அதிக விவசாயிகள் பயன் பெறவேண்டும்


அதிக விவசாயிகள் பயன் பெறவேண்டும்
x
தினத்தந்தி 9 Jan 2020 10:30 PM GMT (Updated: 2020-01-09T21:47:35+05:30)

‘‘உழவன் சேற்றிலே கால் வைத்தால்தான், நாம் சோற்றிலே கைவைத்து சாப்பிட முடியும்’’ என்று ஒரு வழக்கு மொழி உண்டு.

‘‘உழவன் சேற்றிலே கால் வைத்தால்தான், நாம் சோற்றிலே கைவைத்து சாப்பிட முடியும்’’ என்று ஒரு வழக்கு மொழி உண்டு. அந்த வகையில், எல்லோருக்கும் சாப்பாடு போடும் தொழில் விவசாயம். ஆனால், கடினமான உழைப்பை, கணிசமான அளவு பணத்தை செலவழித்து மேற்கொள்ளும் விவசாயத்தில், விவசாயிகளுக்கு உரியவிலை கிடைப்பதில்லை. விலை இருந்தால், விளைச்சல் இல்லை. விளைச்சல் இருந்தால், விலை இல்லை என்ற நிலையில்தான் அவர்கள் வாழ்க்கை சக்கரம் ஓடுகிறது. விதைப்பதில் இருந்து அறுவடை செய்யும் வரை  பல இடர்பாடுகளை சந்தித்து நித்தம் நித்தம் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் விவசாயிகள். 

இவ்வாறு உழைக்கும் விவசாயிகளுக்கு செய்யும் ஒவ்வொரு சிறு உதவியும், பெரிய உதவியாக கைகொடுக்கும். அந்தவகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப்பிறகு பிரதமர் நரேந்திரமோடி, சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கும் பி.எம். கிசான் என்ற நிதி உதவி திட்டத்தை தொடங்கிவைத்தார். ஒவ்வொரு தவணையிலும் ரூ.2 ஆயிரம் கிடைக்கும். பயிர் சாகுபடியின்போது இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்காக உதவும் இந்த திட்டத்தின் பலனை, தற்போது நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளும் அடைய முடியும். இதுவரையில் 2 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் தும்கூரில் நடந்த விழாவில், 3–வது தவணைத்தொகையான தலா ரூ.2 ஆயிரத்தை நாடு முழுவதும் உள்ள 6 கோடி விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இதற்காக 12 ஆயிரம் கோடி ரூபாயை விவசாயிகளுக்கு அதேநாளில் அவர்களது வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது. மொத்தம் 79 லட்சத்து 38 ஆயிரம் விவசாயிகள் உள்ள தமிழ்நாட்டில், இந்த திட்டத்தில் இதுவரை சுமார் 36 லட்சத்து 23 ஆயிரம் விவசாயிகள்தான் இணைந்துள்ளனர். இன்னும் அதிகமான விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைய முடியும். ஆனால், விவசாயிகளிடையே சரியான விழிப்புணர்வு இல்லாததாலும், இதற்கான நடைமுறைகள் ஆரம்பகாலங்களில் கிராம நிர்வாக அதிகாரியிடம் போய் பதிவு செய்யவேண்டும் என்று பல நிர்வாக சிக்கல்கள் இருந்ததாலும் அதிகம் பேர் பதிவு செய்யவும் இல்லை. பதிவு செய்தவர்களுக்கு கிடைக்கவும் இல்லை.

இந்த நிலையில், தமிழக வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் பல சேவைகளை உள்ளடக்கி ‘உழவன்’ என்ற பெயரில் ஒரு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த உழவன் செயலியில் தாங்களாகவே பி.எம். கிசான் என்ற வலைதளத்தில் தங்களை பதிவு செய்துகொண்டு, பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் பலனை பெறமுடியும். அதன்படி, உழவன் செயலியில் பயனாளி முன்பதிவு சேவை என்னும் பக்கத்தில் இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. உழவன் செயலியை ஆண்ட்ராய்டு செல்போனில் கூகுள்பிளே மற்றும் ஐபோனில் ஆப் ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்யலாம் என்று வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். தற்போது இந்த செயலியில் 90,292 விவசாயிகள் சேர்ந்துள்ளனர். எனவே, இப்போது நிதி உதவி பலனை பெறுவது விவசாயிகளின் கையில்தான் இருக்கிறது. நிறைய பேர் தங்களை பதிவு செய்து இதன் பலனை பெறவேண்டும். நில உரிமையாளர்களுக்கு மட்டுமே இந்த ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. குத்தகை எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கோ, கோவில் நிலங்களில் உள்ள குத்தகை விவசாயிகளுக்கோ, நிலம் இல்லாமல் கூலி வேலைசெய்யும் விவசாயிகளுக்கோ இந்த திட்டத்தின் நிதி உதவி வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கும் இந்த திட்டத்தின் பலனை வழங்க நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும். தமிழக அரசும், பிரதமரிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

Next Story