மீண்டும் சர்ச்சைக்குள்ளாகிய ஹைட்ரோ கார்பன் திட்டம்


மீண்டும் சர்ச்சைக்குள்ளாகிய ஹைட்ரோ கார்பன் திட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2020 11:00 PM GMT (Updated: 2020-01-21T21:06:19+05:30)

தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுஉலை திட்டம் என்றாலும் சரி, நியூட்ரினோ திட்டம் என்றாலும் சரி, சேலம்–சென்னை 8 வழிச்சாலை திட்டம் என்றாலும் சரி, ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றாலும் சரி எதிர்ப்பு குரல் எழும்புவது வாடிக்கையாகிவிட்டது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இப்போது பிறப்பித்த உத்தரவுக்கு கடும் கண்டன குரல் எழுப்பப்பட்டுள்ளது. இதுவரையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஆய்வு பணிகள் மத்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் பரிசீலனையில் ‘ஏ’ பிரிவு என்ற அளவில் அதிகபட்ச பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. இந்த பரிசீலனையில் உள்ள திட்டங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திட்டம் உள்ளூர் பகுதி மக்களின் கருத்துக்கேட்பு கூட்டங்களை முடித்து, மத்திய அரசாங்கம் அமைத்த ஒரு குழுவால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அதன் அனுமதியை பெறவேண்டும் என்று இருந்தது. 

தற்போது சுற்றுச்சூழல் அமைச்சகம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசாங்கத்திடம் ஒப்புதல் பெறவேண்டியதில்லை என்று உத்தரவிட்டுள்ளது. ஏனெனில், இதுவரை ஆழ்குழாய் கிணறுகளை தோண்டி ஆய்வு நடத்தும் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் ‘ஏ’ பிரிவில் இருந்த நிலையை மாற்றி, தற்போது பி–2 நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. பி–2 நிலை என்றால், மாநில அரசு ஒப்புதல் அளித்தாலே போதும்.

இவ்வாறு அனுமதி பெறுவதற்கு முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டியதில்லை என்பது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேதாந்தா நிறுவனம், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பிரதேசங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் ஒப்புதலுக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்திருக்கிறது. இந்தப்பகுதிகளில் 274 ஆழ்குழாய் கிணறுகளை தோண்ட அனுமதிக்கேட்டிருந்தது. இதுபோல, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நாகப்பட்டினம், கடலூர் பகுதிகளில் 40 ஆழ்குழாய்கள் தோண்டி, 37 இடங்களில் ஆய்வு நடத்த அனுமதிக்கோரியிருந்தது. இனி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்தான் ஒப்புதல் அளிக்கவேண்டும். ஆக, ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கான அனுமதி வழங்கும் பொறுப்பு இப்போது தமிழக அரசிடம் வந்து சேர்ந்துள்ளது. தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மாற்றம் வேண்டாம், பொதுமக்கள் கருத்து கேட்டே முடிவு செய்யும் பழைய முறையே நீடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

விவசாயிகளை பொறுத்தமட்டில், இந்தத்திட்டம் வந்தால் தங்கள் வேளாண்மை எல்லாம் பாழாகிவிடும். ஆழ்குழாய் கிணறுகளை வேதாந்தா நிறுவனமும், ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் தோண்டுவதற்கு அனுமதி கொடுத்தால் நிலத்தடிநீர் உவர்தன்மை கொண்டதாகிவிடும். நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பிரதேசங்கள் பாலைவனமாக மாறிவிடும் என்ற ஒரு அச்சமும் இருக்கிறது. ஆனால், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தினால் எரிபொருள் தேவையில் வெளிநாடுகளை நம்பியிருக்கும் நிலை குறையும். அந்த பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மத்திய– மாநில அரசுகளுக்கு வருமானம் கிடைக்கும், நிலத்தடிநீர் பாதிக்கப்படாது. ஏனெனில், ஆழ்குழாய் கிணறுகள் நீர்மட்டத்துக்கு கீழே சென்றுவிடும் என்றும் கருத்துகள் கூறப்படுகின்றன.

எனவே, அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும், நிறை குறைகளை ஆராயவேண்டும். பி–2 பிரிவில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளதால், பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டியதில்லை என்றாலும், அரசு எந்த முடிவையும் எடுக்கும் முன்பு பொதுமக்களின் கருத்துகளை கேட்டே முடிவு எடுக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழலில் நல்ல அனுபவம் கொண்ட நிபுணர் கருத்துகளையும் கேட்டு உண்மை நிலையை பொதுமக்களுக்கு தெரிவித்தே முடிவு எடுக்கவேண்டும். மேலும், சட்டசபையில் இதுகுறித்து விரிவான விவாதங்களை நடத்தி உறுதியான ஒரு முடிவை எடுக்கவேண்டும்.

Next Story