பொதுத்தேர்வுகள் இளம் பிஞ்சுகளை மிரளவைத்துவிடும்


பொதுத்தேர்வுகள் இளம் பிஞ்சுகளை மிரளவைத்துவிடும்
x
தினத்தந்தி 30 Jan 2020 12:26 AM GMT (Updated: 2020-01-30T05:56:58+05:30)

கல்வி என்பது மாணவர்களுக்கு கற்கண்டாக இனிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களுக்கு செல்வது என்பது வசந்த சோலையில் நுழைவது போன்ற உணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்

பள்ளிக்கூடங்கள், மாணவர்களை பயங்காட்டக்கூடாது. அதுவும் தொடக்கப்பள்ளியான 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் மகிழ்வுடன் படிக்கும் சூழ்நிலை ஏற்பட வேண்டும். தேர்வு என்று கூறி அவர்களை அச்சுறுத்தவோ, மிரட்டவோ கூடாது. அதனால்தான் 2009-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமை சட்டத்தில், 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்கலாம், ஆனால் தேர்வு என்று கூறி மாணவர்களை பெயிலாக்கிவிடக்கூடாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இந்த ஆண்டு முதல் அதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஒன்று, இந்த கல்வி ஆண்டு முதல் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு, 2 மாதங்களில் உடனடியாக தேர்வு நடத்த வேண்டும். அந்த தேர்விலும் மீண்டும் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்கவேண்டும். ஆனால், இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு முதலில் பொதுத்தேர்வு உண்டு என்றும், அடுத்தபடியாக பொதுத்தேர்வு கிடையாது என்றும் மாறிமாறி சொன்னதால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பொதுத்தேர்வு உண்டா?, இல்லையா? என்று கல்வித்துறை தரப்பில் உறுதியாக எதுவும் சொல்லப்படவில்லை. என்றாலும், கடைசியாக பொதுத்தேர்வு உண்டு. ஆனால், முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் அதே வகுப்பில் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள். 3 ஆண்டுகளுக்கு பிறகுதான் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மறுதேர்விலும் தோல்வி அடைந்தால், அதே வகுப்பில் படிக்க வேண்டியநிலை ஏற்பட்டுவிடும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு 5-ம் வகுப்புக்கும், 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு உண்டு என்றும், 5-ம் வகுப்புக்கு 50 ரூபாயும், 8-ம் வகுப்புக்கு 100 ரூபாயும் தேர்வு கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டது. தலைவலி போய் திருகுவலி வந்தது போல, இந்த ஆண்டு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 கி.மீட்டர் தூரத்துக்குள் உள்ள தொடக்கப்பள்ளிகளிலும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கூடங்களிலும் பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு இருந்தது.

இப்படி பொதுத்தேர்வு மையங்களில் போய்த்தான் தேர்வு எழுதவேண்டும் என்பது நிச்சயமாக தேவையற்றது என்று மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. உடனே பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அந்தந்த பள்ளிக்கூடங்களிலேயே மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதலாம் என்று சொல்லிவிட்டார். இதுமட்டுமல்லாமல் தனியார் பள்ளிக்கூடங்களைத்தவிர, மற்ற பள்ளிக்கூடங்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாறி, மாறி வித்தியாசமான அறிவிப்புகளை வெளியிட்டால், மாணவர்களுக்கு பெரிய குழப்பம் ஏற்படாதா?. எனவே, எதிர்காலத்தில் உறுதியான ஒரே முடிவை எடுக்கவேண்டும். இப்போது சரி. 3 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வில் தோல்வியுற்றவர்கள் மீண்டும் அதே வகுப்புகளில் படிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், பிஞ்சு உள்ளங்களால் தாங்கமுடியாது. நீ படித்தது போதும் என்று கிராமப்புற பெற்றோரே முடிவு செய்யவும், நான் படிக்க போகமாட்டேன் என்று மாணவர்கள் முரண்டு பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என்று மத்திய அரசாங்கத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மாற்றம் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் மாணவர்களுக்கு தேவையற்ற அச்சங்களையும், இன்னல்களையும் ஏற்படுத்தி படிப்பின் மீது ஆர்வமில்லாத நிலையை ஏற்படுத்திவிடக்கூடாது.

Next Story