பரவட்டும் இந்த மத நல்லிணக்கம்


பரவட்டும் இந்த மத நல்லிணக்கம்
x
தினத்தந்தி 22 Jan 2020 11:00 PM GMT (Updated: 22 Jan 2020 3:17 PM GMT)

எல்லா மதமும் சமமானது. என் மதத்தை போலவே, எல்லா மதங்களையும் மதிப்பேன். எதையும் குறைவாக நினைக்க மாட்டேன். மதங்கள் என்பது வழிபாட்டு முறைதான்.

மதங்கள் என்பது ஒரே உள்ளங்கையை நோக்கி நீளும் விரல்கள் போன்றவை. அதை ஒரே உண்மையை நோக்கி அழைத்து செல்லும் வெவ்வேறு விரல்கள் என்றார் கலீல் இப்ரான். அதேபோல நம்மை மேன்மைப்படுத்துவதற்காகவே மதங்கள். அவை நாம் எப்படி வாழவேண்டும்? என்பதை நெறிப்படுத்தி நேர்மையுடன் திகழ வழிகாட்டுகின்றன. அவை வழிபாடுகளால் வேறுபட்டாலும், அன்பு என்கின்ற ஒற்றை புள்ளியில் இணைந்தால்தான் மானுடம் செழிக்கும், மனிதம் தழைக்கும். இந்த கோட்பாட்டை அண்மையில் கேரளாவில் நிகழ்ந்து இருக்கும் சம்பவம் ரத்தமும், சதையுமாக ஆக்கியிருக்கிறது. 

அன்பினால் மக்களை ஒன்றாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு சம்பவம் கேரளாவில் உள்ள காயம்குளம் அருகே செரவாலி என்ற ஊரில் நடந்து உள்ளது. அந்த ஊரில் இருக்கும் கோவில் அருகே வசித்து வருபவர் பிந்து. ஏழ்மையான விதவைப்பெண். இந்து மதத்தைச் சேர்ந்தவர். அவர் தன் 24 வயதான மூத்த மகள் அஞ்சுவுக்கும், காயம்குளத்தை சேர்ந்த சசி என்பவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுத்த நேரத்தில், தன் வறுமை காரணமாக பணம் இல்லாத சூழ்நிலையில் உள்ளூர் மசூதியில் உள்ள ஜமாத் கமிட்டியின் செயலாளர் நுஜுமுதீனிடம் உதவி கேட்டார். நுஜுமுதீனும் ஜமாத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தியபோது, உதவி என்ன உதவி? நாமே திருமணத்தை நடத்தி வைப்போம். அதுவும் மசூதியிலேயே நடத்தி வைப்போம் என்று சொல்லி மசூதி வளாகத்தில் இந்து முறைப்படி வேதங்கள் ஓத, திருமணத்தை நடத்தி வைத்து இருக்கிறார்கள். எல்லா மதங்களை சேர்ந்த 4 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்த கோலாகல திருமணத்தில் பாயாசம், வடையோடு சைவ விருந்து பரிமாறப்பட்டு இருக்கிறது. மணமகளுக்கு ஜமாத்தின் சார்பில் 10 பவுன் தங்க சங்கிலியும், 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மட்டுமல்லாமல், டி.வி. ரெப்ரிஜிரேட்டர் என்று ஒரு குடும்பம் நடத்த தேவையான அனைத்து பொருட்களையும் பரிசாக வழங்கி உள்ளனர். இந்து முறைப்படி திருமணம் நடந்தாலும், மணமக்கள் மசூதியையும் வழிபட்டு, தலைமை இமாம் ரியாசுதீன் பைசின் ஆசியையும் பெற்றுள்ளனர். திருமணத்தை நடத்தி வைத்த இந்து மத குருவும், முஸ்லிம் தலைமை இமாமும் அருகருகே உட்கார்ந்து மகிழ்வோடு பேசிக்கொண்டே சாப்பிட்டது மத ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் விதமாக இருந்தது. 

பண்டைய காலத்திலும் இவ்வாறு மத ஒற்றுமை இருந்து இருக்கிறது. முகலாய மன்னர் ஸ்ரீரங்கம் கோவிலை சூறையாடி உற்சவரான நம்பெருமாள் சிலையை எடுத்துச் சென்ற நேரத்தில், அவரது மகள் பீவி நாச்சியார் அந்த சிலையை பத்திரமாக வைத்திருந்து ஸ்ரீரங்கம் கோவிலின் பக்தர்களிடம் திருப்பி ஒப்படைத்துவிட்டு மரணமடைந்துவிட்டார். அவரை இன்னமும் ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ஜூனன் மண்டபம் வடகிழக்கு மூலையில் ஒரு சன்னதி அமைத்து வழிபடுகிறார்கள். தினமும் ரொட்டியும், வெண்ணையும் படைக்கப்படுகிறது. ஆக இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பீவி நாச்சியார் என்ற அந்த அம்மனை வழிபட்டு செல்கின்றனர். மொத்தத்தில் கோவில்கள் மத நல்லிணக்கத்தை பின்பற்ற கூறுகிறது. இதேபோல, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பல கேரள சம்பவங்கள் எல்லா மதங்களிலும் நடக்க வேண்டும். எல்லா மதமும் சமமானது. என் மதத்தை போலவே, எல்லா மதங்களையும் மதிப்பேன். எதையும் குறைவாக நினைக்க மாட்டேன். மதங்கள் என்பது வழிபாட்டு முறைதான். மனிதநேயம்தான் எல்லாவற்றுக்கும் மேலானது. எல்லா மதத்தினரும் ஒரு தாய் பெற்ற மக்களே என்ற உணர்வு ஆழமாக பதிய எல்லா மத தலைவர்களும் முனைப்புடன் செயல்பட்டால், எந்த பிரிவினையும் மத அடிப்படையில் நமக்குள் வராது. ஓங்கி வளரட்டும் மத நல்லிணக்கம்.

Next Story