டிரம்ப் பதவி தப்பிவிடுமா?


டிரம்ப் பதவி தப்பிவிடுமா?
x
தினத்தந்தி 19 Dec 2019 10:30 PM GMT (Updated: 19 Dec 2019 1:38 PM GMT)

அமெரிக்காவின் 45–வது ஜனாதிபதி டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவராக விளங்குகிறார்.

மெரிக்காவின் 45–வது ஜனாதிபதி டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவராக விளங்குகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்று இருபெரும் கட்சிகள் இருக்கின்றன. டிரம்ப் குடியரசு கட்சியை சேர்ந்தவர். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியில் ஜோ பிடன் போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜோ பிடனுக்கு களங்கம் ஏற்படுத்திவிடவேண்டும் என்ற நோக்கத்தில், அவரது மகன் ஹண்டருக்கு சொந்தமான உக்ரைன் நாட்டில் உள்ள நிறுவனம் மீது ஊழல் விசாரணை நடத்தவேண்டும் என்று டிரம்ப் நெருக்கடி கொடுத்தார் என்றும், இதை செய்தே ஆகவேண்டும் என்று வலியுறுத்துவதற்காக அந்த நாட்டுக்கான ராணுவ நிதி உதவியை டிரம்ப் நிறுத்தி வைத்துவிட்டார் என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் காரணமாக டிரம்ப் பதவி விலகவேண்டும் என்று ஜனநாயக கட்சியின் சார்பில் கோ‌ஷம் எழுப்பப்பட்டு வருகிறது. 

இந்திய நாடாளுமன்றத்தில் எப்படி மக்களவை, மாநிலங்களவை என்று இருக்கிறதோ, அதுபோல அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் அவை என்றும், செனட் என்றும் இரு அவைகள் இருக்கின்றன. இதில், டிரம்பை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று பிரதிநிதிகள் அவையில் ஜனநாயக கட்சி கொண்டுவந்த தீர்மானம் நேற்று நிறைவேறியது. இதன் காரணமாக டிரம்ப் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், செனட்டில் மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு கிடைத்தால்தான் அவர் பதவி விலகவேண்டும். ஆனால், தற்போது டிரம்பின் குடியரசு கட்சிக்கு 53 இடங்களும், ஜனநாயக கட்சிக்கு 45 இடங்களும், 2 சுயேச்சைகளும் இருக்கின்றன. ஜனநாயக கட்சியில் ஒருசில உறுப்பினர்கள் டிரம்ப்புக்கு ஆதரவாக ஓட்டு போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்பின் மீது விசாரணை நடத்தவேண்டும் என்று செனட் முடிவு எடுத்தால்கூட அது எளிதான காரியம் அல்ல. ஏனெனில், அமெரிக்க அரசியல் சட்டத்தில் ஜனாதிபதியை தண்டிக்க என்ன நடைமுறையை பின்பற்றவேண்டும் என்று தெளிவாக இல்லை. முதலில் அவையில் அது சம்பந்தமான நடைமுறைகளை வகுத்துவிட்டு, அதன்பிறகுதான் அமெரிக்க நாட்டின் தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ளமுடியும். இவ்வாறு பல சிக்கலான நடைமுறைகளை தாண்டித்தான் செல்லவேண்டும். செனட்டில் டிரம்ப்புக்கு போதுமான அளவு ஆதரவு இருப்பதால், எதிர்பாராமல் ஏதேனும் நிகழ்ந்தாலொழிய அவரது பதவிக்கு ஆபத்து இல்லை.

இந்த விசாரணையில் செனட் மட்டும்தான் கேள்விகள் கேட்கமுடியும். ஏதாவது ஒழுங்கு பிரச்சினையில் மாற்று கருத்துகள் வந்தால், தலைமை நீதிபதியின் கருத்தை செனட்டின் முடிவு அமுக்கிவிடும். வழக்கு தொடரும் பொறுப்புதான் ஜனநாயக கட்சிக்கு இருக்கிறது. விசாரணையின்போது சட்டப்பூர்வமாக வக்கீல் வைத்து வாதாட டிரம்ப்புக்கு உரிமை இருக்கிறது. இந்த விசாரணையில், டிரம்ப்புக்கு தண்டனை கிடைக்கவேண்டுமென்றால், ஏதாவது ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவேண்டும். எது எப்படி இருந்தாலும், ஓட்டு எடுப்புதான் முடிவு செய்யும் என்பதால் டிரம்ப் பதவி இழப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவே. அமெரிக்காவில் பதவி நீக்க நடவடிக்கையை சந்திக்கும் 3–வது அதிபர் டிரம்ப். முதலில் குடியரசு கட்சியின் ரிச்சர்டு நிக்சன், செனட்டில் தனக்கு ஆதரவு இல்லை என்று தெரிந்ததும் அவராகவே ராஜினாமா செய்துவிட்டார். ஆண்ட்ரு ஜான்சன், பில் கிளிண்டன் ஆகியோர் மீதான பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் வெற்றிபெற்றாலும், செனட்டில் தோல்வி அடைந்ததால், அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியவில்லை. அதுதான் டிரம்ப் விவகாரத்திலும் நடக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

Next Story