ஜார்கண்ட் தேர்தல் தந்த பாடம்


ஜார்கண்ட் தேர்தல் தந்த பாடம்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:00 PM GMT (Updated: 2019-12-24T19:33:31+05:30)

தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் தொடக்க வகுப்புகளில் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஒரு கதை சொல்வார்கள்.

காட்டில் ஒரு மாடு தனியாக நின்றால், புலி எளிதில் வந்து வேட்டையாடி சாப்பிட்டுவிடும். ஆனால், மாடுகள் கூட்டமாக நின்றால், ஆக்ரோ‌ஷமாக எல்லாம் ஒன்றாக சேர்ந்து புலியை விரட்டியடித்துவிடும் என்பார்கள். அதுதான் இப்போது ஜார்கண்ட் மாநில தேர்தலிலும் நடந்துள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில், பா.ஜ.க. 11 இடங்களிலும், அதன் கூட்டணியான ஜார்கண்ட் அனைத்து மாணவர் சங்கம் ஒரு இடத்திலும் வெற்றிபெற்று 12 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிவாகை சூடியது. இதுமட்டுமல்லாமல், ஜார்கண்ட் மாநிலம் அடிக்கடி ஆட்சி மாற்றத்துக்கு பெயர்போன மாநிலம். ஆனால், முதல் முறையாக 2014–ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் 5 ஆண்டுகள் தொடர்ந்து ஒரு நிலையான ஆட்சி அமைத்து ஒரு வரலாறு படைத்தது.

கடந்த தேர்தல் வரை பா.ஜ.க.வுக்கும், ஜார்கண்ட் அனைத்து மாணவர் சங்கத்துக்கும் கூட்டணி இருந்தது. ஆனால், இந்த முறை தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டதால், இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. இதுமட்டுமல்லாமல், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியும் தனியாகவே போட்டியிட்டது. ஆனால், இதுவரையில் ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதல் இடங்களில் வெற்றிபெற்று வந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இந்தமுறை காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சிகளோடு கூட்டணி வைத்து போட்டியிட்டது. மொத்தம் 81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்டில், கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சி ஒரு இடத்திலும் வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்தை பெற்றது. கூட்டணி உடைந்ததால், பா.ஜ.க. கடந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், இப்போது 25 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஜார்கண்ட் அனைத்து மாணவர் சங்கம் 2 இடங்களிலும், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி 3 இடங்களிலும் வெற்றிபெற்று தோல்வியை தழுவியுள்ளது. இது முழுக்க முழுக்க கூட்டணி பலத்தால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா–காங்கிரஸ் பெற்ற வெற்றி, கூட்டணி இல்லாததால் பா.ஜ.க. கூட்டணி பெற்ற தோல்வி. 

இவ்வளவுக்கும் ஓட்டு சதவீதத்தை பார்த்தால் பா.ஜ.க. 33.37 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. ஜார்கண்ட் அனைத்து மாணவர் சங்கம் 8.10 சதவீத ஓட்டுகளையும், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 5.45 சதவீத ஓட்டுகளையும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 18.72 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் 13.88 சதவீத ஓட்டுகளையும், ராஷ்டிரீய ஜனதாதளம் 2.75 சதவீத ஓட்டுகளையும் பெற்றுள்ளன. இது ஒரு காரணம் சொன்னாலும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி என்றாலும் சரி, அமித்ஷா என்றாலும் சரி, முழுக்க முழக்க தேசிய பிரச்சினைகள் பற்றியே பேசினார்கள். ஆனால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா–காங்கிரஸ் கூட்டணி சார்பில், வேலையில்லா திண்டாட்டம், ஊழல், விவசாயிகள் பிரச்சினை, மலைவாழ் மக்களின் துயரம், ஏழைகளுக்கு நீதி, அரசு பணிகளில் ஜார்கண்ட் மக்களுக்கே இடம் என உள்ளூர் பிரச்சினைகள் பற்றியே பேசப்பட்டது. பா.ஜ.க. கடந்த 15 மாதங்களில், 4 மாநிலங்களில் ஆட்சியை இழந்த நிலையில், இது 5–வது மாநிலமாகும். இப்போது குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து முண்டா தட்டிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த தேர்தல் நிச்சயமாக அவர்கள் ஒற்றுமையை வலுப்படுத்தும். பா.ஜ.க. இனி என்ன வியூகத்தை வகுக்கப்போகிறது என்பது போகபோகத்தான் தெரியும்.

Next Story