புத்தாண்டே வருக! புதிய வளம் தருக!


புத்தாண்டே வருக! புதிய வளம் தருக!
x
தினத்தந்தி 31 Dec 2019 10:30 PM GMT (Updated: 2019-12-31T18:01:41+05:30)

இன்று 2019–ம் ஆண்டு முடிந்து, 2020–ம் ஆண்டு பிறந்தது.

ன்று 2019–ம் ஆண்டு முடிந்து, 2020–ம் ஆண்டு பிறந்தது. ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் ‘‘போய் வா..’’ என்று பழைய ஆண்டுக்கு ‘குட்பை’ சொல்லி அனுப்புவதும், புதிய ஆண்டை ‘‘வருகவே.. வருகவே..’’ என்று வரவேற்பதும் வாடிக்கையான ஒன்றாகும். அதுபோல, கடந்த ஆண்டில் நடந்த நல்லவற்றையும், அல்லவற்றையும் நினைத்துப் பார்த்து, நல்லவைகள் எல்லாம் தொடரவேண்டும். அல்லவைகள் எல்லாம் இந்த ஆண்டு நடக்கக்கூடாது என்ற எண்ண அலைகள் மக்களின் மனதில் நிழலாடும். அந்த வகையில்தான், ‘‘புத்தாண்டே வருக.. புதிய வளம் தருக..’’ என்று மக்கள் வரவேற்கிறார்கள். 

2019–ம் ஆண்டு ஒரு எழுச்சியான ஆண்டு என்று சொல்லிவிட முடியாது. கடந்த நவம்பர் மாதம் 30–ந்தேதி இந்திய புள்ளியியல் துறை இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதம்தான் என்பதை தெரிவித்தது. கடந்த 6½ ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக்குறைவான வளர்ச்சி விகிதம் இது. தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. ஏற்றுமதி, இறக்குமதி என்று எல்லாவற்றிலும் திருப்தியற்ற நிலை இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக இருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தியும் குறைந்து விட்டது. விலைவாசியும் மிக அதிகமாக உயர்ந்து விட்டது. ரியல் எஸ்டேட் துறை, கட்டுமான துறை, வியாபாரம் என்று எல்லாமே படுத்துவிட்டது. 

கடந்த ஆண்டு போராட்டங்களுக்கு பஞ்சமே இல்லை. பல பிரச்சினைகள் தலைதூக்கி நாடு முழுவதும் போராட்டம்... போராட்டம்... போராட்டம்... என்று போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது. தென்மேற்கு–வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்தது. ஆனால், பல இடங்களில் அதிக மழையாலும், பல இடங்களில் உரிய நேரத்தில் மழை பெய்யாத தாலும், விவசாயிகளுக்கு நல்ல ஆண்டாக இல்லை. பங்குச்சந்தையை பொறுத்தமட்டில், 41,575 புள்ளிகளை அடைந்து உச்சத்திற்கு சென்றாலும், பெரும்பாலான பங்குகளின் விலை சரிவடைந்து நஷ்டத்தையே கொடுத்தது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப் பட்ட 2,277 பங்குகளில், 80 சதவீத பங்குகள் மதிப்பை இழந்துவிட்டன. ஐந்தில் ஒரு பங்குதான் லாபத்தை பார்த்தது. 

தமிழ்நாட்டில் 2 முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஒன்று, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சிதரும் அத்திவரதர் தரிசனம். மற்றொன்று, மாமல்லபுரத்தில் நடந்த இந்திய பிரதமர்–சீன அதிபர் சந்திப்பு. இந்த ஆண்டு எந்த குறையும் இல்லாமல் தொழில் துறையிலும், வேளாண் துறையிலும் நல்ல உயர்வு வேண்டும் என்பதையே தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ‘‘விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை’’ என்பது பழமொழி. அந்த வகையில், விவசாய வளர்ச்சிக்கான நல்ல திட்டங்களை வகுத்தால், தானாக நாடு செழிக்கும். விளை பொருள் அதிகம் இருந்தால், அதைச்சார்ந்த தொழில்களும் வளரும். பருத்தி விளைச்சல் அதிகமாக இருந்தால், நெசவுத்தொழிலும், ஜவுளித் தொழிலும் தழைக்கும். தென்னை விளைச்சல் அதிகம் இருந்தால் குடிசை தொழிலான கயிறு திரிக்கும் தொழில் மேம்படும். இதுபோல, வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டுமென்றால், கனரக தொழிலில் கவனம் செலுத்துவதுபோல சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சியிலும் அதிகம் கவனம் செலுத்தவேண்டும். 

பிரதமரின் இலக்கான 5 லட்சம் கோடி டாலர் வளர்ச்சியை 2025–ம் ஆண்டுக்குள் அடைய வேண்டுமென்றால், பொருளாதார வளர்ச்சி சராசரி 
9 சதவீதமாவது இருக்கவேண்டும். அதை இலக்காக வைத்து மத்திய–மாநில அரசுகள் வேகமாக நடைபோட வேண்டும். தமிழ்நாட்டில் இப்போது நல்லாட்சியில் முதலிடம் வகித்ததுபோல, இந்த ஆண்டு தொழில் வளர்ச்சியிலும், விவசாயத்திலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், மின்சார உற்பத்தியிலும் முதலிடம் வகிக்க வேண்டும் என்பதையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாடு இந்த ஆண்டு எல்லா வளங்களையும் பெறட்டும். 

Next Story