அணைகள்-தடுப்பணைகள் வேண்டும்


அணைகள்-தடுப்பணைகள் வேண்டும்
x
தினத்தந்தி 26 Jan 2020 9:30 PM GMT (Updated: 26 Jan 2020 5:07 PM GMT)

விவசாயிகளின் வாழ்வு வளம்பெற அவர்களுக்கு எப்போதும் சாகுபடிக்கு தண்ணீர் வேண்டும் என்ற அளவில் வீணாக கடலில்போய் கலந்து கொண்டிருந்த தண்ணீரையெல்லாம் தடுத்து நிறுத்தி அணைகள் கட்ட திட்டம் தீட்டியதில் அவருக்கு நிகர் அவரே.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் நிறைய அணைகள் கட்டப்பட்டன என்பதை சரித்திரம் இன்றும் கூறும். விவசாயிகளின் வாழ்வு வளம்பெற அவர்களுக்கு எப்போதும் சாகுபடிக்கு தண்ணீர் வேண்டும் என்ற அளவில் வீணாக கடலில்போய் கலந்து கொண்டிருந்த தண்ணீரையெல்லாம் தடுத்து நிறுத்தி அணைகள் கட்ட திட்டம் தீட்டியதில் அவருக்கு நிகர் அவரே. அந்தவகையில், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் பயன்பெற வைகை ஆற்றின் குறுக்கே, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் மேல்மங்கலம் கிராமம் அருகே அவர் ஆட்சிக்காலத்தில் கட்டிய அணை கடந்த 21-ந்தேதி 61 ஆண்டுகளை முடித்து கம்பீரமாக மக்களுக்கு தாகத்துக்கு குடிநீரையும், பாசனத்துக்கு தண்ணீரையும் வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அணை 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. திட்டமிட்ட காலக்கெடுவைவிட முன்கூட்டியே கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை கட்ட மொத்த செலவு 3 கோடியே 33 லட்சம் ரூபாய்தான்.

வடகிழக்கு பருவமழை நேரத்தில் மட்டும் வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி ஏராளமான தண்ணீர் கடலில் போய் கலக்கிறது என்பதை அறிந்த காமராஜர் இந்த அணையை கட்ட உத்தரவிட்டார். பெரியாறு மற்றும் வைகை ஆற்றின் தண்ணீர் இந்த அணையில் சேமிக்கப்படுகிறது. இந்த அணையினால் 1 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இதன் முழு நீர்மட்டம் 71 அடி என்றாலும், 1981, 1984, 1987, 1992, 1993, 1994, 1997, 1998, 1999, 2005, 2006-ம் ஆண்டுகளில் முழு கொள்ளளவையும் தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 7 மதகுகளுடன் கூடிய இந்த அணையில் இரு பக்கங்களிலும் 2 அழகிய பூங்காக்கள் இருக்கின்றன. இரவில் ஒளி வெள்ளத்தில் பூங்காக்கள் ஜொலிக்கும். இதனால் இந்த அணை ஏராளமான சுற்றுலா பயணிகளை வரவழைக்கிறது. இந்த அணையில் இப்போது 20 அடிக்கு மேலாக மண்மேடாக இருக்கிறது. இதை தூர்வாரினால் அதிக அளவு தண்ணீரை சேமித்து வைக்கமுடியும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

தமிழக மக்கள் மிகுந்த நன்றி உடையவர்கள். அதிலும் குறிப்பாக வேளாண் குடி பெருமக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக அணை கட்டியவர்களை எத்தனை நூற்றாண்டுகளானாலும் மறப்பதில்லை. அந்தவகையில் வைகை அணை, மணிமுத்தாறு, சாத்தனூர் போன்ற பல அணைகளை கட்டிய காமராஜர், கி.பி. 1-ம் நூற்றாண்டில் கல்லணையை கட்டிய கரிகால் சோழன், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக், பெருஞ்சாணி அணையை கட்டிய மூக்கன்துரை, ஸ்ரீவைகுண்டம் அணையை கட்டிய கலெக்டர் பக்கிள் என்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அணையையும் கட்டிய ஆங்கிலேயர்களாகட்டும், தமிழக முதல்-அமைச்சர்களாகட்டும் மக்கள் இன்றளவும் மறப்பதில்லை. கல்லணை தமிழ்நாட்டிலேயே பழமையான அணை என்பது மட்டுமல்லாமல், உலகிலேயே பழமையான மற்றும் செயல்பாட்டில் இருக்கும் 4-வது அணையாகும். இதுபோல, தமிழக அரசும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் போர்க்கால அடிப்படையில் தூர்வாரவும், ஆழப்படுத்தவும், புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்னமும் பருவமழை அதிகமாக பெய்தால் பல ஆறுகளில் தண்ணீர் வீணாக கடலில்போய் பாய்கிறது. இவ்வாறு கடலில் போய் கலந்துவிடாமல் தடுக்க அணைகள் கட்ட வாய்ப்பு இருக்கிறதா?, தடுப்பணைகளை எங்கு எங்கு கட்டலாம்? என்பதையெல்லாம் விரிவாக ஆய்வு செய்து பெரிய அளவில் தண்ணீர் கடலில் போய் கலக்காதவகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் இப்போது மட்டுமல்ல, எக்காலத்திலும் விவசாயிகள் மறக்கமாட்டார்கள். இதுபோல, எப்படிப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பழைய அணைகள் கட்டப்பட்டிருக்கின்றன? என்பதை தீவிரமாக ஆராய்ந்து, அதுபோன்ற தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்து நவீன தொழில்நுட்பங்களையும் இணைத்து புதிதாக அணைகளையும், தடுப்பணைகளையும் கட்டவேண்டும்.

Next Story