செல்போன் கட்டணம் உயர்வா?


செல்போன் கட்டணம் உயர்வா?
x
தினத்தந்தி 26 Dec 2019 4:15 AM GMT (Updated: 2019-12-26T09:45:47+05:30)

செல்போன் கட்டணம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென உயர்த்தப்பட்டிருப்பது மக்களின் பட்ஜெட்டில் பெரிய துண்டுவிழ வைத்துவிட்டது.

1995-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதிதான் இந்தியாவில் முதலில் செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதும் கட்டணம் மிக அதிகமாக இருந்ததால், வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நிலை இருந்தது. பின்னர் தயாநிதிமாறன் தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக இருந்த நேரத்தில் கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டு, ஒருகால் பேச 1 ரூபாய் என்று வந்தபோது எல்லோரும் செல்போன்களை வாங்கி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். செல்போன்களின் விலையும் வெகுவாக குறைந்தது. தொடர்ந்து வசதிபடைத்தவர்கள் மட்டுமல்லாமல், சாதாரண கூலி வேலை செய்பவர்களும் செல்போன் இருந்தால்தான் வாழ்க்கை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

செல்போனின் பயன்பாடும் வெறுமனே பேசுவதற்கும், கேட்பதற்கும் மட்டும் என்பதை தாண்டி பல பயன்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. கணக்கு வழக்கு பார்ப்பவர்கள் கால்குலேட்டராக பயன்படுத்திக்கொள்ளலாம். போட்டோ எடுக்கும் கேமராகவும் பயன்படுத்தலாம். வீடியோ எடுக்கலாம். திரைப்படங்கள் பார்க்கலாம். இணையதளமாகவும் பயன்படுத்தலாம். இ-மெயிலில் செய்தி அனுப்பலாம். டார்ச் லைட்டாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். கண்ணாடியாகவும்கூட பயன்படுத்தலாம். உலகில் எந்த மூலையில் உள்ளவர்களுடனும் வீடியோகால் மூலம் முகத்துக்கு முகம் பார்த்துக்கொள்ளலாம் என்று எத்தனையோ பயன்பாடுகள் செல்போனில் இருக்கின்றன. இப்போதெல்லாம் கடிதம் எழுதுவது, வாழ்த்து செய்தி அனுப்புவது, அவசரத்துக்கு தந்தி அனுப்புவது என்பதெல்லாம் இல்லை. ஒரு நொடியில் எல்லா செய்திகளையும் செல்போன் மூலமாக அனுப்பிவிடமுடியும். படங்களையும் அனுப்பமுடியும். இப்படி உலகத்தையே உள்ளங்கையில் வைத்திருக்கும் செல்போன்களின் எண்ணிக்கை இந்தியாவில் 118 கோடியாக இருக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடியை தாண்டிவிட்டது. 118 கோடி செல்போன்களில் 90 சதவீத செல்போன்கள் வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய 3 நிறுவனங்களின் சேவைகளில்தான் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 3 நிறுவனங்களும் சரிசமமான எண்ணிக்கையில் செல்போன் சேவைகளை பிரித்துக்கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில், கடந்த 3-ந்தேதி வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை 42 சதவீத அளவுக்கு உயர்த்தியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 39 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஏ.ஜி.ஆர். கட்டணங்களை உடனடியாக அரசுக்கு செலுத்தவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பெரிதும் நஷ்டத்தை சந்தித்ததாகவும், இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றின் கடனும் ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய நிலையில், கடனில் இருந்து மீள்வதற்காகத்தான் கட்டணங்களை உயர்த்தியதாகச் சொன்னாலும், மக்களால் அதுவும் சாதாரண ஏழை-எளிய மக்களால் இந்தப் பாரத்தை நிச்சயமாக தாங்கிக்கொள்ள முடியாது. செல்போன் இல்லாமல் வாழவும் முடியாது. தனியார் நிறுவனம் லாப நஷ்டம் பார்க்கலாம். ஆனால், அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். நிறுவனங்கள் மக்களின் அத்தியாவசிய தேவை செல்போன் என்ற நிலையில், லாப நஷ்டம் பார்க்காமல், தொடர்ந்து குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். ஆனால், பி.எஸ்.என்.எல். இன்னும் 4-ஜி சேவையை தொடங்கவில்லை. ஊழியர்கள் தானாக முன்வந்து ஓய்வுபெறும் திட்டத்தில் 92,600 ஊழியர்கள் ஓய்வு பெறப்போகிறார்கள். இந்த நிறுவனங்களை மூடிவிடப்போகிறார்களோ? அல்லது விற்றுவிடப்போகிறார்களோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படி இல்லாமல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் இயங்கும் என்ற உறுதியை அரசு தரவேண்டும். தொடர்ந்து மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவைகளை இந்த நிறுவனங்கள் வழங்கினால் தனியார் செல்போன் நிறுவனங்களின் கட்டண உயர்வில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற முடியும்.


Next Story