பேரணிக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய போர் அணி


பேரணிக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய போர் அணி
x
தினத்தந்தி 23 Dec 2019 10:00 PM GMT (Updated: 2019-12-23T19:01:44+05:30)

சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் தொடர்ந்து எதிர்ப்பு அலைகள் வீசிக்கொண்டிருக்கின்றன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் வந்து குடியேறி உள்ள இந்து, சீக்கியர், பார்சி, பவுத்தர்கள், ஜெயின் சமூகத்தினர், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதில், முஸ்லிம்கள் பெயர் இடம்பெறவில்லை. இதுபோல, இலங்கையில் இருந்து அகதிகளாக வந்துள்ள இலங்கை தமிழர்கள் பற்றியும் இந்த மசோதாவில் குறிப்பிடப்படவில்லை என்று ஒரு குறையாக இருந்தது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை உடனே திரும்ப பெறக்கோரியும், ஈழத்தமிழர்– இஸ்லாமியருக்கு விரோதமாக இந்த சட்டம் இயற்றப்பட காரணமான மத்திய பா.ஜ.க. அரசு, மாநில அ.தி.மு.க. அரசு ஆகிய அரசுகளை கண்டித்தும், தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இந்த பேரணிக்கு தடைவிதிக்கக்கோரி இந்தியன் மக்கள் மன்ற தலைவரும், பத்திரிகையாளருமான வாராகி என்பவர், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வீட்டுக்கே நேற்று முன்தினம் இரவு சென்று ஒரு வழக்கை தாக்கல் செய்தார். உடனடியாக நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டுக்கு வந்து ஒரு அவசர விசாரணையை இரவு 9.15 மணிக்கு தொடங்கினர். வாதபிரதிவாதங்கள் அந்த பின்இரவிலும் நடந்தது. இறுதியாக நள்ளிரவில் நீதிபதிகள் ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் ஊர்வலம், பேரணி நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. போராட்டத்தை தடுக்க முடியாது. அதேநேரம் பொதுமக்களுக்கும், பொது சொத்துக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது. எனவே, அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு காரணமான நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க வசதியாக இந்த பேரணி செல்லும் அனைத்து இடங்களிலும் வீடியோ பதிவு செய்யவேண்டும். ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு தலைவர்களே பொறுப்பாக வேண்டும் என்று இடைக்கால தீர்ப்பை அளித்தனர். திட்டமிட்டப்படி நேற்று காலையில் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், எதிர்க்கட்சி தலைவர்கள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்ட ஒரு பேரணி நடந்தது. இந்த பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர்களான கி.வீரமணி, ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், கே.எம்.காதர்மொய்தீன், தொல்.திருமாவளவன், எம்.எச்.ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், எர்ணாவூர் நாராயணன் மற்றும் தோழமைக்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், தலைவர்கள் அனைவரும் நடந்தே சென்றனர். ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்புக்காக சென்றனர். இவ்வளவு மாபெரும் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கைகளில் பதாகைகளோடும், தங்கள் கட்சி கொடிகளோடும் உணர்ச்சி பொங்க கோ‌ஷங்கள் எழுப்பிக்கொண்டே சென்றனர். எந்தவித அசம்பாவிதங்கள் இல்லாமல், மிகக்கட்டுப்பாட்டோடு நடந்தது, மிகவும் பாராட்டுக்குரியது. 

பேரணி முடிவில் மு.க.ஸ்டாலின், ‘இது பேரணி அல்ல, போர் அணி’ என்று குறிப்பிட்டார். மற்ற மாநிலங்களில் எல்லாம் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டங்களில் போலீஸ் தடியடி, துப்பாக்கி சூடு, பஸ்களுக்கு தீவைப்பு, வன்முறை என்று பெருக்கெடுக்கும் நேரத்தில், தமிழ்நாட்டில் மட்டும் ‘தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவற்கொரு குணம் உண்டு’ என்ற வகையில், எதிர்ப்புகளையும் தெரிவித்து, அதேநேரம் அமைதியையும் காத்த ‘இந்த பேரணி– போர் அணி’ நிச்சயமாக பாராட்டுக்குரியது. எதிர்காலங்களிலும் பேரணிகள் இதுபோல அமையவேண்டும், அதேநேரத்தில் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் நடக்கவேண்டும் என்பது நடுநிலையாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. 

Next Story