கஞ்சாவை ஒழிக்க கடும் நடவடிக்கை தேவை


கஞ்சாவை ஒழிக்க கடும் நடவடிக்கை தேவை
x
தினத்தந்தி 26 Dec 2019 10:00 PM GMT (Updated: 2019-12-26T18:39:20+05:30)

பல நாடுகளில் கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக அனுமதித்து இருந்தாலும், இந்தியாவில் கஞ்சா பயிரிடுவது, உற்பத்தி செய்வது, விற்பனை மற்றும் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்ற வகையில், அதை தடுக்க பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கஞ்சா உபயோகிப்பது, உடல்நலத்துக்கு மட்டுமல்லாமல், மனநலத்தையும் பெரிதும் பாதிக்கக்கூடியதாகும். தொடர்ந்து அதை பயன்படுத்துபவர்களை மனநல நோயாளிகளாகவும் ஆக்கிவிடுகிறது. என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், இந்தியா முழுவதும் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கிறது என்பது அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது. சமீபத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு சார்பில் தென்மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியா முழுவதும் 2014–ம் ஆண்டு கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை 6.7 லட்சமாக இருந்தது, நடப்பு ஆண்டில் 3 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி இந்த கூட்டத்தில் பேசும்போது, ‘தமிழகத்தில் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’ என்று வேதனை தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் கஞ்சா சில குறிப்பிட்ட நபர்களால், குறிப்பிட்ட இடத்தில் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஆன்–லைன் மூலமாக கஞ்சா விற்பனை கன ஜோராக நடந்து வருகிறது. சென்னையில் இவ்வாறு ஆன்–லைன் மூலமாக கஞ்சா விற்பனை செய்த ஒரு கும்பல் சமீபத்தில் பிடிபட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு அருகில் இவ்வாறு கஞ்சா விற்பனை செய்வதாகவும், மாணவர்களை கஞ்சா பயன்படுத்துவதற்கு அடிமையாக்கிவிடுவதாகவும் தகவல்கள் உள்ளன. சமீபகாலமாக கஞ்சாவை கடத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் பெண்களை பயன்படுத்துகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் இருந்து கடத்தி கொண்டுவரப்படும் ஹெராயினுக்கும், ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்படும் கஞ்சாவுக்கும் சென்னைதான் நுழைவு வாயிலாக இருக்கிறது. சாலை மார்க்கமாகவும், ரெயில் வழியாகவும் கொண்டுவரப்படும் கஞ்சா சென்னையில் இருந்துதான் பிற இடங்களுக்கு திருட்டுத்தனமாக அனுப்பப்பட்டு வந்தது. ராமநாதபுரம் மாவட்டம், நாகப்பட்டினம், தூத்துக்குடி வழியாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இப்போது தமிழ் நாட்டிலேயே கஞ்சா அதிக அளவில் பயிரிடுகிற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் கரூர் மாவட்டத்தில் உள்ள மைலம்பட்டி என்ற கிராமத்தில் 7 ஏக்கர் விளைநிலத்தின் நடுவில் 1½ ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பயிரிட்டு 6 மாதமாக இருந்த கஞ்சாச்செடி 5 முதல் 8 அடி உயரம்வரை வளர்ந்து இருந்தது. இந்த செடியில் இருந்து கஞ்சா வாசனை வந்துவிடக்கூடாது என்பதற்காக அருகில் மல்லிகை செடியையும் வளர்த்து மணம் வீசச்செய்திருக்கிறார்கள். தேனி மாவட்டத்தில் கஞ்சா பயிரிடுவதையும், கஞ்சா விற்பனை செய்வதையும் கண்டுபிடிக்க போலீசார் 5 மோப்ப நாய்களை பயன்படுத்துகிறார்கள். கையில் 250 கிராம் கஞ்சா வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்த ஒருவரை வெற்றி என்ற மோப்பநாய் தாவிப்பிடித்து இருக்கிறது. தேனியைப்போல, மற்ற மாவட்டங்களிலும் கஞ்சா விற்பனையை கண்டுபிடிக்க மோப்ப நாய்களை பயன்படுத்தினால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். கஞ்சா பயிரிடுவதை அடியோடு ஒழிக்க போதைப்பொருட்கள் தடுப்பு போலீசார் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த போலீஸ் படையே உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். கஞ்சா பயிரிடுவது, விற்பனை செய்வது, பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றால், கடுமையான தண்டனையை விதிக்கும் வகையில் சட்டப்பிரிவுகள் திருத்தப்பட வேண்டும். சென்னை மற்றும் தமிழக எல்லையில் சாலை வழியாக, ரெயில் மார்க்கமாக படகுகள் வழியாக கஞ்சா கொண்டு வருவதை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story