தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?


தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?
x
தினத்தந்தி 22 Dec 2019 9:30 PM GMT (Updated: 2019-12-22T23:21:10+05:30)

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பலத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டிலும் இன்று குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி பேரணி நடக்கிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு வந்துள்ள அந்த நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்காக இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்து, சீக்கிய, பார்சி, புத்த, ஜைன, கிறிஸ்தவ மதத்தினருக்கு மட்டும்தான் இந்த சட்டத்திருத்தம் பொருந்தும். இது முஸ்லிம்களுக்கு பொருந்தாது என்பது இந்த சட்டத்தின் சாராம்சமாகும். மக்களவையில் பெரும்பான்மையாக பா.ஜ.க. இருப்பதால் எளிதில் நிறைவேறிவிட்டது. ஆனால் மாநிலங்களவையில் அ.தி.மு.க.வில் உள்ள 11 உறுப்பினர்களும், பா.ம.க. உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் இந்த சட்டம் நிறைவேறியிருக்காது என்பது எதிர்க்கட்சிகளின் கருத்து.

ஏற்கனவே இந்த சர்ச்சை நாடு முழுவதும் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது, அடுத்தாற்போல் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளும் பல எதிர்ப்புகளை உருவாக்கி உள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற முறையை மத்திய அரசு கொண்டுவரப்போகிறது. தற்போது ஆதார் அட்டை அனேகமாக எல்லோரிடமும் இருக்கும்போது, அதுவே அடையாள அட்டையாக இருக்க முடியாதா?, எதற்கு இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டும்?. அப்படியானால் ஆதார் அட்டையினால் என்ன பயன்? என்ற குழப்பமும் மக்களிடையே நிலவுகிறது. தற்போது வழங்கும் ஆதார் அட்டையில் தகப்பனார் பெயர், கணவர் பெயர் ஆகிய விவரங்கள் எடுக்கப்பட்டு, அதற்கு பதிலாக ‘கேர் ஆப்’ (காப்பாளர்) என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த மாற்றத்தினால் வாரிசு சான்றிதழ் போன்ற பல சான்றிதழ்கள் பெற ஒரு அத்தாட்சியாக இருக்க முடியாதநிலை ஏற்பட்டுவிடும்.

2024-க்குள் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நிறைவேற்றப்படும் என்று ஏற்கனவே உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த அறிவிக்கை வந்தபிறகு இதுகுறித்த சட்டவிதிகள் உருவாக்கப்பட்டுவிடும். இந்திய குடிமக்கள் யாருக்கும் எந்த கஷ்டமும் இருக்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த பதிவேடு அசாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இலங்கை அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தவர்களின் நிலைமை என்னவாகும்? என்று தெரியவில்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும்போது, இந்திய குடிமக்கள் என்பதை உறுதிசெய்ய பிறந்த தேதி, பிறந்த இடம் தொடர்பான எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யலாம். எந்த ஆவணங்களும் இல்லாத படிப்பறிவு இல்லாதவர்களுக்கு உள்ளூரில் உள்ளவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படும்.

1971-ம் ஆண்டுக்கு முந்தைய பூர்வீக ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யவேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகளில் இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு இருக்கிறது. ஆனால், பொதுமக்களுக்கு பெரிய சிக்கலை இந்த பதிவேடு தயாரிக்கும் பணிகள் ஏற்படுத்தும் என்ற வகையில் கேரளா, ஆந்திரா, சத்தீஸ்கர், பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய முதல்-மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தமிழக அரசு என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது?. முதல்-அமைச்சர் இதை ஆதரிக்கிறாரா?, எதிர்க்கிறாரா? என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை. நாடு முழுவதும் இதுகுறித்த ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள் வரும் சூழ்நிலையில், தமிழக அரசும் இதில் என்ன கருத்து தெரிவிக்கிறது? என்பதை அறிய எல்லோரும் ஆவலாக இருக்கிறார்கள்.

Next Story