தாங்க முடியாத விலைவாசி உயர்வு


தாங்க முடியாத விலைவாசி உயர்வு
x
தினத்தந்தி 18 Dec 2019 10:30 PM GMT (Updated: 2019-12-18T19:23:54+05:30)

சமையல் அறையில் இல்லத்தரசிகள் வெங்காயத்தை உரிக்கும்போது அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வடிவது இயற்கை.

மையல் அறையில் இல்லத்தரசிகள் வெங்காயத்தை உரிக்கும்போது அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வடிவது இயற்கை. ஆனால் இப்போது வெங்காயம் நாட்டின் பொருளாதாரத்தையே அழவைத்துவிட்டது. அந்த அளவுக்கு வெங்காயத்தின் விலை விண்ணென்று உயர்ந்துவிட்டது. வெங்காயத்தின் விலை மட்டுமல்லாமல், காய்கறிகள், பருப்பு வகைகள் உள்பட அனைத்து மளிகை பொருட்களின் விலையும் மிக அதிகமாக உயர்ந்துவிட்டது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவு உணவு பொருட்களின் பணவீக்கம் அதாவது, உணவு பொருட்களின் விலைவாசி 11.1 சதவீதமாக உயர்ந்துவிட்டது. 12 அத்தியாவசிய மருந்துகளின் விலையும் 50 சதவீதம் உயர்ந்துவிட்டது. மத்திய அரசு புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், காய்கறிகளின் விலைவாசி 45.3 சதவீதமும், பருப்பு வகைகளின் விலைவாசி 14 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் உணவு பொருட்களின் பணவீக்கம் 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இன்றுவரை, 6 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க உயர்வு என்றால், கடந்த அக்டோபர் மாதம் 7.89 சதவீதம்தான் உணவு பொருட்களின் பணவீக்கம் இருந்தது. சில்லரை பணவீக்கத்தை, இந்த உணவு பொருட்களின் விலை உயர்வு 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வகுத்த கணக்குப்படி, சில்லரை பணவீக்கம் 4 சதவீத அளவுக்குள் இருந்தால் நல்லது. ஆனால், தற்போது 5.54 சதவீதமாக இருக்கும் பணவீக்கம், இன்னும் சிலநாட்களில் 5.8 சதவீதம் முதல் 6 சதவீதம்வரை உயரும் அபாயமும் இருக்கிறது. 

எனவே, இப்போதுள்ள விலைவாசியை மக்கள் தாங்க முடியாமல் தவிக்கிறார்கள். பற்றாக்குறை உள்ள வருமானம் கொண்ட வருவாயில் இந்த விலைவாசி உயர்வை தாங்கும் சக்தி பெரும்பாலான மக்களுக்கு இல்லை. பொதுவாக ஆங்கிலத்தில் ‘டிமாண்ட் அண்டு சப்ளை’ என்பார்கள். தேவை எவ்வளவு இருக்கிறதோ, அந்த அளவுக்கு பொருட்களின் வினியோகமும் இருந்தால்தான் விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர முடியும். அந்த வி‌ஷயத்தில் எல்லா பொருட்களும் ஆண்டுக்கு எவ்வளவு தேவை என்று கணக்கெடுத்து, அந்த அளவுக்கு உற்பத்தியை அதிகரிக்க விவசாயத்துறையையும் தீவிர நடவடிக்கை எடுக்கச்சொல்லி வலியுறுத்தவேண்டும். சரி, விலைவாசிதான் இவ்வளவு அதிகமாக இருக்கிறதே என்று கவலைப்பட்டால், அடிக்குமேல் அடியாக தொழில் வளர்ச்சியும் தொடர்ந்து 3 மாதங்களாக குறைந்துகொண்டே போகிறது. அரசு வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, தொழிற்சாலைகளின் உற்பத்தி கடந்த மாதம் 3.8 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் தொழில் உற்பத்தி 8.4 சதவீதமாக உயர்ந்திருந்தது. இதுபோல உற்பத்தியும் கடந்த ஆண்டு 8.2 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில், இப்போது 2.1 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதுபோலத்தான் மின்சார உற்பத்தி, சுரங்க பொருள் உற்பத்தி என்று எல்லாமே வெகுவாக குறைந்துள்ளது. 

ஒருபக்கம் பணவீக்கம், மற்றொரு பக்கம் தொழில் உற்பத்தி இரண்டுமே குறைந்துள்ள நிலையில், இந்திய பொருளாதாரம் தட்டுதடுமாறி நடக்க தொடங்கிவிட்டது. ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், இதுபோல தொழில் உற்பத்தி குறைந்து வந்தால், அது இன்னும் அதிக அளவில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட வழிவகுத்துவிடும். விலைவாசியை குறைக்கவும், தொழில் உற்பத்தியை அதிகரிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் நீண்டகால திட்டத்தை வகுத்து மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஒரு வளர்ச்சி நிலையை உருவாக்க மத்திய அரசு பாடுபடவேண்டும். இப்போதுள்ள நிலையில், மற்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை ஓரம் கட்டிவிட்டு, இதில் தீவிர கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்தால்தான், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

Next Story