கவர்னர் உரையில் செயலாக்க விவரங்கள்


கவர்னர்  உரையில் செயலாக்க  விவரங்கள்
x
தினத்தந்தி 7 Jan 2020 10:30 PM GMT (Updated: 2020-01-07T21:51:17+05:30)

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்திலும், தமிழக அரசு சட்டசபையிலும் பட்ஜெட் தாக்கல் செய்கிறது.

வ்வொரு ஆண்டும் மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்திலும், தமிழக அரசு சட்டசபையிலும் பட்ஜெட் தாக்கல் செய்கிறது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் கூட்டுக்கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார். இதுபோல தமிழக சட்டசபையிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு கவர்னர் உரையாற்றுவார். இந்த உரைகளில் ஒருசில அறிவிப்புகள் இடம்பெறுமே தவிர பெரியஅளவில் அறிவிப்புகள் வெளியிடப்படாது. ஆனால் அரசின் கொள்கைகள் கோடிட்டு காட்டப்படும். அந்தவகையில், நேற்று முன்தினம் தமிழக சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இந்த உரையில் பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் அரசின் ‘ரிப்போர்ட் கார்டு’ என்று கூறப்படும் அளவில் செயலாக்க விவரங்கள் இடம்பெற்றுள்ளன. உரையின் தொடக்கத்திலேயே தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு, இந்த அரசு. 2011–ம் ஆண்டு மே மாதம் முதல், கவர்னர் உரைகளில் அறிவிக்கப்பட்ட 105 அறிவிப்புகளில், 73 அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு, மீதமுள்ள அறிவிப்புகள் பல்வேறு நிலைகளில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

2017–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள், விதி எண் 110–ன் கீழ், தமிழ்நாடு முதல்–அமைச்சர் இதுவரை 453 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றில், 114 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், 303 அறிவிப்புகளுக்குத் தேவையான ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவையும் விரைவில் நிறைவு செய்யப்படும். இந்த அரசு, அனைத்து அறிவிப்புகளையும் திறம்படச் செயல்படுத்தி வருவதை இது தெளிவாக்குகிறது என்று கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக இவ்வாறு வெளிப்படையாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. ஆனால் இந்த வேகம் போதாது. ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்புகளை இன்னும் வேகமாக செயல்படுத்த வேண்டும். குறிப்பாக 110–வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அதன் செயல்பாடுகளை கண்காணிக்க சிறப்பு பணி அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயரை நியமித்திருந்தார். அவர் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுவதை மிகத்தீவிரமாக கண்காணித்து சம்பந்தப்பட்ட துறைகளை ஊக்கப்படுத்தினார். 

அதுபோல இப்போதும் கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் 110–வது விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் பொறுத்தமட்டில், இவ்வளவு அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றாலும், நிறைவேற்றப்படாமல் இருக்கும் அறிவிப்புகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்ற முடியுமோ, அவ்வளவு விரைவாக நிறைவேற்றி முடிக்க வேண்டும். மற்றொரு அறிவிப்பாக உள்ளாட்சி தேர்தலில் இன்னமும் நடத்தப்பட வேண்டிய 9 மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரைவாக தேர்தல் நடத்தப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கவர்னர் உரையில் இந்த அறிவிப்பை பார்க்கும்போது, மீதமுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலையும், அதுபோல, 37 மாவட்டங்களிலும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலையும் நடத்திவிடுவோம் என்று உறுதி அளித்திருப்பது மிகவும் நம்பிக்கையை அளிக்கிறது. 9 மாவட்டங்களிலும் மறுவரையறை பணிகளை முடிக்க 4 மாத காலம் அவகாசம் இருக்கிறது என்றாலும், எவ்வளவு சீக்கிரத்தில் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடித்து தேர்தலை நடத்த வேண்டும். அதுவரையில் காத்திருக்காமல், மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்துவிடலாம். அடுத்து 9 மாவட்டங்களிலும், சென்னையிலும் ஒரேநேரத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்திவிட முடியும். மொத்தத்தில் கவர்னர் உரையில் புதிய அறிவிப்புகள் இல்லாவிட்டாலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்புகள் எந்தநிலையில் இருக்கின்றன என்பதை காட்டும் ஒரு பதிவேடாக இருக்கிறது.

Next Story