உற்பத்தி மையமாகட்டும் தமிழ்நாடு


உற்பத்தி மையமாகட்டும் தமிழ்நாடு
x
தினத்தந்தி 4 Feb 2020 11:00 PM GMT (Updated: 2020-02-04T19:50:01+05:30)

தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால், தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்க வேண்டும்.

தொழில் வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டுமென்றால், ஏராளமான தொழிற்சாலைகள், புதிது புதிதாக தொடங்கப்பட்டு தமிழ்நாடு உலக அளவில் உற்பத்தி மையமாக மாறவேண்டும். அப்போது உற்பத்தி அதிகமாகும்.

அதேநேரத்தில் வேலைவாய்ப்பு பெருகும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இப்படி சங்கிலித்தொடர்போல பல வளர்ச்சிகள் அடுத்தடுத்து ஏற்படும். அந்தவகையில், தமிழ்நாட்டை ஒரு உற்பத்தி மையமாக்கும் முயற்சியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மிகத்தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட முதலீடுகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியத்துவமான முதலீட்டு திட்டம் என்னவென்றால், இதுவரையில் சென்னையைச் சுற்றியே புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு கொண்டிருந்த நிலையில், இப்போது தூத்துக்குடியில் ரூ.49 ஆயிரம் கோடி முதலீட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பி.எஸ்.–6 பெட்ரோலிய பொருட்களை தயாரிக்கும் ஒரு நவீன பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி தொழிற்சாலையை குவைத் நாட்டை சேர்ந்த அல் கராபி என்ற நிறுவனம் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் நல்ல வளர்ச்சி ஏற்படுவதோடு மட்டு மல்லாமல், 7 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பும் கிடைக்கும். மறைமுக வேலைவாய்ப்புகளும் நிறைய உருவாகும். 

தூத்துக்குடியில் தொடங்கும் இந்த தொழிற்சாலை மூலம் சிங்கப்பூர் நாட்டின் ஜுராங்க் தீவு, குஜராத்தில் உள்ள ஜாம் நகர் மற்றும் தஹேஜ் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வளர்ச்சியைப்போல, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களும் சிறப்பான வளர்ச்சியை பெறும் என்று முதல்–அமைச்சர் அறிவித்துள்ளார். இதுமட்டு மல்லாமல், மேலும் சில தொழில் திட்டங்களுக்கு குறிப்பாக சீன நாட்டு நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு டிட்கோவும், டி.எல்.எப். நிறுவனமும் கூட்டாக இணைந்து சென்னை தரமணியில் அமையப்போகும் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டிலான தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களுக்கான வசதிகளுடன் கொண்ட வளாகத்திற்கு முதல்–அமைச்சர் அடிக்கல் நாட்டி உள்ளார். இதன்மூலம் 70 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். 

இதுமட்டுமல்லாமல், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் 2015–ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10–ந் தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 2019–ம் ஆண்டு ஜனவரி 23, 24–ந்தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திட்ட 98 திட்டங்களில், 70 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன என்றும், இதன் மூலம் 

ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 4 லட்சத்து 70 ஆயிரத்து 65 பேருக்கு வேலைக்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தொழில் வழிகாட்டி மையம் தெரிவித்துள்ளது. 

இதுபோல, கடந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 10.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையிலான ரூ.3 லட்சத்து 501 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவது நிச்சயமாக வரவேற்புக்குரியது. ஆனால் வெறுமனே புரிந்துணர்வு ஒப்பந்தத்தோடு நின்றுவிடாமல், அவைகளை எல்லாம் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டிய முயற்சிகளை எடுப்பதில்தான் முழுமையான வெற்றி இருக்கிறது. 

Next Story