை மந்திரி ஜிதேந்திர சிங், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்று ஒரு நல்ல செய்தியை தெரிவித்தார். தமிழக அரசின் சார்பில் இதற்காக 2,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. இந்த நிலம் எல்லாம் மாதவன்குறிச்சி, படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி ஆகிய கிராமங்களில் உள்ளடக்கிய பகுதிகளில் இருக்கிறது. இதில், 1,650 ஏக்கர் பட்டா நிலம். 131 ஏக்கர் புறம்போக்கு நிலம். 27 குடும்பங்கள் வாழும் கூடல்நகர் குடியிருப்பில் உள்ள வீடுகள்தான் அகற்றப்படவேண்டிய கட்டாயம் ஏற்படும். அவர்களுக்கு எல்லாம் மாற்று இடங்களில் நிலமும் வழங்கி, வீடுகளும் கட்டிக்கொடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து இருக்கிறார். உலகிலேயே பிரெஞ்சு கயனாவுக்கு அடுத்தபடியாக, குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்தான் சிறந்த இடமாக கருதப்படுகிறது. தமிழக அரசு வேகமாக பணிகளை தொடங்கிவிட்டது. 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 20 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும், வேலைவாய்ப்பும் அளித்து, தமிழக அரசுக்கு வருவாயையும் ஈட்டித்தந்து, தமிழ்நாட்டின் புகழையும் மேலும் உயர்த்திப் பிடிக்கப்போகிறது, குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்.

Next Story