இனி தங்கத்தை நம்பி வாங்கலாம்


இனி தங்கத்தை நம்பி வாங்கலாம்
x
தினத்தந்தி 17 Jan 2020 11:00 PM GMT (Updated: 2020-01-17T21:11:25+05:30)

ஆதிகாலத்தில் மனிதன் பணத்தை புழக்கத்தில் விடுவதற்கு முன்பே தங்கம் பல நாகரிகங்களில் ஒரு மதிப்பு வாய்ந்த உலோகமாக கருதப்பட்டது.

கரன்சி நோட்டுக்களை பொறுத்தமட்டில், ஒரு நாட்டின் பணம் மற்ற ஒரு நாட்டில் ஏற்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தங்கத்துக்கு சென்ற இடத்தில் எல்லாம் மதிப்பு உண்டு. அதிலும் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் தென் மாநிலங்களில் ஏழையோ, பணக்காரர்களோ, படித்தவர்களோ, படிக்காதவர்களோ திருமண பேச்சை எடுத்தாலே பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீர்கள்? என்ற வழக்கம் பெரும்பான்மையான குடும்பங்களில் இருப்பதை யாரும் மறுக்கமுடியாது. கிராமங்களில் அதிலும் குறிப்பாக விவசாயிகள் ஆத்திர அவசரத்துக்கு ஈடுவைத்து பணம்புரட்ட தங்க நகைகள்தான் பெரிதும் உதவும் என்பதால், தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டேபோவதால் அதில் போடும் முதலீடு நல்ல ஒரு சேமிப்பு என்றும் கருதுவோரும் ஏராளமாக உள்ளனர். 

ஆனால் இப்படி வாங்கும் தங்கம் பல நேரங்களில் மாற்று குறைவான தங்கமாக இருப்பதாலும், கலப்பட தங்கமாக இருப்பதாலும் தரம் குறைந்ததாக ஆகிவிடுகிறது. இதன் காரணமாக அந்த தங்கத்தை வாங்கி சில மாதங்களிலேயே அதன்நிறம், தன்மை, பளபளப்பு குறைந்துவிடுகிறது. மற்ற பொருட்களில் கலப்படம் இருந்தால் அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க அரசு துறைகள் இருக்கிறதே இதுபோல, தங்கத்துக்கு இல்லையே என்ற குறை பெண்களிடம் இருந்தது. அந்த குறை இனி இருக்காது. இப்போதே பெரிய நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களை கவர நாங்கள் விற்கும் நகைகளில் ஹால்மார்க் முத்திரை குத்தப்பட்டிருக்கும் என்று விளம்பரப்படுத்துவார்கள். விவரம் தெரிந்தவர்களுக்கு ஹால்மார்க் முத்திரை இருந்தால் அது சொக்கத்தங்கமாகத்தான் இருக்கும் என்று நன்றாகத்தெரியும். ஹால்மார்க் முத்திரை பெறவேண்டும் என்றால், நகைகளை விற்கும் நகைக்கடைகள் இந்திய தரநிர்ணய அலுவலகத்தில் பதிவு செய்திருக்கவேண்டும். இந்தியாவில் இப்போது 3 லட்சம் முதல் 4 லட்சம்வரை நகைக்கடைகள் உள்ளன. ஆனால் இந்திய தரநிர்ணய அலுவலகத்தில் இதுவரை 28,849 நகைகடைகளே பதிவு செய்துள்ளன. 2021–ம் ஆண்டு ஜனவரி மாதம் 15–ந்தேதி முதல் எந்த நகைக்கடையிலும் ஹால்மார்க் இல்லாத நகைகளை விற்பனை செய்யமுடியாது என்ற வகையில், மத்திய அரசாங்கம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதற்குள் அனைத்து நகைக்கடைகளும் இந்திய தரநிர்ணய அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டாக வேண்டும். 

தற்போது 10 கிரேடுகளில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உத்தரவு அமலுக்கு வந்தபிறகு, அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 14 காரட், 18 காரட், 22 காரட் ஆகிய 3 கிரேடுகளில் மட்டுமே தங்கம் விற்பனை செய்யமுடியும். அவ்வாறு விற்பனை செய்யும் ஒவ்வொரு நகையிலும், இந்திய தரநிர்ணய அலுவலக முத்திரை, எத்தனை காரட், பரிசோதனை மையம், நகைக்கடையின் அடையாள முத்திரை ஆகியவை பதிக்கப்பட்டு இருக்கவேண்டும். இவ்வாறு ஹால்மார்க் செய்யப்படாத நகைகளை விற்கும் நகைக்கடைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அல்லது நகையின் மதிப்பில் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் அதோடு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, இனி வாங்கும் தங்கம் சுத்தமான தங்கமாக இருக்குமா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு இருக்காது. நம்பிக்கையுடன் வாங்குவார்கள். நகைக்கடைகளும் அடுத்த ஆண்டுவரை காத்திருக்காமல் உடனடியாக பதிவு செய்து இப்போது ஹால்மார்க் முத்திரை பதிக்கும் கடைகள்போல, அனைத்து கடைகளிலுமே பதிவு செய்யவேண்டும். ஏனெனில், அடுத்த ஆண்டு வாங்கினால் தங்கத்தின் தரம் உயர்ந்ததாக இருக்கும் என்ற உணர்வில், பொதுமக்களும் இப்போது தங்கம் வாங்காமல் தள்ளிப்போட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. இப்போதே பதிவு செய்துவிட்டால் உடனடியாக வியாபாரம் சூடுபிடித்துவிடும்.

Next Story