இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை


இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை
x
தினத்தந்தி 3 Jan 2020 11:00 PM GMT (Updated: 2020-01-03T19:58:06+05:30)

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வேண்டும் என்று வாதம் பெரிய அளவில் கூறப்படுகிறது. இரட்டை குடியுரிமை என்றால் அவர்களுக்கு இலங்கை குடியுரிமையும் வேண்டும், இந்திய குடியுரிமையும் வேண்டும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டபிறகு, இலங்கை தமிழர்களை விட்டுவிட்டார்களே என்ற குறை தமிழ்நாட்டில் நிலவுகிறது. இந்த சட்டத்தின்கீழ் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு தஞ்சம் கேட்டு வந்த சிறுபான்மையினரான இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், பவுத்தர், பார்சி, ஜைனர் போன்ற இனத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதுதான் இந்த சட்டம். அவர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளானால், இலங்கையில் இனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் அல்லவா? அதுதானே நியாயம்! என்ற கோரிக்கை வலுக்கிறது. 

1983–ம் ஆண்டு முதல் இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கினர். ஏராளமான தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாத நிலையில், தங்கள் உடமைகளை எல்லாம் விட்டுவிட்டு, உயிரை காப்பாற்றினால் போதும் என்று குடும்பம் குடும்பமாக தமிழ்நாடு வந்தனர். 1983 முதல் 2013 வரையில் 3 லட்சத்து 4 ஆயிரம் பேர் வந்தனர். அவர்களில், பெரும்பாலானோர் திரும்பி சென்றுவிட்டனர். தற்போது 107 அகதிகள் முகாம்களில், 59 ஆயிரத்து 714 பேரும், முகாம்களுக்கு வெளியே 34 ஆயிரத்து 355 பேரும் குடியிருந்து வருகிறார்கள். 2009–ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிந்தவுடன் மேலும் ஏறத்தாழ 14 ஆயிரம் பேர் திரும்பி சென்றுவிட்டனர். இப்போது மேலும் பலர் இலங்கைக்கு செல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு அதற்கான வசதிகளை செய்து கொடுத்து அன்புடன் வழியனுப்ப வேண்டும்.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வேண்டும் என்று வாதம் பெரிய அளவில் கூறப்படுகிறது. இரட்டை குடியுரிமை என்றால் அவர்களுக்கு இலங்கை குடியுரிமையும் வேண்டும், இந்திய குடியுரிமையும் வேண்டும். ஏற்கனவே 2016–ம் ஆண்டு மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இதே கோரிக் கையை மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார். தற்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதேநிலைப் பாட்டில் இருக்கிறார். மத்திய அரசை வலியுறுத்தியும் வருகிறார். சமீபத்தில் கூட உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை விடுத்தார். மத்திய அரசும் பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளது. இரட்டை குடியுரிமை கிடைத்தால் இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் நிரந்தர வேலைவாய்ப்பை பெறமுடியும். தொழில் நடத்த முடியும், சொத்துகள் வாங்க முடியும். தற்போது இலங்கையில் இரட்டை குடியுரிமை வைத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. இலங்கை குடியேற்றத் துறை விதிப்படி, வேறு நாட்டு குடியுரிமை பெற்றதால், இலங்கை குடியுரிமை நிறுத்தப்பட்டபிறகு, மீண்டும் இலங்கை குடியுரிமை பெற விரும்பினால் இரட்டை குடியுரிமை வழங்கமுடியும். அதேபோல, வேறொரு நாட்டு குடியுரிமை பெற விரும்பும் ஒருவர் இலங்கை குடியுரிமை யையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பினாலும் இரட்டை குடியுரிமை வழங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. உலகில் 60 நாடுகள் இரட்டை குடியுரிமை வழங்குகின்றன.

இந்திய அரசியல் சட்டம் யாருக்கும் இரட்டை குடியுரிமை வழங்க அனுமதிக்கவில்லை. இந்தியாவில் பிறந்து, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களில் அந்த நாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கு, இந்திய அரசாங்கம் இன்னும் இரட்டை குடியுரிமை வழங்கவில்லை. தமிழ் நாட்டில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டுமென்றால், அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும். அப்படி அரசியல் சட்டத்தை திருத்தும்போது இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் இரட்டை குடியுரிமை வழங்கும்வகையில் திருத்தப்பட வேண்டும். அந்த நிலையில், இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசாங்கம் முன்வருமா?. தமிழக அரசு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 

Next Story