பட்ஜெட்டில் என்ன வரப்போகிறது?


பட்ஜெட்டில் என்ன வரப்போகிறது?
x
தினத்தந்தி 30 Jan 2020 10:30 PM GMT (Updated: 2020-01-30T21:45:24+05:30)

நாடாளுமன்றத்தில் நாளை மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகிறார்.

நாடாளுமன்றத்தில் நாளை மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகிறார். பொதுவாக, மத்திய பட்ஜெட்டில் இந்த வரிச்சலுகை இருந்தால் நன்றாக இருக்குமே?, இந்தந்த வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டால் சிறப்பாக இருக்குமே? என்ற வகையில் மக்களின் மனதில் ஆசைகள் எதிரொலிக்கும். ஆனால், உங்களுக்கு என்ன வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்பதை ஷ்ஷ்ஷ்.னீஹ்ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளத்தில் அனுப்ப வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 

அரசாங்கம் இதை செய்யவில்லையே?, அதை அறிவிக்கவில்லையே? என்று பட்ஜெட்டுக்கு பிறகு குறைபட்டுக்கொள்வதைவிட, எங்களுக்கு இதை செய்யுங்கள் என்று அலைஅலையாய் மக்கள் இந்த இணையதளத்தில் கருத்து தெரிவித்திருந்தால், நிச்சயமாக பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும். ஆனால், 135 கோடிக்கும் மேல் மக்கள் தொகை உள்ள இந்திய திருநாட்டில், 18,915 ஆலோசனைகள், கருத்துரைகள்தான் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த மக்களின் பிரதிபலிப்பாக இதை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தால், அதில் தொழில் தொடங்கப்படவேண்டும், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டும், வேளாண்மையில் முதலீடுகள் அதிகரிக்கவேண்டும், வருமானவரியில் நிவாரணம் வேண்டும், பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் வளர்ச்சி காணவேண்டும், மின்சார வாகனங்களுக்கு நிறைய சலுகைகள் வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும், வேலைவாய்ப்புகளை அதிகமாக வாரிவழங்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நடைமுறை மூலதனத்துக்காக ஒரு தனி நிதி உருவாக்கப்பட வேண்டும், ஆன்–லைன் வர்த்தகத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும் என்பது போன்ற பல ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி.யை பொறுத்தமட்டில், இன்னும் எளிதாக்கப்பட வேண்டும். பெட்ரோலியம் போன்ற பல பொருட்களை அதன் வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும், வருமானவரி வரம்பை அதிகரிக்க வேண்டும், இன்னும் வரிச்சலுகைகள் வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு தற்போது 5 சதவீதம் வருமானவரி விதிக்கப்படுகிறது. முதல் ரூ.5 லட்சத்துக்கு வருமானவரி இல்லை என்று ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையும் விடப்பட்டுள்ளது. ஆனால், நாட்டில் 5.87 கோடி பேர்தான் வரிகட்டும் நிலையில், வருமானவரியில் மேலும் சலுகைகள் அளித்தால் நிச்சயமாக நிதி பற்றாக்குறை ஏற்படும். ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான விகிதத்தில் வரி கட்டுபவர்கள்தான் 47 சதவீதம்பேர் இருக்கிறார்கள். அதை எடுப்பது சாத்தியம் ஆகுமா? என்று பரவலாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நேரம் மக்களின் வாங்கும் சக்தியும் பெருமளவில் குறைந்துவிட்டது. எனவே, நடுத்தர மக்கள், விவசாயிகள் அதிக பொருட்களை வாங்கவேண்டுமென்றால், அவர்கள் பையில் பணம் இருக்கவேண்டும். அந்த வகையில், வரிகளை குறைத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பையில் பணம் இருக்கும். அவர்கள் அந்த பணத்தை வைத்து பல பொருட்களை வாங்குவார்கள். அதனால் வர்த்தகம் பெருகும். அப்போது அரசுக்கும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரிக்கும் என்றும் கருத்துகள் கூறப்படுகின்றன. 

2024–25–ல் பொருளாதாரம் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்ட வேண்டும் என்று பிரதமர் உறுதி அளித்த நிலையில், அதை அடைய வேண்டுமென்றால், இப்போதுள்ள 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சி போதாது. தொடர்ந்து 9 சதவீத பொருளாதார வளர்ச்சி இருக்கவேண்டும் என்ற பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, பொருளாதார வளர்ச்சி நீடித்த நிலையான 9 சதவீதத்தை அடையவும் அரசு திட்டங்களை தீட்டி ஆகவேண்டும். இப்படி எல்லா கணக்குகளையும் கூட்டிப்பார்த்து, நிர்மலா சீதாராமன் எப்படி பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்யப்போகிறார்? என்பதைத்தான் நாடே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது.

Next Story