சர்ச்சையை கிளப்பும் ராணுவ தளபதியின் பேச்சு


சர்ச்சையை கிளப்பும் ராணுவ தளபதியின் பேச்சு
x
தினத்தந்தி 2 Jan 2020 11:00 PM GMT (Updated: 2 Jan 2020 3:13 PM GMT)

சமீபகாலமாக நாடு முழுவதும் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், மாணவர்கள் மத்தியிலும் இதற்கு எதிர்ப்பான உணர்வுகள் மேலோங்கியதால் அவர்களும் போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துகிறார்கள். சில இடங்களில் இந்த போராட்டங்களில் வன்முறை தலைதூக்கியது. வன்முறைகள், கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு போன்ற சம்பவங்களும் நடந்து இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக இந்திய ராணுவ தளபதியாக பணியாற்றி கடந்த டிசம்பர் 31–ந் தேதி ஓய்வுபெற்ற பிபின் ராவத் கூறிய சில கருத்துக்கள் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமீபத்தில் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கும் ஒரு தலைமை தளபதி நியமிக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட முடிவின்படி, பிபின் ராவத் அந்த பதவியையும் கடந்த 1–ந் தேதி ஏற்று இருக்கிறார். 

சில நாட்களுக்கு முன்பு பணியில் இருக்கும்போதே டெல்லியில் நடந்த ஒரு விழாவில் அவர் பேசியது, பல விமர்சனங்களை அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும், சமூக வலைத்தளங்களிலும் கிளப்பியுள்ளது. மக்களை பொருத்தமற்ற திசைகளில் வழிநடத்துபவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது. அதைத்தான் இப்போது பல பல்கலைக்கழகங்களிலும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பல நகரங்களில் இத்தகைய போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் தீவைப்பு சம்பவங்கள் நடக்கும் வகையில் போராட்டக்காரர்களை இந்த தலைவர்கள் வழி நடத்துகிறார்கள். மக்களை அல்லது மாணவர்களை வன்முறைக்கு அழைத்து செல்பவர்கள் தலைவர்கள் கிடையாது. என்று பேசியிருக்கிறார். பொதுவாக ராணுவ தளபதிகள் இதுபோன்ற கருத்துக்களை கூறுவது கிடையாது. பிபின் ராவத் கூறிய இந்த கருத்துகள் ஒரு அரசியல்வாதியின் கருத்து போன்று இருக்கிறது என்று உடனடியாக ஆட்சேபங்கள் கிளம்பின. அவர் தலைமைப் பண்புகள் பற்றித்தான் பேசினார். குடியுரிமை திருத்த மசோதா பற்றியோ, தேசிய மக்கள் குடியுரிமை கணக்கெடுப்பு பற்றியோ பேசவில்லை. ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் சட்டம்–ஒழுங்கு பற்றிய அவரது கவலையைத்தான் எடுத்துரைத்தார் என்று ராணுவ அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். 

ஆனால் இந்திய ராணுவ சட்டம் பிரிவு 21–ன்படி, அரசியல் ரீதியான எந்த கேள்விக்கோ அல்லது ராணுவம் பற்றிய எந்த ஒரு கேள்விக்கோ ராணுவத்தினர் யாரும் பத்திரிகைகளுக்கு தகவல் தெரிவிக்கக்கூடாது. இதேபோன்ற பொருளில் கூட்டங்களிலும் பேசக்கூடாது என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது என்பதை அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற பல ராணுவ அதிகாரிகளும், பணியில் இருக்கும் ராணுவ தளபதி இவ்வாறு பேசியிருக்கக்கூடாது என்ற கருத்தை தெரிவிக்கின்றனர். ஆனால் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்பது மக்களின் உரிமைகளை, கோரிக்கைகளை, குறைகளை வெளிப்படுத்துவதாகும். அதில் வன்முறை, தீவைப்பு போன்றவை நிச்சயமாக இருக்கக்கூடாது என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. அதேநேரத்தில் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் இருப்பது மிகவும் தவறாகும். அவ்வாறு நடக்கும் போராட்டங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும். மேலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கென தனியாக ஒரு இடம் ஒதுக்கி அங்கு மட்டும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். திடீர் திடீரென எந்த இடத்திலும் முன்னறிவிப்பு இல்லாமல் நடத்துவதுதான் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக இதுபோன்ற பேரணிகள், போராட்டங்கள் வேலைநாட்களில் நடந்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாவதை தடுக்க ‘தினத்தந்தி’யின் கருத்துப்படி, சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மட்டும் போராட்டங்கள் நடந்தால் எதிர்ப்பையும் தெரிவிக்கலாம். பொதுமக்களுக்கும் இடைஞ்சல்கள் இல்லாமல் இருக்கும். 

Next Story