சிறுசேமிப்புக்கு வட்டி குறைப்பு இல்லை


சிறுசேமிப்புக்கு வட்டி குறைப்பு இல்லை
x
தினத்தந்தி 10 Jan 2020 10:30 PM GMT (Updated: 2020-01-10T21:45:17+05:30)

சிக்கனமாக வாழணும், சேர்த்து வைக்க பழகணும், என்று பழைய திரைப்பட பாடல் ஒன்று உண்டு.

சிக்கனமாக வாழணும், சேர்த்து வைக்க பழகணும், என்று பழைய திரைப்பட பாடல் ஒன்று உண்டு. நீண்ட பல ஆண்டுகளாகவே இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு சிறு அளவாவது சேமித்து வைக்க வேண்டும் என்ற உணர்வு மக்களிடம் இருக்கிறது. பிள்ளைகளின் படிப்பு செலவு, வீடு வாங்க, சொத்து வாங்க, பிள்ளைகளின் திருமண செலவுக்கு என்பதோடு மட்டுமல்லாமல், எல்லாவற்றுக்கும் மேலாக சம்பாதிக்க முடியாமல் ஓய்வெடுக்கும் காலத்தில் தங்களை தாங்களே கவனித்துக்கொள்ள பணம் வேண்டும் என்ற நோக்கிலும் மக்கள் சேமித்து வைக்கிறார்கள். பொதுவாக அரசு பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஓய்வு காலத்தில் பென்ஷன் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு அவர்கள் பணியில் இருக்கும்போதும், உழைக்கும் வகையில் சக்தி இருக்கும் போதும், வேலை பார்த்த பணத்தில் மிச்சம் பிடித்து சேமித்து வைக்கும் சேமிப்புகள்தான் முதிர்வயதில் கைகொடுக்கும். அந்தவகையில், வங்கிகளில் டெபாசிட் செய்தும், தபால் அலுவலகங்களில் உள்ள சிறுசேமிப்புகளில் பணத்தை முதலீடு செய்தும்தான் சேமித்து வைக்கும் நிலை இருக்கிறது.

இந்தநிலையில் ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு வங்கிகளிடம் இருந்து கடனாக பெறும் தொகைக்கான வட்டியை இதுவரை 1.35 சதவீதம் குறைத்து இருக்கிறது. அதன்காரணமாக வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டித்தொகையும் ஒரு சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி ஆண்டில் கடந்த 9 மாதங்களாக தபால் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைக்கப்படவில்லை. தபால் அலுவலகங்களில் இருக்கும் சேமிப்புகளுக்கும், பிராவிடண்ட் பண்டு (பி.எப்.) போன்றவற்றுக்கும் அளிக்கப்படும் வட்டி விகிதத்தை அரசு குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது. வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதம் ரிசர்வ் வங்கி அறிவிக்கும் நிதிக்கொள்கைகளின் படி நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது வங்கி வட்டியைவிட, தபால் அலுவலகங்களில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி கூடுதலாக இருக்கிறது. அந்த வட்டியையும் வங்கி வட்டிகளுக்கு நிகராக இருக்கும்படி ஒரே சீரான அளவில் குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியும் இந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்துக்கு தபால் அலுவலகங்களில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தொகைகளுக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அரசு அறிவித்து இருக்கிறது. இது மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. குறிப்பாக இந்த வட்டியை நம்பி வாழ்க்கை நடத்தும் முதியோர்கள் பெரும் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.

வருமானவரி சீரமைப்பு குழு சிறுசேமிப்பு வட்டி வருமானத்துக்கு வரிச்சலுகையை ரத்துசெய்ய பரிந்துரைத்து இருந்தாலும், ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டு இன்னும் முதிர்வடையாத முதலீட்டுக்கான வட்டிக்கு வரிச்சலுகை தொடரும் என்ற செய்தியும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுசேமிப்பு திட்ட நிதியத்தில் இருந்து நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு கடனும் வாங்க முடிகிறது. இந்த நிதி ஆண்டில் நிதியத்தில் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசாங்கம் கடனாக பெற்றுள்ளது. ஆக தபால் அலுவலகங்களில் உள்ள சிறுசேமிப்பை ஊக்குவித்தால் மக்களுக்கும் குறிப்பாக வயதானவர்களுக்கும் வாழ்க்கை சக்கரத்தை ஓட்ட மிகவும் பயன் கிடைக்கும். சிறுசேமிப்பு வளர்ந்தால் அரசாங்கம் தன் செலவுகளுக்காக எளிதாக கடன் பெற்றுக்கொள்ள முடியும் என்றவகையில், தபால் அலுவலகங்களில் நிறைவேற்றப்படும் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டித்தொகையை குறைக்காமல் இருந்தால் சமுதாயத்துக்கு பெரும் பயன் கிடைக்கும். இதற்கான வட்டியை குறைத்தால் மக்கள் பரஸ்பரநிதி மற்றும் அதிக வட்டித்தரும் தனியார் நிறுவனங்களை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுவிடும்.

Next Story