தாங்க முடியுமா இந்த விலை உயர்வை?
‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறிகட்டும்’ என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அதுதான் இப்போது இந்திய பொருளாதாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இந்தியா கூட ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. ஈரானை அச்சுறுத்தும் வகையில் அதன் அண்டை நாடான ஈராக்கில், அமெரிக்கா தன் ராணுவத்தை குவித்து வருகிறது. பதிலுக்கு பதில் என்ற வகையில் ஈரானும், ஈராக்கில் தன் ராணுவத்தை குவித்து வருகிறது. போர்க்களத்தில் மோதுவதுபோல, இரு நாட்டு படைகளுக்கும் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈராக்கில், அமெரிக்க ராணுவ படை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதிலிருந்து இரு நாட்டு ராணுவமும் மாறி மாறி அடுத்தவர் மீது குண்டு வீச்சுகளை நடத்தின. அமெரிக்க தூதரகத்துக்குள் ஈரான் ராணுவ படை அத்துமீறி நுழைந்து கையெறி குண்டுகளை வீசியதை, அமெரிக்கா பெரிய அவமானமாக கருதியது. இதற்கு பழிதீர்க்கும் விதமாக ஈரான் ராணுவத்தில் ஒரு அங்கமான இஸ்லாமிய புரட்சி படையின் தலைமை தளபதி காசிம் சுலைமானியை ஈரான் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே காரில் ஏறிக்கொண்டு இருந்தபோது, அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானங்கள் தாழப்பறந்து சரியாக குறிபார்த்து ஏவுகணைகளை வீசியது. இதில் காசிம் சுலைமானி மட்டுமல்லாமல், துணை தளபதி உள்பட 7 பேர் உயிர் இழந்தனர். இதற்கு பிறகும் தாக்குதல்கள் தொடர்கின்றன. இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. உலகம் முழுவதும் இதைத்தான் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கிறது.
இதன் எதிரொலியாக இந்திய பங்குசந்தையில் தொடர்ந்து சரிவு ஏற்படுகிறது. நிப்டி 233.60 புள்ளிகளும், சென்செக்ஸ் 787.98 புள்ளிகளும் சரிந்துவிட்டது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.31,188 ஆக எகிறிவிட்டது. வெள்ளி விலையும் உயர்ந்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 70.23 டாலராகிவிட்டது. இதனால் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், இந்திய பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும். கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்ந்தால், நடப்பு கணக்கு பற்றாக்குறை 0.40 சதவீதம் அதிகரிக்கும். பண மதிப்பு 3 முதல் 4 சதவீதம் குறையும். பணவீக்கத்தையும் 0.24 சதவீதம் உயர்த்தும்.
ஏற்கனவே இந்திய பொருளாதாரம் 4.5 சதவீதத்தில்தான் இருக்கிறது. உற்பத்தி வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் என பெரும்பாதிப்பால் நாடு உழன்று கொண்டு இருக்கிறது. பொருளாதார நிலையை சீர்படுத்த மத்திய அரசு மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவரும் நேரத்தில், சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதுபோல, அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில், இதிலிருந்து மீள எடுக்கவேண்டிய நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஏற்கனவே கடும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில், இந்த பெட்ரோல்-டீசல் விலை உயர்வினால் மேலும் பொருட்கள் குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் இருக்கிறது. இனிமேலும் விலை உயர்வை மக்களால் தாங்க முடியாது. இந்த நிலையை தவிர்க்க, பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைத்து, விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.
Related Tags :
Next Story