ஜனநாயகம் வென்றது


ஜனநாயகம் வென்றது
x
தினத்தந்தி 5 Jan 2020 9:30 PM GMT (Updated: 2020-01-05T22:31:52+05:30)

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,618 ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தேர்தல் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, உருவான 9 மாவட்டங்களையும், சென்னை நகரையும் தவிர்த்து, 27 மாவட்டங்களில் மட்டும் ஊராட்சி தேர்தல்களை நடத்த அரசு முடிவு செய்தது. அந்தவகையில், 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,900 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 2 கட்டங்களாக கடந்த மாதம் 27, 30-ந் தேதிகளில் நடந்தது. இதில், 18,137 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 410 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், 23 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 18,570 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. 243 வார்டுகளிலும், அ.தி.மு.க. 214 வார்டுகளிலும், ஊராட்சி ஒன்றிய வார்டு தேர்தலில் தி.மு.க. 2,100 வார்டுகளிலும், அ.தி.மு.க. 1,781 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. அ.தி.மு.க.வைவிட, தி.மு.க. கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

இரு கட்சிகளுமே எங்களுக்குத்தான் வெற்றி என்று கூறுகிறார்கள். ஆனால், இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. ஏனெனில், ஓட்டுப்போட்டது கிராம பகுதிகளில் உள்ள வாக்காளர்கள். ஒவ்வொருவரும் 4 வாக்குச்சீட்டுகளை கையில் வைத்துக்கொண்டு, 4 பதவிகளுக்கு ஓட்டுபோடவேண்டியது இருந்தது. ஆனால், கிராமபுறங்களில் உள்ள படித்தவர்களோ, படிக்காதவர்களோ எல்லோருமே தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தும் வகையில், 4 வித்தியாசமான பதவிகளுக்கு ஒரேநேரத்தில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள் என்ற வகையில் இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். வாக்கு சதவீதமும் 77.46 சதவீதம் இருந்தது. இது 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டம் என்று இரு கட்சிகளும் கணித்துக்கொள்ளும் வகையில் அந்த கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அடுத்த 15 மாதங்களின் செயல்பாட்டில்தான், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் வெற்றி, தோல்வி இருக்கிறது. இந்த பிரதிநிதிகள் தங்கள் வார்டுகளில், தங்கள் பஞ்சாயத்துகளில், தங்கள் பஞ்சாயத்து யூனியன்களில் மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளை செவ்வனே செய்தால் அதன் பலன் அந்த கட்சிக்குத்தான் கிடைக்கும்.

இதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கட்சி அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்களில் இருந்து கட்சி அடிப்படையில்தான் மாவட்ட ஊராட்சி தலைவர்களும், ஊராட்சி ஒன்றிய தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மற்ற பதவிகள் கட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும், உள்ளூர் மக்களுக்கு அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது நன்றாகவே தெரியும். எனவே, எல்லா பதவிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் செயல்பாடுகள் கட்சி அடிப்படையில்தான் மதிப்பிடப்படும். இந்த தேர்தலில் சுயேச்சைகளாகவும் மற்றும் கட்சிகளை சார்ந்தவர்களாகவும் துடிப்புடன்கூடிய இளைஞர்கள் பலர் வெற்றி பெற்றிருப்பது ஜனநாயகத்தில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏராளமான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, நாளைய சமுதாயத்தை உருவாக்கும் இளைஞர் சமுதாயத்தினர், ஜனநாயகத்தை கட்டமைக்கும் பணிகளுக்கு வந்துவிட்டார்கள் என்பது மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. இந்த தேர்தலை நடத்திய அரசு, 4 மாதங்களில் மறுவரையறை பணிகளையும் முடித்து, அந்த 9 மாவட்டங்களிலும் ஊராட்சி தேர்தலை நடத்தவேண்டும். இன்னும் நடத்தப்படாமல் இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களையும் உடனடியாக நடத்தவேண்டும்.

Next Story