சமநிலை பட்ஜெட்


சமநிலை பட்ஜெட்
x
தினத்தந்தி 2 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-02T17:50:30+05:30)

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2–வது பட்ஜெட் இது. 2 மணி நேரம் 42 நிமிடம் உரையாற்றி சாதனை புரிந்துள்ளார்.

2–வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற மத்திய பா.ஜ.க. அரசாங்கத்தின் 2–வது பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்யும் 2–வது பட்ஜெட் இது. 2 மணி நேரம் 42 நிமிடம் உரையாற்றி சாதனை புரிந்துள்ளார். பட்ஜெட்டின் தொடக்கத்திலேயே, ‘‘நாட்டின் வருமானத்தையும், மக்களின் வாங்கும் சக்தியையும் அதிகரிக்கும் நோக்கத்தோடு, மக்களுக்காக சேவை செய்ய உறுதிபூண்டிருக்கிறோம்’’ என்று அவர் தெரிவித்தவுடனேயே சற்று நம்பிக்கை பிறந்தது.

இந்த பட்ஜெட் இந்தியாவின் விருப்பம், பொருளாதார மேம்பாடு, பாதுகாக்கப்படும் சமுதாயம் என்ற 3 அடிப்படைகளை முன்னிலைப்படுத்துகிறது என்று தொடங்கினார். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆத்திசூடியில் அவ்வை பிராட்டியார், ‘‘பூமி திருத்தி உண்’’ என்று கூறிய பாடலை தெரிவித்து, 2022–ம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று உறுதி அளித்தார். வேளாண்துறையை பொறுத்தமட்டில், 16 செயல்திட்டங்களை வகுத்து அறிவித்தார். ஒவ்வொரு செயல்திட்டமும் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் அமைந்துள்ளது. விவசாய கடன்களுக்காக ரூ.15 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.

விரைவில் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்று அறிவித்தது மிகவும் வரவேற்புக்குரியது. சென்னை–பெங்களூரு விரைவு வழிச்சாலை 2023–ல் செயலுக்கு வரும் என்ற நல்ல செய்தியை தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.11 லட்சம் கோடி செலவழிக்கப்படும் என்று அறிவித்திருப்பது நல்ல பணப்புழக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மையத்தில் அருங்காட்சியகம் அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். நீர்ப்பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டம் என்ற அறிவிப்பில் தமிழ்நாட்டில் உள்ள அதிக மாவட்டங்கள் இணைக்கப்பட தமிழக அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் முயற்சிக்க வேண்டும். திருவள்ளுவர் கூறிய, ‘‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து’’ என்ற திருக்குறள்படி, நரேந்திரமோடி நல்லாட்சி நடத்துவதாக குறிப்பிட்டார். நடுத்தர மக்கள் வருமானவரி சலுகையை எதிர்பார்த்தனர். அவர்களை இந்த பட்ஜெட் ஏமாற்றிவிடவில்லை. ரூ.5 லட்சம் வரை வருமானவரி இல்லை என்று அறிவித்துவிட்டு, அதன்பிறகு 4 அடுக்குகளில் இருந்த வரிவிதிப்பை 7 அடுக்குகளாக மாற்றியுள்ளார். இதில், ஆண்டுக்கு ரூ.15 லட்சம்வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமானவரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 120 விலக்குகள், கழிவுகள் இருந்தநிலையில், 70 விலக்குகள், கழிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. இது சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதாக இருக்காது. குறிப்பாக வருமானவரி கட்டுபவர்களுக்காக வருமானவரி பிரகடனம் விரைவில் சட்டபூர்வமாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது, வரி கட்டுபவர்களை கவுரவப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

என்றாலும், புதிய வரிவிதிப்பு முறை கட்டாயமல்ல. விரும்புகிறவர்கள் இந்த முறையில் கட்டலாம். விரும்பாதவர்கள் பழைய முறையிலும் வரி கட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் நுகர்வு, முதலீடுகளை ஊக்குவித்தல், வேலைவாய்ப்புகளுக்கான பெரிய திட்டங்கள் இல்லை என்று குறை கூறப்படுகிறது. பங்குச்சந்தையில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதநிலையில், முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்த காரணத்தால், பட்ஜெட் தாக்கல் செய்து ஒருசில நிமிடங்களில் சென்செக்ஸ் 988 புள்ளிகள் சரிந்தது. நாட்டில் நிலவும் இப்போதுள்ள கடுமையான சூழ்நிலையை வென்றெடுக்கும் பட்ஜெட்டாக இல்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது. கடந்த பட்ஜெட்டின்போது நிதி பற்றாக்குறை 3.3 சதவீதம் இருக்கும் என்று அறிவித்ததற்கு மாறாக, 3.8 சதவீதமாக இருக்கும் என்றும், இந்த ஆண்டு வருவாய் ரூ.22.46 லட்சம் கோடியாகவும், செலவு 30.42 லட்சம் கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை 7.96 லட்சம் கோடியாகவும் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஒரு சாராருக்கு மனநிறைவும், மற்றொரு சாராருக்கு ஏமாற்றமும் கலந்த சமநிலையான பட்ஜெட் இது.

Next Story