மக்கள் சேவையில் ஒன்றாக உழைப்போம்!


மக்கள் சேவையில் ஒன்றாக உழைப்போம்!
x
தினத்தந்தி 13 Jan 2020 11:00 PM GMT (Updated: 2020-01-13T22:26:01+05:30)

மக்களோடு நேரடி தொடர்புள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்கு, கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் தனி அதிகாரிகளின் நிர்வாகத்திலேயே இயங்கி வந்தது.

மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாததால் மத்திய அரசாங்கத்திடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய நிதியும் வராதநிலையில், பல அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமல் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பல பிரச்சினைகளுக்கு நீதிமன்றங்கள்தான் தீர்வு என்ற வகையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல்களை அரசு நடத்தி முடித்திருக்கிறது. இன்னும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் நடக்கவில்லை. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. ஆக, அந்த அமைப்புகளுக்கும் அடுத்த சில மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். தற்போது, மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள், பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர்கள், பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் கட்சி ரீதியாக நடந்தது. இதுதவிர, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமல் நடந்தது.

ஒரு சில இடங்களை தவிர, எல்லா இடங்களிலும் தேர்தல் அமைதியாக நடந்தது. இந்தத் தேர்தலில் பல அதிசயங்கள் நடந்தன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. 244 வார்டுகளிலும், அ.தி.மு.க. 214 வார்டுகளிலும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் தி.மு.க. 2,096 வார்டுகளிலும், அ.தி.மு.க. 1,781 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. வார்டு உறுப்பினர்களை பொறுத்தமட்டில், அ.தி.மு.க.வை விட தி.மு.க.வே கூடுதலாக இடங்களை கைப்பற்றி இருந்தது. ஆனால், தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்தலில் நிலைமை மாறிவிட்டது. மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் அ.தி.மு.க. 13 இடங்களிலும், தி.மு.க. 12 இடங்களிலும், பா.ம.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில், அ.தி.மு.க.- தி.மு.க. ஆகிய இருகட்சிகளும் தலா 8 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தன. அ.தி.மு.க. தரப்பில் உறுப்பினர்கள் தேர்தலில் கலந்துகொள்ள வராததால் போதிய எண்ணிக்கை இல்லாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தலில், அ.தி.மு.க. 7 இடங்களிலும், தி.மு.க. 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பஞ்சாயத்து யூனியன் தலைவர் தேர்தலை பொறுத்த அளவில், அ.தி.மு.க. 140 இடங்களிலும், தி.மு.க. 125 இடங்களிலும், பா.ம.க. 7 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், பா.ஜ.க. 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3 இடங்களிலும், அ.ம.மு.க. 2 இடங்களிலும், சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. துணைத் தலைவர் தேர்தல் அப்படியே மாறிவிட்டது. அ.தி.மு.க. 94 இடங்களிலும், தி.மு.க. 107 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. வெற்றி பெற்றவர்கள் எல்லாம் பதவி ஏற்றுவிட்டார்கள். தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிடவில்லை. எனவே, நிர்வாகத்தில் எந்தத் தவறும் நேரிடமுடியாது. அப்படி நேரிட்டால் அதை எதிர்தரப்பினர் வெளியே கொண்டுவந்து விடுவார்கள். இதுமட்டுமல்லாமல், தேர்தலில் வெற்றிபெறும் வரையில்தான், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்கள், பிரிவினைகள் இருக்க வேண்டுமே தவிர, இனி மக்கள் சேவையில் ஒன்றுபடுவோம், ஒன்றாக உழைப்போம் என்ற வகையில்தான் ஒட்டுமொத்த உறுப்பினர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள் செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். உள்ளாட்சி நிர்வாகம் புத்துயிர் பெறட்டும். 

Next Story