துணை சபாநாயகர் இல்லாத மக்களவை


துணை சபாநாயகர் இல்லாத மக்களவை
x
தினத்தந்தி 5 Feb 2020 11:00 PM GMT (Updated: 2020-02-05T20:43:30+05:30)

இந்திய அரசியலமைப்பின்படி மத்தியில் நாடாளுமன்றமும், மாநிலங்களில் சட்டசபையும் இயங்க வேண்டும். நாடாளுமன்றம் மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அமைப்புகளின் அடிப்படையில் உள்ளது. நாடு முழுவதும் மக்களவைக்கு 543 தொகுதிகள் உள்ளன.

மக்களவை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி பீடத்தில் அமர்கிறது. அந்த வகையில் பா.ஜ.க. கடந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசாங்கத்தை நடத்தி வருகிறது. 

அரசியல் சட்டத்தின் 89–வது பிரிவின்படி துணை ஜனாதிபதி தன் பதவி வழியில் மாநிலங்களவை தலைவராக இருப்பார். அந்த வகையில் தற்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மாநிலங்களவை தலைவராக இருக்கிறார். துணை தலைவருக்காக நடந்த தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த ஹரிவன்ஷ் வெற்றி பெற்றுள்ளார். 

அரசியலமைப்பு சட்டத்தின் 93–வது பிரிவின்படி மக்களவை, அந்த அவையின் இரு உறுப்பினர்களை முறையே சபாநாயகராகவும், துணை சபாநாயகராகவும் எவ்வளவு விரைவில் தேர்ந்தெடுக்க முடியுமோ? அவ்வளவு விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவி காலியாகும்போது, மற்றொரு உறுப்பினரை சபாநாயகர் அல்லது துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆக, அரசியலமைப்பு சட்டத்தின்படி மக்களவையில் கண்டிப்பாக சபாநாயகர் ஒருவரும், துணை சபாநாயகர் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். 

ஆனால் கடந்த ஆண்டு மே மாதம் மக்களவை தேர்தல் முடிந்தவுடன் சபாநாயகர் தேர்தல் மட்டும் நடந்து பா.ஜ.க.வை சேர்ந்த ஓம்பிர்லா அடுத்த மாதத்தில் அதாவது ஜூன் மாதம் 18–ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் துணை சபாநாயகர் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இன்றளவும் துணை சபாநாயகர் இல்லாமல் மக்களவை நடந்துகொண்டு இருக்கிறது. மக்களவையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவரே துணை சபாநாயகராக இருப்பது மரபு. 

தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க.வைச் சேர்ந்த ஜி.லட்சுமணன் 1980–ம் ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி முதல் 1984–ம் ஆண்டு டிசம்பர் 31–ந் தேதி வரை துணை சபாநாயகராக இருந்து இருக்கிறார். அதுபோல, அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.தம்பிதுரை கடந்த முறையும், 1985 முதல் 1989 வரையும் என இருமுறை துணை சபாநாயகராக பணியாற்றி இருக்கிறார். இவ்வளவிற்கும் கடந்த முறை அ.தி.மு.க.வை விட, காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்காமல், அ.தி.மு.க.விற்குத்தான் கொடுக்கப்பட்டது. 

நடந்து முடிந்த தேர்தலிலும் பா.ஜ.க. 303 இடங்களிலும், காங்கிரஸ் 52 இடங்களிலும், தி.மு.க. 24 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 22 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 16 இடங்களிலும், பிஜு ஜனதாதளம் கட்சி 12 இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 

மொத்த இடங்களில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெறும் கட்சிதான் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறமுடியும். ஆனால் எந்த கட்சியும் 54 இடங்களில் வெற்றி பெறாததால், எதிர்க்கட்சியின் அந்தஸ்தைப் பெற்ற கட்சியே மக்களவையில் இல்லை. ஆனால் அதற்காக துணை சபாநாயகர் இல்லாமல் மக்களவை நடப்பது ஒரு முழுமையாக இல்லை. 

எனவே, கடந்த முறை அ.தி.மு.க. அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று இருக்காவிட்டாலும் துணை சபாநாயகர் பதவியை பெற்றது போல, எதிர்க்கட்சிகளில் எந்த கட்சிக்காவது அதை வழங்க வேண்டும். ஒருவேளை யாரும் அந்த பதவியை பெற முன்வராவிட்டால், பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே துணை சபாநாயகர் பதவியைக் கொடுப்பதில் தவறு இல்லை. அதற்கும் முன்னுதாரணம் இருக்கிறது. மொத்தத்தில், துணை சபாநாயகர் இல்லாத மக்களவையாக இருக்கக்கூடாது.

Next Story