கொரோனா வைரசை நுழைய விடக்கூடாது


கொரோனா வைரசை நுழைய விடக்கூடாது
x
தினத்தந்தி 28 Jan 2020 9:30 PM GMT (Updated: 2020-01-28T23:14:53+05:30)

உலக நாடுகள் இப்போது கொரோனா வைரஸ் தாக்குதல் தங்கள் நாட்டில் நுழைந்துவிடுமோ? என்ற அச்சத்தில் உறைந்துபோய் நிற்கின்றன. சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரைத்தான் முதலில் இந்த பயங்கர நோய் தொற்றான கொரோனா வைரஸ் தன் கோரக்கரங்களால் தீண்டியது.

கடந்த ஆண்டு இறுதி நாளான டிசம்பர் 31-ந்தேதிதான் சீனா தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என்ற தகவலை உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பியது. முதல் உயிர் இழப்பு கடந்த 11-ந்தேதி ஏற்பட்டது. அதிலிருந்து இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கொத்துக்கொத்தாய் அதிகரித்துக்கொண்டு வருகிறது. வவ்வால் மூலம் இந்த வைரஸ் உருவாகி, பாம்புகள் மூலம் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஹுபெய் மாகாணத்தில் மட்டுமல்லாமல், மேலும் 5 மாகாணங்களிலும் இந்த வைரஸ் தாக்குதல் உள்ளது. காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, சளிப்பிடித்தல், தலைவலி, வயிற்றோட்டம் போன்றவை இதற்கான அறிகுறிகள். இதுவரையில் சீனாவில் உகான் நகரைச்சுற்றி மட்டும் 106 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்து இருக்கிறார்கள். சீனாவில் மட்டும் 4,500-க்கும் அதிகமானவர்களுக்கும், வெளிநாடுகளில் 44 பேருக்கும் இந்த நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இலங்கைக்கு ஹுபெய் மாகாணத்தில் இருந்து சுற்றுலா பயணம் வந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சீனாவில் இப்போது எல்லா இடங்களிலுமே மக்கள் முகக்கவசம் அணிந்துகொண்டு செல்வதைத்தான் பார்க்க முடிகிறது. அங்கு சாதாரண முகக்கவசத்தால் இந்த கொரோனா வைரசை தடுக்கமுடியாது என்பதால் “என்95” என்ற முகக்கவசமே பாதுகாப்புக்கான நோய்தடுப்பு என்ற வகையில், இந்தியாவில் இருந்து இந்த முகக்கவசம் இப்போது இரட்டிப்பான விலை கொடுத்து இறக்குமதி செய்யப்படுகிறது. சீனாவில் இப்போது வசந்தகால திருவிழா நடக்கிறது. இதையொட்டி உகான் மற்றும் அந்த நகரைச்சுற்றி உள்ள 50 லட்சம் பேர் விடுமுறைக்காக வெளியே சென்று இருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேர் இந்த நோய் தொற்றைக்கொண்டு சென்று இருக்கிறார்களோ? என்ற அச்சம் இப்போது ஏற்பட்டு இருக்கிறது. உகான் நகரிலிருந்து இந்த வசந்தகால திருவிழாவை முன்னிட்டு எந்தெந்த நாடுகளுக்கு மக்கள் சென்று இருப்பார்கள் என்ற விவரம் எல்லாம் தெரியாத நிலையில், எல்லா நாடுகளிலும் விமான நிலையங்களில் பலத்த பரிசோதனை செய்யப்படுகிறது.

உகான் நகரில் உள்ள 250 முதல் 300 வரையிலான இந்திய மாணவர்களை அங்கிருந்து இந்தியா அழைத்துவர அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துவருகிறது. தமிழக அரசும், சீனாவில் உள்ள தமிழர்களுக்கு அனைத்து வசதிகளையும் அளிப்பது உறுதி செய்யப்பட அங்குள்ள இந்திய தூதரகத்தோடு தொடர்பில் இருக்கிறது. ஹாங்காங்கில் இருந்து மட்டும் தினமும் 300 பயணிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேருகிறார்கள். அவர்களில் யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறதா? என்பதை கண்டறிந்து உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி நடவடிக்கை எடுக்க சென்னை விமான நிலையத்தில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? என்பதை பார்வையிட மத்திய சுகாதாரத்துறையில் இருந்து 3 பேர் கொண்ட மருத்துவக்குழு வந்து பார்வையிட்டு இருக்கிறது. அங்கிருந்து அப்படி யாருக்காவது இந்த நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பொதுமருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வசதிகளையும் பார்வையிட்டு இருக்கிறது. சென்னையில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் எந்த ரூபத்திலும் நுழைந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு மிகக்கவனமாக இருக்கவேண்டும். மருத்துவமனைகளில் இதுபோன்ற அறிகுறிகள் இருப்பவர்களை தீவிரமாக பரிசோதனை செய்யவேண்டும். மொத்தத்தில், இந்தியாவுக்குள் கொரோனா வைரஸ் நுழைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு மிகக்கவனம் செலுத்தவேண்டும்.

Next Story