முறைகேடு இல்லாத அரசு பணியாளர் தேர்வு


முறைகேடு இல்லாத அரசு பணியாளர் தேர்வு
x
தினத்தந்தி 24 Jan 2020 11:00 PM GMT (Updated: 2020-01-24T20:39:01+05:30)

தமிழ்நாட்டில் படித்துவிட்டு, வேலையில்லா இளைஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது அரசு பணிதான்.

பல பணிகளில் சேர்வதற்கு உயர் படிப்பு படித்தவர்கள் இந்த வேலையாவது கிடைத்தால் என் குடும்பம் பிழைக்குமே, எதிர்காலம் தழைக்குமே என்ற எண்ணத்தில் தேர்வு எழுதுகிறார்கள். ஒருசில ஆயிரம் பணிகளுக்கு பல லட்சம் இளைஞர்கள், இளம் பெண்கள் தேர்வு எழுதுகிறார்கள். இவர்கள் எல்லாம் தேர்வுக்கு இரவு–பகலாக விழுந்து, விழுந்து படித்து நம்பிக்கையுடன் தேர்வு எழுதுகிறார்கள். அவர்கள் நம்பிக்கை எல்லாம் தேர்வு நியாயமாக நடக்கும். திறமை உள்ளவர்கள், தேர்வை நன்றாக எழுதியவர்கள் தானாக தேர்ச்சி பெறுவார்கள் என்பதுதான். 

ஆனால் அந்த நம்பிக்கை பொய்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் நடத்திய குரூப்–4 தேர்வில் நடந்த முறைகேடு பெரிய அளவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பணிகளை உள்ளடக்கிய 9 ஆயிரத்து 398 பணிகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் 1–ந்தேதி குரூப்–4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் எழுதினார்கள். 72 நாட்களில் தேர்வுத்தாள்களை திருத்தி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 24 ஆயிரத்து 260 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடந்து வருகிறது. இந்த தேர்வில் முதல் 100 இடங்களை கீழக்கரை மற்றும் ராமேசுவரம் தேர்வு மையங்களில் மட்டும் எழுதியவர்கள் பெற்று இருப்பதை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கண்டுபிடிக்கவில்லை. சமூக வலைதளங்களும், ஊடகங்களும் மட்டுமே இந்த உண்மையை வெளிச்சம் போட்டு காட்டின. அதன்பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை’ என்ற பழமொழிக்கு மாறாக, ‘கண்ணாடியை பயன்படுத்தி கைப்புண்ணை கண்டுபிடித்தது’. இதில் அந்த மையங்களில் தேர்வு பணிகளில் ஈடுபட்டவர்களின் துணையோடு இடைத்தரகர்களின் முயற்சியால் மிக நூதனமுறையில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேர்வு எழுதும்போது, சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையினால் எழுதிவிட்டு, பிறகு விடைத்தாள்களில் திருத்தம் செய்து முதல் 100 இடங்களுக்குள் வரும்வகையில் அதிக மதிப்பெண்களை பெற முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், இந்த 2 மையங்களிலும் அந்தப்பகுதியில் உள்ளவர்கள் மட்டும் தேர்வு எழுதவில்லை. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலர் அந்த மையங்களை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதினர். 

ஆக மிகப்பெரிய அளவில் இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, இடைத்தரகர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்போது 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நிச்சயமாக போதாது. டி.ஜி.பி. ஜாபர்சேட் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. சிறப்பு குழுக்களை அமைத்து தீவிர விசாரணை செய்து வருகிறது. உடனடியாக 3 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் விசாரணை வளையத்தில் உள்ளனர். சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடிந்தவுடன் யார்–யார்? பொறுப்போ அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கவேண்டும். நடந்து முடிந்த முறைகேடுகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முழு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்வில் மட்டுமல்ல, இதற்கு முன்பு நடந்த தேர்வுகளிலும் இதுபோல முறைகேடுகள் நடந்து இருக்கிறதா? என்பதையும் விரிவாக விசாரிக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடிவை அடிப்படையாக வைத்து, அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தை சீர்திருத்தம் செய்யவேண்டும். எந்தவித முறைகேடுகளுக்கும், குறைபாடுகளுக்கும் இடம் அளிக்காமல், அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நேர்மையாக எதிர்காலத்தில் நடத்த வேண்டும். அதற்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடிவு ஒரு நல்ல பாதையை காட்டட்டும்.

Next Story