எய்ம்ஸ் மருத்துவமனை வருமா?, வராதா?


எய்ம்ஸ் மருத்துவமனை வருமா?, வராதா?
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 2020-01-23T21:02:02+05:30)

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும், ஆனால் வராது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுமோ? என்ற அச்சம், சந்தேகம், பொதுமக்களிடம் இப்போது வந்துவிட்டது.

இந்தியாவிலேயே அனைத்து மருத்துவ வசதிகளையும் கொண்ட மருத்துவமனை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை. 2015–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28–ந்தேதி மத்திய பட்ஜெட்டை அப்போதைய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்யும்போது, ஜம்மு–காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாசலபிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். 

பட்ஜெட்டில் அறிவிப்பு வந்தவுடன் தமிழக மக்கள் பெருத்த மகிழ்ச்சி அடைந்தனர். அந்த ஆண்டே இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிடும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. அனைத்து வசதிகளும் கொண்ட 5 இடங்களை தேர்வுக்கு அனுப்பவேண்டும். அதில் ஒரு இடத்தை மத்திய அரசாங்கம் தேர்வு செய்து அனுப்பும் என்ற நடைமுறைக்கு ஏற்ப, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், அப்போது செயலாளராக இருந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் 5 இடங்களை தேர்வு செய்து அனுப்பினார்கள். 

அதன்பின் 2018–ம் ஆண்டு ஜூன் மாதம் 18–ந்தேதி டெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாம் என்ற முடிவை எடுத்து, அதற்கான ஆணையையும் தமிழக அரசுக்கு, மத்திய அரசாங்கம் அனுப்பியது. ஆக, அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் கழித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. 224.24 ஏக்கரில் அமைய உள்ள இந்த மருத்துவமனையில், 750 படுக்கை வசதிகள், 16 ஆபரே‌ஷன் தியேட்டர்கள், 18 ஸ்பெஷாலிட்டி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி அமைக்கப்படும். மேலும் 100 மாணவ–மாணவிகள் படிக்கும் மருத்துவ கல்லூரி, 60 பேர் படிக்கும் செவிலியர் கல்லூரி இங்கு இருக்கும் என்றெல்லாம் கூறி, இதற்காக ரூ.1,264 கோடி செலவாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2019–ம் ஆண்டு ஜனவரி 27–ந்தேதி பிரதமர் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வந்து அடிக்கல் நாட்டினார். 

பிரதமரே அடிக்கல் நாட்டிவிட்டார், இனி உடனடியாக பணி தொடங்கிவிடும் என்று எதிர்பார்த்த வேளையில், சுற்றுச்சுவர் கட்டுவதற்காக மட்டும் ரூ.5 கோடி ஒதுக்கிவிட்டு, அந்த பணிதான் நத்தை வேகத்தில் இப்போது நடந்து வருகிறது. எப்போதுதான் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்று கேட்டால், ஜப்பான் நாட்டு நிதி நிறுவனமான ஜிகாவிடம் கடன் கேட்டு இருக்கிறோம். அவர்கள் கடன் தந்தவுடன் வேலைகளைத் தொடங்கி விடுவோம் என்கிறார்கள். ஜிகா நிறுவனத்தின் நிபந்தனைகளையெல்லாம் பூர்த்தி செய்தால், மத்திய அரசாங்கம் மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின் ஒப்புதலோடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜப்பான் நாட்டின் நிறுவனத்திடம் இருந்து அப்படியே கடன் கிடைத்து வேலைகளை தொடங்கினாலும், குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. பிரதமர் அடிக்கல் நாட்டியும் ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இனி எல்லாமே திட்டப்படி நடந்தால்தான், அடுத்த 5 ஆண்டுகள் கழித்தாவது எய்ம்ஸ் மருத்துவமனை வரும். 

எனவே, அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்துதான் ஒரு திட்டம் நிறைவேற்றப்படும் என்றால், தாமதம் ஆக ஆக திட்டச் செலவும் அதிகமாகும். இதனால் அதற்கு மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நிலையில், இனியும் தாமதம் இல்லாமல் எல்லாப்பணிகளையும் முடிக்க தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்வதற்காக வாதாடி, போராடி வெற்றி பெறவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Next Story