ரெயில் கட்டணம் உயர்வு
மக்களின் அன்றாட வாழ்க்கையில் ரெயில் போக்குவரத்து அத்தியாவசிய பங்காற்றுகிறது. பயணிகள் ரெயில் என்றாலும் சரி, சரக்கு ரெயில் என்றாலும் சரி, நாட்டின் வளர்ச்சிக்கும், வசதிக்கும் இன்றியமையாததாகும்.
இந்தியா முழுவதும் 12,617 ரெயில்கள் தினமும் ஏறத்தாழ 2 கோடியே 20 லட்சம் பயணிகளை, 7,216 ரெயில் நிலையங்கள் வழியாக ஏற்றிச் செல்கின்றன. இதேபோல, 7,421 சரக்கு ரெயில்கள் தினமும் 30 லட்சம் டன் சரக்குகளை ஏற்றிச் செல்கின்றன. பயணிகள் ரெயில் கட்டணம், பஸ் கட்டணத்தைவிட குறைவு என்பதால், மக்களின் போக்குவரத்து செலவு அவர்கள் கையை கடிக்காமல் இருந்தது. அதுபோல, சரக்கு ரெயில் கட்டணமும் விலைவாசியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரக்கு கட்டணம், சாலை போக்குவரத்து வழியாக லாரிகளில் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான கட்டணத்தைவிட அதிகமாக இருக்கிறது என்று ஒருகுறை இருக்கிறது.
இந்தநிலையில், சரக்கு ரெயில் கட்டணத்தை சீரமைக்கும் வகையில், கடந்த செப்டம்பர் மாதம் ஒரு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எனவே, சரக்கு ரெயில் கட்டணம், பயணிகள் ரெயில் கட்டணம் ஆகியவற்றை முறைப்படுத்த ரெயில்வே வாரியம் நடவடிக்கை எடுக்கப்போவதாக ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கூறியிருந்தார். கடைசியாக 2014-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி பா.ஜ.க. ஆட்சியில் பயணிகள் ரெயில் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு ரெயில் கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டது. எந்த நேரமும் ரெயில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று நாடு முழுவதும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், புத்தாண்டு பரிசாக பொதுமக்களுக்கு அதிகம் வலிக்காத வகையில் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ந்தேதி இரவு அறிவிக்கப்பட்டு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துவிட்டது. இதன்படி, புறநகர் இல்லாத சாதாரண ரெயில்களில் 2-ம் வகுப்பு, படுக்கை வசதி, முதல் வகுப்புக்கான கட்டணம் கி.மீட்டருக்கு ஒரு காசு மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏசி இல்லாத 2-ம் வகுப்பு, படுக்கை வசதி, முதல் வகுப்பு ரெயில் கட்டணங்களில் கி.மீட்டருக்கு 2 காசு உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி வசதி கொண்ட ரெயில்களில் சேர் கார், 3 அடுக்கு, 2 அடுக்கு, முதல் வகுப்பு ரெயில் பெட்டிகளுக்கான கட்டணங்களில் கி.மீட்டருக்கு 4 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், மொத்த ரெயில் பயணிகளில் 66 சதவீதம் பயணிகள் அன்றாடம் போக்குவரத்துக்காக பயன்படுத்தும் புறநகர் ரெயில் கட்டணமோ, சீசன் டிக்கெட் கட்டணமோ உயர்த்தப்படவில்லை. நிச்சயமாக இது மிகவும் வரவேற்கவேண்டிய ஒன்றாகும். இந்த நிதி ஆண்டில் கடந்த 8 மாதங்களில் மட்டும் ரெயில்வே நிர்வாகத்துக்கு வருவாயை விட, ஏறத்தாழ ரூ.20 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகியுள்ளது. இந்த கட்டண உயர்வினால் கூடுதலாக ரூ.2,300 கோடிதான் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, ரெயில்வே நிர்வாகத்தின் இழப்பை ஈடுகட்ட வேண்டுமென்றால், இயக்க செலவை குறைத்தால் மட்டுமே முடியும். இந்த நிதி ஆண்டில் ரெயில்வே நிர்வாகம் 100 ரூபாய் வருவாயை ஈட்ட ரூ.95 செலவழிக்க வேண்டியது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில்தான் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் பழக்கம் இல்லை. இதே நிலையை நாட்டின் எல்லா பகுதிகளிலும் உருவாக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவேண்டும். சரக்கு ரெயில் வருவாயை உயர்த்த, அதற்கான கட்டணத்தை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பயணிகள் ரெயில் என்றாலும், சரக்கு ரெயில் என்றாலும் குறித்த நேரத்தில் புறப்பட்டு, குறித்த நேரத்தில் போய்ச்சேரும் நேரந்தவறாமையை கடைபிடிக்க முனைப்புடன் செயல்படவேண்டும்.
Related Tags :
Next Story