தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் மணம்


தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் மணம்
x
தினத்தந்தி 31 Jan 2020 4:14 PM GMT (Updated: 2020-01-31T21:46:00+05:30)

தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதில் ஒன்று தஞ்சை பெரிய கோவில்.

மிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதில் ஒன்று தஞ்சை பெரிய கோவில். முதலாம் ராஜராஜ சோழன் கி.பி.1010–ம் ஆண்டில் கட்டிமுடித்த இந்த கோவிலின் கட்டிடக்கலை இன்றும் பார்ப்பவர்களை வியக்கவைக்கிறது. கடைக்கால் தொடங்கி விமானம் சிகரம்வரை முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டவை. 5 நிலைகளுடன் 110 அடி உயரம் கொண்டது இந்த கோவிலின் கோபுரம். ஒவ்வொரு நாளும் இந்த திருக்கோவிலில் பண்ணிசையோடு தேவாரம் பாடுவதற்கென 48 பிடார்களும், 2 இசைக்கருவிகள் வாசிப்பவர்களும் மன்னர் காலத்திலேயே நியமிக்கப்பட்டது இந்த கோவிலில் உள்ள கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. ஆக, பண்டையக்காலத்திலேயே இந்த கோவிலில் தேவார பாடல்கள் பாடப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில், வருகிற 5–ந்தேதி இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகம் தமிழில்தான் நடத்தவேண்டும் என்று சில வழக்குகளும், சமஸ் கிருதத்தில்தான் நடத்தவேண்டும் என்று ஒரு வழக்கும் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் தொடரப் பட்டிருந்தது. என்ன தீர்ப்பு வழங்கப்படுமோ? என பெரிய எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, இப்போது நல்ல தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் தஞ்சை பெரிய கோவில் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆகம விதிகளை பின்பற்றியும், காலம் காலமாக அந்தந்த கோவில்களில் நடைமுறையில் இருந்துவரும் பழக்க வழக்கங்களின் படியும் பூஜைகள், அர்ச்சனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தஞ்சை பெரிய கோவிலில் 1980, 1997 ஆகிய ஆண்டு களில் கும்பாபிஷேகம் நடந்தபோது என்னென்ன நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவோ அவற்றை யெல்லாம் பின்பற்றி, ஆகம விதிப்படி தமிழ், சமஸ்கிருதத்தில் பிப்ரவரி 5–ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும். பிப்ரவரி 1–ந்தேதி முதல் 5–ந்தேதிவரை நடைபெற இருக்கும் யாக சாலை பூஜையிலும், 5–ந்தேதி நடைபெற இருக்கும் மகா அபிஷேகத்திலும் பன்னிரு திருமுறை, அபிராமி அந்தாதி, திருப்புகழ் ஆகிய திருமுறை பாராயணம் தமிழில் பாடப்படும். இதற்காக பெரிய கோவில் ஓதுவார்களோடு இணைந்து குடமுழுக்கை நடத்த 80–க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் அழைக்கப் பட்டுள்ளனர். தமிழ், சமஸ்கிருதம் இருமொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுமட்டுமல்லாமல், யாக சாலை, நந்தி மண்டபம், நடராஜர் அலங்கார மண்டபம், கருவறை மற்றும் கோபுர கலசங்கள் ஆகிய நிலைகளிலும் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று நீதிமன்றத்தில் அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், தஞ்சாவூர் கோவில் கும்பாபிஷேகத்தில் சமஸ்கிருதத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. அரசியல் அமைப்பை மீறினால் மட்டுமே மதவழிபாடு வி‌ஷயங்களில் கோர்ட்டு தலையிட முடியும். இங்கு அதுபோல எந்த விதிமீறல்களும் இல்லை. எனவே, இந்த வி‌ஷயத்தில் கோர்ட்டு தலையிடத்தேவையில்லை. கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் நடத்தப்பட உள்ளதையும், கடந்த காலங்களைப்போல ஆகம விதிகள் பின்பற்றப்படும் என்பதையும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கும்பாபிஷேகத்தை நடத்தலாம் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு, தமிழ் நெஞ்சங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தீர்ப்பாகும். தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் மணம் வீசுவதுபோல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் மணம் வீசவேண்டும். அதேநேரத்தில் காலம்காலமாக பின்பற்றப்பட்டுவரும் மரபுகளும் மாற்றப்படக்கூடாது. நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் இந்த வழக்கை அலசி ஆராய்ந்து, இருதரப்பு வாதங்களையும் நீதித்தராசின் இருதட்டுகளிலும் வைத்து அளித்துள்ள தீர்ப்பு நிச்சயமாக சிறப்புக்குரியதாகும். 

Next Story