அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்


அம்மா  இளைஞர் விளையாட்டு  திட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2020 10:30 PM GMT (Updated: 19 Jan 2020 4:55 PM GMT)

தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளிக்கொண்டு வரும் வீரர்கள் இல்லையே என்ற மனக்குறை பொதுவாக எல்லோருக்கும் உண்டு.

மிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளிக்கொண்டு வரும் வீரர்கள் இல்லையே என்ற மனக்குறை பொதுவாக எல்லோருக்கும் உண்டு. இதற்கு அடிப்படையிலேயே விளையாட்டுத்திறமை வேண்டும். இந்த திறமையை கொண்டுள்ளவர்கள் யார்–யார்? என்று கண்டுபிடித்து, அவர்களுக்கு சிறு வயதில் இருந்தே தகுந்த பயிற்சிகளை வழங்க வேண்டும். இப்போதெல்லாம் கிரிக்கெட் விளையாட்டில் கிராமிய சூழ்நிலையில் இருந்து வரும் பல வீரர்கள் நட்சத்திரம் போல மின்னுகிறார்கள். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கிரிக்கெட் அணியில் சிறந்த ஆட்டக்காரர் அதாவது பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலுமே திறமை வாய்ந்த ஆல் ரவுண்டர் என்று பெயர் வாங்கிய அந்தோணிதாஸ், கடலில் போய் மீன்பிடித்துக்கொண்டிருந்த தொழிலாளி. இப்படிப்பட்ட சிறந்த வீரர்களை கண்டுபிடித்து பயிற்சி அளிக்கும் வகையில் ஒரு சிறந்த திட்டத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது.

இந்த நிதி ஆண்டிலேயே அதாவது மார்ச் மாதத்துக்குள் 12,524  ஊராட்சிகளில்  மற்றும்  528  பேரூராட்சிகளில்         ரூ.64 கோடியே 35 லட்சம் செலவில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதை நிறைவேற்றும் வகையில், கடந்த வாரம் திங்கட்கிழமை அன்று காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள கிளாய் ஊராட்சி விளையாட்டு மைதானத்தில், அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை காணொலி காட்சி மூலமாக தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் லோகோவையும் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பல ஊர்களில் இப்போது இந்த திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது. அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக அம்மா விளையாட்டுக்குழு அமைக்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் கபடி, கைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து போன்ற ஏதேனும் 3 விளையாட்டுகளுக்கு களம் அமைக்கும் பணிகள், ஊரக பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழும், பேரூராட்சிகளில் பேரூராட்சி பொதுநிதியில் இருந்தும் மேற்கொள்ளப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களுக்கு ஒவ்வொரு விளையாட்டில் இயற்கையாகவே ஆர்வம் இருக்கும். ஆர்வம் இருக்கும் விளையாட்டுகளில் பயிற்சி அளித்தால் சிறந்த வீரர்கள் உருவாக முடியும். அந்தந்த பகுதிகளில் உள்ள விளையாட்டு ஆசிரியர்கள், படித்த இளைஞர்கள் சமூக சேவையாக பயிற்சியாளர்களாக இருக்கலாம். பல கிராமங்களில் எங்கள் ஊரில் இதற்காக விளையாட்டு மைதானங்கள் இல்லையே என்று இனி கவலைப்பட வேண்டாம்.

இப்போது பஞ்சாயத்துகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், உறுப்பினர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் இந்த பணியை எடுத்தால் ஒரேவாரத்தில் முடிந்துவிடும். அந்த திட்டத்தில் இந்த பணியை மேற்கொள்பவர்களும் நாங்கள் செய்த வேலையால் எங்கள் ஊரில் உருவாக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில், எங்கள் ஊர் ஆண்களும், பெண்களும் விளையாடுகிறார்கள் என்ற வகையில் பெருமைகொள்ளலாம். இந்த இளைஞர்களுக்கு போதிய பயிற்சி அளித்து ஊராட்சி, ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையால் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. முதல்–அமைச்சர் உத்தரவிட்டுவிட்டார். இனி இதை நிறைவேற்றுவது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து தலைவர்களிடம்தான் இருக்கிறது. உறுப்பினர்களும் மன்ற கூட்டத்தில் இதை வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் கிராமப்பகுதிகளில் இருந்து சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாவதில்தான் இந்த திட்டத்தின் வெற்றி இருக்கிறது. விளையும் பயிர்களை முளையிலேயே கண்டுபிடித்து, அவர்களுக்கு பயிற்சி அளித்தால் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த திட்டத்தின் மூலம் ஆயிரமாயிரம் அந்தோணிதாஸ்கள் புதிதாக வரட்டும்.

Next Story