குழப்பங்களுக்கு தெளிவு வேண்டும்


குழப்பங்களுக்கு தெளிவு வேண்டும்
x
தினத்தந்தி 29 Dec 2019 10:30 PM GMT (Updated: 2019-12-29T22:32:24+05:30)

நாட்டில் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது. இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவு கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் பேர் ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்த வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்.

நாட்டில் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது. இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவு கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் பேர் ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்த வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், தற்போது விலைவாசி உயர்வாலும் பொதுமக்கள் அல்லல்படுகின்றனர். இதில் எல்லாம் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டிய நிலையில், தற்போது பெரிய அளவில் விவாதங்கள் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு என்பதை சுற்றியே வந்துகொண்டிருக்கிறது. 

கடந்த 24–ந் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 2021–ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.8,754 கோடியே 23 லட்சமும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941 கோடியே 35 லட்சமும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அசாமில் நிறைவேற்றியதுபோல, தேசிய குடியுரிமை பதிவேடு தயாரிப்பதற்கான முதல் நடவடிக்கைதான் தேசிய மக்கள் தொகை பதிவேடு என்ற ஒரு அச்சம் மக்கள் மனதில் நிலவுகிறது. பல மாநிலங்கள் இதை அமல்படுத்தமாட்டோம் என்று தெளிவாகவே கூறிவிட்டன. பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் கலந்துகொண்ட மந்திரி சபை கூட்டத்தில், தேசிய குடியுரிமை பதிவேடு பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை என்று உறுதிபட கூறினாலும், மக்கள் மத்தியில் ஒரு பெரிய குழப்பம் நிலவுகிறது. 2003–ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை (குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குதல்) விதிகளில் மக்கள் தொகை பதிவேடு என்ற ஒரு வரி நுழைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மக்கள் தொகை பதிவேட்டுக்கு சேகரிக்கப்படும் விவரங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டு, தகுந்த பரிசீலனைக்குப்பிறகு குடியுரிமை பதிவேட்டில் சேர்ப்பதற்காகவும், அதை தயாரிப்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தேசிய மக்கள் தொகை பதிவேடு இல்லாமல், தேசிய குடியுரிமை பதிவேடு இல்லை என்பது தெளிவாகிறது. 

பிரதமரும் சரி, உள்துறை மந்திரியும் சரி, தேசிய குடியுரிமை பதிவேடு தயாரிப்பதற்கான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறினாலும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அடிப்படையாகக்கொண்டு, அதிலிருந்து தேசிய குடியுரிமை பதிவேட்டை தயாரிக்கும் முயற்சி நடைபெற்றுவிடுமோ? என்ற ஒரு ஐயப்பாடு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதை உறுதிபடுத்தும் வகையில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதற்கான வழக்கமான விவரங்களோடு, தகப்பனார், தாயார் பிறந்த இடம், பிறந்த தேதி, கடைசியாக குடியிருந்த இடம், ஆதார் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, செல்போன் நம்பர் என்று ஏற்கனவே சேகரிக்கப்படும் 15 விவரங்களோடு, புதிதாக இந்த விவரங்களும் கோரப்பட்டுள்ளன. ஆக, மக்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்ப்பது மத்திய அரசின் கடமையாகும்.

ஏற்கனவே 2014–ம் ஆண்டு நரேந்திர மோடி முதல் முறையாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்துவிட்டு பேசும்போது, ‘நாடாளுமன்றத்தில் இருக்கும் மெஜாரிட்டியை வைத்து அல்ல, நாட்டில் உள்ள ஒருமித்த கருத்தை வைத்துத்தான் தேசத்தை வழிநடத்துவேன்’ என்று உறுதி கூறியிருக்கிறார். எனவே, மக்கள் இப்போது அதிகம் எதிர்பார்ப்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது தாராளமாக நடக்கட்டும். ஆனால், தேசிய மக்கள் பதிவேடு என்றாலும் சரி, தேசிய குடியுரிமை பதிவேடு என்றாலும் சரி, நாட்டில் நீண்ட விவாதங்கள் நடத்தி, எல்லோருடைய கருத்துகளையும் கேட்டு, பிரதமர் உறுதி அளித்தபடி ஒருமித்த கருத்து அடிப்படையிலேயே மேற்கொள்ளவேண்டும். தனி மனிதனின் ‘பிரைவசி’ உரிமை என்று அழைக்கப்படும் தனி மனித உரிமைக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

Next Story